Published:Updated:

புதுச்சேரி: `பெரும்பான்மையை நிரூபியுங்கள்!’ -முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் உத்தரவு

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டிருக்கிறார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடர்ச்சியாக நான்கு எம்.எல்-ஏக்கள் வெளியேறிய நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளின் பலம் 14-14 என்ற விகிதத்தில் சமமான நிலை ஏற்பட்டது. அதையடுத்து பிப்ரவரி 15-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திலுள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி தலைமயில் கூடிய கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, ``காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். போதிய எம்.எல்.ஏ-க்களின் பலம் இல்லாததால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. அதனால் காங்கிரஸ் அரசு தானாக முன்வந்து பதவி விலக வேண்டும். இதற்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் நாராயணசாமியும் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இந்த அரசும் பதவி விலக வேண்டும். இந்த அரசு பதவி விலகாவிட்டால் எதிர்க்கட்சியினர் விவாதித்து முடிவெடுப்போம். ஒரு நிமிடம்கூட இந்த அரசு நீடிக்க முடியாது” என்று கூறியதுடன், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் செயலரிடம் மனு அளித்தனர்.

ஆனால், ``நாங்கள் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார் முதல்வர் நாராயணசாமி. இதற்கிடையில் புதுச்சேரியின் ஆளுநராக இருந்த கிரண் பேடியை திரும்பப் பெற்ற மத்திய அரசு, அவருக்கு பதில் தெலங்கானாவின் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜனை பொறுப்பு ஆளுநராக நியமித்தது. பிப்ரவரி 17-ம் தேதி புதுச்சேரிக்கு வந்த தமிழிசை, ஆளுநராகப் பதவியேற்றார். அதையடுத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பி.ஜே.பி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தமிழிசையிடம் மனு அளித்தனர்.

புதுச்சேரி: `மக்களைத் தவறாக வழிநடத்துவதை முதல்வர் தவிர்க்க வேண்டும்!' - ஆளுநர் கிரண் பேடி

அதையடுத்து பிப்ரவரி 22-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், அன்றய தினம் மாலை 5 மணிக்குள் அதற்கான வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டிருக்கிறார் தமிழிசை. மேலும், சட்டப்பேரவை வளாகத்தில் நடக்கும் அந்த வாக்குப்பதிவை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு