Published:Updated:

`புதுச்சேரி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள்..!’ - தமிழில் கவர்னர் உரை ஆற்றிய தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி துணைநிலை கவர்னர்  தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்

``புதுச்சேரியிலுள்ள 55 அரசுத்துறைகளில் இதுவரையில் 24 துறைகளின் வலைதளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 31 துறைகளுக்கும் விரைவில் வலைதளங்கள் சீரமைக்கப்படும். புதுச்சேரி முழுக்க குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.”

புதுச்சேரியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான ரங்கசாமி 2020-2021 ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை இன்று மாலை 4:30 மணிக்கு பேரவையில் தாக்கல் செய்யவிருக்கிறார். இன்று காலை 9:30 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தைத் தனது உரையுடன் தொடங்கிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், 57 பக்கங்களையும் தமிழில் வாசித்தார்.

அவரின் உரையில், ``சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் தேர்வாகியிருக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துகள். 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் தொடக்க உரையாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கும், சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கும் ஒவ்வொருவரும் கடினமாகப் பாடுபடுவீர்கள் என்று நம்புகிறேன். சட்டப்பேரவைத் தேர்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடத்தப்பட்டது மகிழ்ச்சி. முதல்வர் ரங்கசாமி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மீண்டும் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்ததன் மூலம், இதற்கு முன்னர் அவரின் தலைமையின் கீழ் இயங்கிய அரசு செயல்படுத்திய நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைந்தது நிருபணமாகியுள்ளது. புதிய அரசு வளர்ச்சி, வளம், மாநிலத்தின் அமைதி ஆகியவற்றில் சிறந்து விளங்க பாடுபடும் என்று நம்புகிறேன். கொரோனா பரவலைத் துரிதமாக அரசு கட்டுப்படுத்தியிருக்கிறது” என்றார்.

தொடர்ந்து, ``2020-21-ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கான ரூ.9,000 கோடியில் ரூ.8,419 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. வருவாய் இலக்கில் இது 94%. 2020-21 நிதியாண்டுக்கான மொத்த ஒதுக்கீடான ரூ.9,000 கோடியில் ரூ.8,342 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 93%. கொரோனா தொற்றுப் பரவல் சூழலிலும் கணிசமான வருவாய் கிடைத்திருக்கிறது. புதுச்சேரி நிதி ஆதாரங்கள் ஒரு குறிப்பிட்ட அளவே உள்ளன. குறிப்பாக சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அறிமுகப்படுத்திய பிறகு இவை ஒரு சவாலாகவே உள்ளன. தவிர்க்க முடியாத செலவினங்களை, கிடைக்கும் வருவாய்க்குத் தகுந்தவாறு சீர் செய்துகொள்ளவேண்டிய நிலையில் அரசு உள்ளது. மக்களின் விருப்பங்களை கருத்தில்கொண்டு சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வருவாயைப் பெருக்கி, அவற்றுக்கு நேரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கி ஒரு சிறந்த பட்ஜெட்டை முதல்வர் சமர்ப்பிப்பார் என்று நம்புகிறேன்.

புதுச்சேரி: `ரூ.10,100 கோடி; தமிழில் கவர்னர் உரை!’ – தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பட்ஜெட்

புதுச்சேரியில் தேவையான அளவு மின்சாரம் இருப்பதால் தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் தரப்படுகிறது. மின் பகிர்மான கட்டமைப்பை மேம்படுத்த ரூ.58.27 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கோவிட் மருத்துவமனையானதால் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை நூறிலிருந்து 235-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 200 ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் மற்றும் கட்டுப்பாட்டில் வராத 42 திருக்கோயில்களைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.2.61 கோடி கொடையாகத் தரப்பட்டிருக்கிறது. புதுச்சேரியிலுள்ள 55 அரசுத்துறைகளில் இதுவரையில் 24 துறைகளின் வலைதளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 31 துறைகளுக்கும் விரைவில் வலைதளங்கள் சீரமைக்கப்படும். புதுச்சேரி முழுக்க குற்றங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்படவிருக்கின்றன.

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்

காவல்துறையை பலப்படுத்த புதிய காவலர்களைத் தேர்வு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.33 கோடியில் 7.3 லட்சம் கனமீட்டர் மணலைத் தூர்வாரும் திட்டத்தில் புதுச்சேரி துறைமுக முகத்துவாரம், உள்கால்வாய் பகுதிகளில் மணலைத் தூர்வார பணி ஆணை தரப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து கொரோனா நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு துறைகளுக்கு ரூ.12 கோடி தரப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் 110 கிலோமீட்டருக்கு சாலைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் தந்திருக்கிறது. இதற்கான நிதியைப் பெற மாவட்ட ஊரக மேம்பாட்டு அமைப்பு ரூ. 48.8 கோடிக்கு மாவட்ட ஊரக சாலைத் திட்டத்தை தயார்செய்து மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது. காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கு புதிய வளாகம் ஒன்றை நிறுவ காரைக்காலில் 25 ஏக்கர் பரப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசு, அரசு சார்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதர கட்டணங்களான நூலகக் கட்டணம், விளையாட்டு நாள் கட்டணம், பருவ இதழ் கட்டணம், கல்லூரி நாள் கட்டணம், ஆய்வகக் கட்டணம் ஏழை மாணவர்களுக்கு தள்ளுபடி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்க வம்பாகீரபாளையம், வீராம்பட்டினம், புதுக்குப்பம் பகுதிகளில் மேம்பாடு செய்யப்பட்டுள்ள கடற்கரை சுற்றுலாத் திட்டங்களின் பராமரிப்பு மற்றும் இயக்கம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: `ரூ.10,100 கோடி; தமிழில் கவர்னர் உரை!’ – தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பட்ஜெட்

மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் புதிய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். முதல்வர் வழிகாட்டுதலின்படி மக்களின் எதிர்பார்ப்புகளை மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்ற கடுமையாகப் பாடுபடுவீர்கள் என நம்புகிறேன். எதிர்வரும் காலங்களில் வறுமை, வேலையின்மை இல்லாத வளமைமிக்க பிரதேசமாக புதுச்சேரியை உருவாக்குவீர்கள். புதுச்சேரி விரைவில் கொரோனா பரவலிலிருந்து விடுபடும் என்று நம்புகிறேன். நோயின்மை, செல்வம், விளைவு, மகிழ்ச்சி, காவல் என்ற ஐந்தையும் பெறுவது மாநிலத்துக்கு அழகு. புதிய உச்சத்தை அடைய மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு