Election bannerElection banner
Published:Updated:

`நாற்காலிக்காகச் சென்றவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்!’ - நமச்சிவாயத்தை விளாசும் நாராயணசாமி

முன்னாள் முதல்வர் நாராயணசாமி
முன்னாள் முதல்வர் நாராயணசாமி

``நியமன உறுப்பினர்களைக்கொண்டு ஆட்சியைக் கவிழ்த்த சரித்திரம் எந்த நாட்டிலும் கிடையாது. ஆனால், அப்படியான ஓர் அராஜகச் செயலையும், சர்வாதிகாரச் செயலையும் மத்தியிலுள்ள மோடி அரசு செய்திருக்கிறது” - முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்த நமச்சிவாயம், முதல்வர் பதவிக்காக அக்கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்தார். அவரையடுத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் அடுத்தடுத்து பா.ஜ.க-வில் இணைந்ததையடுத்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இந்தச்சூழலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ வைத்தியநாதன் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``என்.ஆர்.காங்கிரஸ் மதவாதச் சக்திகளோடு இணைந்துள்ளது. மதவாத சக்தியாக உள்ள பா.ஜ.க-வை மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

தள்ளாட்டத்தில் புதுச்சேரி அரசியல்
தள்ளாட்டத்தில் புதுச்சேரி அரசியல்

பல கட்சிகளிலிருந்து நிறைய பேர் விலகி காங்கிரஸ் கட்சியை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், புதுவையில் வேரூன்றாத, டெபாசிட்டை இழந்த பா.ஜ.க., நியமன எம்.எல்.ஏ-க்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையைச் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் அனைத்துப் பதவி, சுகங்களையும் அனுபவித்ததுடன், காங்கிரஸின் முதுகில் குத்திவிட்டு அந்த துரோகிகள் பா.ஜ.க-வில் சேர்ந்து எங்களுடைய ஆ்டசியைக் கவிழ்த்திருக்கிறார்கள். அதன் பலனை இப்போது அவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிற்பதற்குக்கூட தொகுதிகள் கிடைக்காமல், அலைந்துகொண்டிருக்கிறார்கள். முதல்வர் நாற்காலிக்காகச் சென்றவர்கள் இப்போது நடுத்தெருவில் நிற்கிறார்கள். இதுதான் பா.ஜ.க-வின் சரித்திரம்.

இதைப் புதுவை மக்கள் நன்றாக உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கு நூறு சதவிகிதம் மக்கள் பா.ஜ.க-வை வெறுக்கிறார்கள். பல பகுதிகளுக்குச் செல்லும்போதும், சமூக வலைதளங்களில் பார்க்கும்போதும் பா.ஜ.க-வை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. புதுவையைப் பொறுத்தவரை மக்கள் அனைத்து மதங்களையும் மதிக்கிறவர்கள். ஆனால், மதவாத சக்திகள் மாநிலத்தில் நுழைந்து மக்களின் ஒற்றுமையைக் குலைக்கக் கூடாது என்று நாங்கள் ஒருங்கிணைந்து செல்படுகிறோம். அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். புதுச்சேரியின் தனித்தன்மையைக் காப்பதற்கும், புதுச்சேரி மாநிலம் தனி மாநில அந்தஸ்து பெறுவதற்கும் இணைந்து பாடுபடுவோம்.

பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் நமச்சிவாயம
பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் நமச்சிவாயம

வருகிற தேர்தலில் கண்டிப்பாக பா.ஜ.க-வுடன் சேர்ந்துள்ள என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க-வைப் புறக்கணித்து காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி ஆட்சி அமைவதற்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்திலும் புதுவையிலும் தி.மு.க – காங்கிரஸ் அலை வீசுகிறது. புதுவை மக்கள் மதவாத சக்திகளைப் புறக்கணிப்பார்கள் என்பதில் எங்களுக்கு எவ்வித ஐயப்பாடும் இல்லை.

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் இந்தமுறை குறைவான இடத்தைப் பெற்றிருப்பதாகக் கூறியிருக்கின்றனர். அதைக் கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம். 30 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதன்மீது பரிசீலனை செய்து நேர்காணலும் நடைபெற்றுள்ளது. தொகுதி வரையறை மற்றும் வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் தேர்தல்குழு முடிவு செய்யும். புதுவையில் பா.ஜ.க புல் பூண்டு இல்லாத கட்சி. மற்ற கட்சியில் உள்ளவர்களை இழுக்கிறார்களே தவிர, அவர்களுக்கு எந்தவிதமான பலமும் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் இருந்த அமைச்சர்களையும், எம்.எல்.ஏ-க்களையும் மிரட்டி வெளியே கொண்டுவந்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தார்கள்.

புதுச்சேரி: `பதவியும் இல்லை; தொகுதியும் இல்லை!’ - பா.ஜ.க-வுக்குத் தாவிய நமச்சிவாயம் அப்செட்

அதற்கு உறுதுணையாக என்.ஆர்.காங்கிரஸும், அ.தி.மு.கவும் இருந்தன. நியமன உறுப்பினர்களைக்கொண்டு ஆட்சியைக் கவிழ்த்த சரித்திரம் எந்த நாட்டிலும் கிடையாது. ஆனால் அப்படியான ஓர் அராஜகச் செயலையும், சர்வாதிகாரச் செயலையும் மத்தியிலுள்ள மோடி அரசு செய்திருக்கிறது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இணைந்து, புதுவையில் ஸ்திரத்தன்மையோடு இருந்த அரசியலைக் குலைத்து மக்களுக்குத் துன்பத்தை விளைவிக்கிறார்கள். அதன் விளைவுகளை வருகிற தேர்தலில் சந்திப்பார்கள்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு