Published:Updated:

``முதல்வர் ரங்கசாமியை டம்மியாக்கிவிட்டார்கள்!” - கடுகடுக்கும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

முன்னாள் முதல்வர் நாராயணசாமி
News
முன்னாள் முதல்வர் நாராயணசாமி

``தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலங்கானாவுக்குத்தான் முழுநேர கவர்னர். புதுச்சேரிக்கு அவர் துணைநிலை ஆளுநர்தான். ஆனால் அவர் எப்போதும் புதுச்சேரியிலேயே உட்கார்ந்திருக்கிறார்.” – முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து புதுச்சேரி காந்தி நகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``புதுச்சேரி மாநிலத்தில் படித்த பட்டதாரிகளுக்கு, கடந்த ஆறு மாதங்களாக என்ஆர்.காங் - பாஜக கூட்டணி அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதற்கு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களுக்குள் 10,000 பணியிடங்களை நிரப்புவோம் எனத் தேர்தல் நேரத்தில் ரங்கசாமி வாக்குறுதி அளித்தார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரும் புதுச்சேரியில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம் எனக் கூறினர். ஆனால் இதுவரை பணியிடங்களை நிரப்பவில்லை. பணியிடங்களை நிரப்ப எங்களிடம் நிதியில்லை என பா.ஜ.க அமைச்சர்கள் இப்போது கூறுகின்றனர்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி - கவர்னர் தமிழிசை
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி - கவர்னர் தமிழிசை

மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் பணியிடங்களை நிரப்ப முடியும் என முதல்வர் கூறுகிறார். இப்படிக் கூறுபவர்கள் ஏன் தேர்தல் சமயத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்தார்கள்? புதுச்சேரியில் 24% படித்த பட்டதாரிகள் வேலையின்றி இருக்கின்றனர். குறிப்பாக புதுச்சேரியில் பொறியியல் படித்துவிட்டு ஒரு வருடத்துக்கு சுமார் 1,200 பேர் வெளியே வருகிறார்கள். மருத்துவக் கல்லூரியிலிருந்து 500 பேர் வெளியே வருகிறார்கள். விவசாயம், செவிலியர், கால்நடைக் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கானோர் படித்துவிட்டுவருகின்றனர். மத்திய மோடி அரசு 2014 தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுதோறும் இரண்டு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பை கொடுப்போம் எனக் கூறியது. இப்போது ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. 14 கோடிப் பேருக்கு வேலை அளித்திருக்க வேண்டும். ஆனால் கொரோனா வந்த பிறகு 24 கோடி பேர் வேலையின்றி நாட்டில் உள்ளனர். மோடி கதையும் அதுதான், ரங்கசாமி கதையும் அதுதான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா, அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், காவல்துறை மற்றும் கூட்டுறவுத்துறையில் ஆட்களை நியமித்தோம். பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம், தொழில்முனைவோர் ஆராய்ச்சி மையம் போன்றவை நாங்கள் கட்டி முடித்தவை. இவர்கள் ஒன்றும் புதிதாகக் கட்டவில்லை. 10,000 பேருக்கு நாங்கள் ஒப்புதல் வாங்கிவைத்த பென்ஷனைத்தான் இப்போது அவர்கள் கொடுக்கிறார்கள். புதுச்சேரியைப் பொறுத்தவரை வாக்குறுதி அரசாகத்தான் இருக்கிறது. மக்கள் திட்டங்களை நிறைவேற்றும் அரசாக இல்லை. அரிசிக்காக ஒதுக்கும் பணத்ததைத்தான் ரூ.5,000/- மழை நிவாரணமாகக் கொடுத்தார் ரங்கசாமி. புதிதாக நிவாரணம், நிதி மத்திய அரசு தரவில்லை. மாநில அஸ்தஸ்து தரவில்லை. கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை. அதிகாரத்தை கவர்னரிடம் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் முதல்வர். பேரிடர் மீட்புத்துறைத் தலைவர் முதல்வர்தான். ஆனால் கொரோனா காலத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை அவர் நடத்தவில்லை.

மாறாக கவர்னர் நடத்துகிறார். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடக்கிறதா இல்லை ஜனாதிபதி ஆட்சி நடக்கிறதா? கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. ஆனால் அதற்கான கட்டமைப்பு இன்னமும் செய்யப்படவில்லை. மருத்துவமனைகளில் அதற்காக இடம் ஏற்படுத்தவில்லை. விழாக் கொண்டாட்டம், புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டம் என்கிறார்கள். எல்லாவற்றிலும் நிர்வாகம் ஸ்தம்பித்துப்போயிருக்கிறது. பொது இடத்தில் பெரிய விழாக்கள் கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலங்கானாவுக்குத்தான் முழுநேர கவர்னர். புதுச்சேரிக்கு அவர் துணைநிலை ஆளுநர்தான். ஆனால் அவர் எப்போதும் புதுச்சேரியிலேயே உட்கார்ந்திருக்கிறார். ஏனென்றால் இங்கு அதிகாரத்தைச் செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான். முதல்வரை டம்மியாகிவிட்டார்கள். கவர்னரை எதிர்த்து எதற்காக நாங்கள் போராடினாமோ அதை ரங்கசாமி வீணடித்துவிட்டார். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடக்கவில்லை, கவர்னரின் அரசுதான் நடக்கிறது. இது வெட்கக்கேடான விஷயம். பா.ஜ.க-வினர் சடுகுடு விளையாடுகிறார்கள். சடுகுடு விளையாடும் நேரமா இது?” என்றார் காட்டமாக.