Published:Updated:

புதுச்சேரி: `போலி பத்திரம் மூலம் நில அபகரிப்பு!’ - முன்னாள் முதல்வர் நாராயணசாமி `பகீர்’ தகவல்

முன்னாள் முதல்வர் நாராயணசாமி
முன்னாள் முதல்வர் நாராயணசாமி

``பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்தவர்களின் வீடு, மனைகளைக் கண்டுபிடித்து அதற்கு போலியாக பத்திரம் தயார் செய்து சொத்துகளை அபகரித்து கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியிருக்கிறார்கள்.’’

புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்றிரவு செய்தியாளர்களுக்கு அளித்த காணொலி பேட்டியில், ``புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி வந்த பிறகு நிலங்கள் மற்றும் வீடுகள் அபகரிப்பு அதிகரித்திருக்கிறது. போலி பத்திரங்கள் தயார் செய்து. அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளைத் தொடர்ந்து அபகரிக்கும் வேலை நடந்துவருகிறது. அரசியல்வாதிகள் ஒத்துழைப்புடன் ஒருசிலர் போலி பத்திரங்கள் தயாரிக்கும் வேலையைச் செய்திருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்தவர்களின் வீடு, மனைகளைக் கண்டுபிடித்து, அதற்கு போலியாக பத்திரம் தயார் செய்து, சொத்துகளை அபகரித்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியிருக்கிறார்கள்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

போலி கையெழுத்திட்டு 20-க்கும் மேற்பட்ட பத்திரங்களை தயாரித்துள்ளனர். இதில் அரசியல்வாதிகளுக்கு வேண்டியவர்களும் உள்ளனர். சில வியாபாரிகளும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். சில அரசியல்வாதிகளுக்கும் இது போன்ற பத்திரங்கள் தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இது சம்பந்தமான விசாரணையை காவல்துறை செய்துவருகிறது. கூட்டமாக ஒருசிலர் சேர்ந்து இந்த வேலையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் புகாரின் அடிப்படையில் 10 போலி பத்திரங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் 10 பத்திரங்கள் தயார் செய்து ரூ.50 கோடி சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளன. போலி பத்திரங்கள், முத்திரைகள் தயாரித்தவர்கள், போலி கையெழுத்து போட்டவர்கள், பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் நபர்களின் விவரங்கள் எங்களிடம் உள்ளன.

`பலகோடி ரூபாய் வீட்டுமனை; போலி பிரமாண பத்திரம்!' - சிக்கலில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ

இதில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரமும் எங்களுக்கு வந்திருக்கிறது. புதுவையில் பல கொலைகளைச் செய்துவிட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய நில அபகரிப்பு ஊழல். இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றுவதன் மூலம்தான் உண்மையைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முடியும். இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், வழக்கை சி.பி.ஐ எடுத்து நடத்தக் கோரி நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுவேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு