Published:Updated:

புதுச்சேரி: `பதவிக்காகப் பேரம்; நாற்காலிக்காகச் சண்டை!’ - கடுகடுக்கும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

முன்னாள் முதல்வர் நாராயணசாமி
முன்னாள் முதல்வர் நாராயணசாமி

”அரசு அமைந்து 45 நாள்கள் ஆகியும், அமைச்சரவை அமைக்கப்படவில்லை. பதவிக்காகப் பேரம் பேசி, காலத்தைக் கடத்துகிறார்கள். அப்பாவி மக்கள் கொரோனாவில் அதிக அளவில் உயிரிழந்ததுதான் இந்த அரசின் சாதனை” - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரியில் நேற்று இரவு முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``பெட்ரோல், டீசல் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. மத்திய அரசு கலால்வரியை உயர்த்தியதுதான் அதற்குக் காரணம். ஆனால் அவர்கள் மாநில அரசுகளின் மேல் பழிபோடுகிறார்கள். கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால், அண்டை நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக விற்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஏழைகள் வயிற்றில் அடித்து விலை உயர்த்தப்படுகிறது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

அதனால் கலால்வரியை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். புதுச்சேரியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். புதிய அரசு அமைந்து 45 நாள்கள் ஆகியும் அமைச்சரவை அமைக்கப்படவில்லை. பதவிக்காகப் பேரம் பேசி காலத்தைக் கடத்துகிறார்கள். மக்களைக் கைவிட்டுவிட்டார்கள். அப்பாவி மக்கள் கொரோனாவில் அதிக அளவில் உயிரிழந்ததுதான் இந்த அரசின் சாதனை. மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் நாற்காலிக்காகச் சண்டை போடுகிறார்கள். தேர்தலின்போது `புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்ப்போம், மில்களை மீண்டும் இயக்குவோம்’ என பா.ஜ.க பல வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது. அவற்றையெல்லாம் தற்போது நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு