Published:Updated:

`31-ம் தேதி வரை ஊரடங்கு; காரணமின்றி வீட்டைவிட்டு வெளியேறினால் நடவடிக்கை!’- புதுச்சேரி கொரோனா அப்டேட்

கொரோனா
கொரோனா

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டு மக்கள் அனைவரும் நேற்று ஒரு நாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். அவரின் வேண்டுகோளின்படி நேற்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றினர். புதுச்சேரியிலும் அனைத்து மக்களும் வீட்டைவிட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்தனர்.

koronavirus
koronavirus

நேற்று தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``வரும் 31-ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளின்றி, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

31-ம் தேதி வரை அண்டை மாநில வாகனங்கள் புதுச்சேரிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்படும். வெளிமாநிலப் பேருந்துகள் நிறுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்கள் தடையில்லாமல் கிடைக்கும். அதேசமயம் வரும் 31-ம் தேதி வரை அரசின் கட்டுப்பாட்டுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும்” என்றும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நேற்றிலிருந்து புதுச்சேரியின் அனைத்து எல்லைப் பகுதிகளும் சீல் வைக்கப்பட்டு, கடும் சோதனைகளுக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதையடுத்து, நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. ஆனாலும், இன்று காலையில் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, ``புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று 9 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி
அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் புதுச்சேரி மக்கள் அலட்சியமாக இருக்கின்றனர். கொரோனாவுக்கு தனிமைப்படுத்துவதைவிட வேறு மருந்து கிடையாது. அதனால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வருகின்ற 31-ம் தேதிவரை பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வீட்டிலிருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

இதுவரை புதுச்சேரியில் 6,000-த்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து 300 ஹோட்டல்களில் தங்கிச் சென்றிருக்கின்றனர். விடுதிகளில் பணிபுரிந்த 515 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31-ம் தேதி வரை தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்களில் சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் வாங்க மட்டும் அனுமதி.

முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

ஸ்விக்கி, ஜொமோட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை தடை. சரியான காரணமின்றி வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். வரும் 31-ம் தேதிவரை திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இறுதிச் சடங்குகளை 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டும். பால், காய்கறிகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், மளிகைக் கடைகள் மட்டும் திறந்திருக்கும். இருசக்கர வாகனங்களில் வெளியே செல்பவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தும்” என்று அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு