Published:Updated:

புதுச்சேரி: `தடுப்புகள் இனி இருக்காது; என் பாணியே தனி!’ - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

``மக்கள் கொரோனா தடுப்பூசியைப் போட தயங்குவதாகக் கேள்விப்பட்டேன். 25 நாடுகள் நம் நாட்டுத் தடுப்பூசியை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில், நாம் நம் நாட்டுத் தயாரிப்பை உதாசீனப்படுத்துவது தவறு” - துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி விடுவிக்கப்பட்டு, தெலங்கானாவின் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜனுக்கு அந்தப் பொறுப்பு கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி நேற்று மாலை புதுச்சேரிக்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் மாளிகையில் தங்கினார். இன்று காலை அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தமிழில் உறுதிமொழி வாசித்து தமிழிசை பதவியேற்றார். புதுச்சேரியின் 31-வது ஆளுநராகப் பொறுப்பேற்றவர், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டார். தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி மற்றும் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜன்

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ``புதுச்சேரிக்கு ஆளுநராக மட்டுமல்ல... மக்களுக்குத் துணைபுரியும் ஒரு சகோதரியாக வந்திருக்கிறேன். இறைவன் அருளாளும், மத்தியில் ஆண்டுகொண்டிருப்பவர்களின் ஆசீர்வாதத்தாலும், என்னை ஈன்றெடுத்த பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், தமிழக புதுவை மக்களின் ஆசீர்வாதத்தாலும், தெலங்கானா மக்களின் அன்பாலும் இங்கு வந்திருக்கிறேன். நான் இன்று காலை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றேன், ஏனெனில் தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. இங்கிருக்கும் அதிகாரிகளிடம் நான் இது குறித்துக் கூறியபோது, இதுவரை வந்த ஆளுநரும் தமிழில் உறுதிமொழி எடுத்ததில்லை என்றார்கள்.

புதுவை மக்களுக்கு உதவி செய்வதற்காக நான் வந்திருக்கிறேன், புதுவைக்கு வந்திருக்கும் நான், புதுமையாகச் செயல்பட வேண்டும். தெலங்கானாவுக்கு நான் கவர்னராகச் சென்றபோது ஓர் இளையவரான இவர் எப்படிக் கையாள்வார் எனக் கேட்டார்கள். அவர்களிடம் குழந்தை மருத்துவரான நான் புதிதாகப் பிறந்த தெலங்கானவைச் சரியாகப் பாதுகாப்பேன் என்றேன். அதுபோல ஒன்றரை ஆண்டுகளாக நன்றாகப் பார்த்துக்கொண்டேன். நேற்றிரவே அதிக நேரம் அமர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தேன். நம் நாட்டிலேயே தயாரித்த தடுப்பூசியை நாம் கொடுத்திருக்கிறோம். இதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், மக்கள் தடுப்பூசியைப் போடத் தயங்குவதாகக் கேள்விப்பட்டேன். 25 நாடுகள் நம் நாட்டு தடுப்பூசியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நேரத்தில், நாம் நம் நாட்டு தயாரிப்பை உதாசீனப்படுத்துவது தவறு. முதல் வேலையாக தடுப்பூசி போடும் இடத்துக்குச் சென்று ஊக்கப்படுத்தவிருக்கிறேன்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

இன்னும் பல நாடுகளில் கொரோனா தீவிரமாக இருக்கிறது. எனவே, அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். நான் முதலில் கையெழுத்து போடுவது சாமானிய மக்களுக்கான கையெழுத்தாக இருக்க வேண்டும் என எண்ணினேன். அதனால்தான் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு உதவித்தொகை வழங்கும் கையெழுத்தை முதலில் போட்டேன். அடுத்து எய்ட்ஸ் கன்ட்ரோல் உதவித்தொகை வழங்கும் கையெழுத்தாக இருந்தது. இந்தக் கையெழுத்து நிச்சயமாக புதுவை மக்களின் தலையெழுத்தை மாற்றும் என நான் நம்புகிறேன். புதுவையில் வேலையின்மை அதிகமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நிலம் அதிகமாக இருப்பதால் பல தொழிற்சாலைகளை உருவாக்கி, சுற்றுலாத்துறைக்கு ஊக்கம் அளித்து, அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்பபு வழங்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆளுநரான எனக்கு ஆளுநர், துணை நிலை ஆளநர், முதல்வர் ஆகியோரின் அதிகாரம் என்னவென்று தெரியும். மக்களுக்கான ஆளுநராக நான் இருப்பேன் என நான் தெரிவித்துக்கொள்கிறேன். முன்னாள் கவர்னருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் பல தலைவர்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் அனைவருக்கும் சமமானவள்.

தமிழிசை - கிரண் பேடி
தமிழிசை - கிரண் பேடி

யார் என்னைப் பார்க்க வேண்டுமானாலும் நான் நேரம் ஒதுக்குவேன். அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நான் செயல்படுவேன். ரேஷன் கடைகள் இல்லை என்று கூறுகிறீர்கள். இங்குள்ள மக்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என நான் கேட்டேன், இங்கிருப்பவர்கள் வசதியாக வாழ்வதாகப் பலர் நினைக்கிறார்கள். இங்கும் பல பாமர மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் பசியோடு வாடாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் நான் எடுப்பேன்.

மக்களுக்கான நல்ல முடிவை நான் எடுப்பேன். தடுப்புகள் இனி இருக்காது. மக்களுக்கும் எனக்கும் இடைவெளி இருக்கக் கூடாது என நினைப்பவள் நான். கொரோனா அதிகமாக இருக்கும் நேரத்தில்கூட மருத்துவமனைக்குச் சென்றவள் நான். தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. தமிழ் புறக்கணிக்கப்படுவதில்லை. தமிழ் ஆராதிக்கப்படும், தமிழிசை ஆளுநராக இருக்கும்போது தமிழ் மகுடம் சூடும்.

`தமிழ்நாட்டில் வாக்கிங் இல்லை ஒன்லி டாக்கிங்தான்!’- மனம்திறக்கும் ஆளுநர் தமிழிசை #VikatanExclusive

மக்களுக்கான கோரிக்கை எதுவாக இருந்தாலும் அவர்கள் சார்பாக நான் முடிவெடுப்பேன். நான் எதையும் தடுத்து பழக்கப்பட்டவள் இல்லை. மக்களுக்குக் கொடுத்துப் பழக்கப்பட்டவள். என் பாணி தனியானது எனக் கூறிவிட்டேன். சட்ட விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படுவேன். எனக்கு எந்த ஈகோவும் கிடையாது. மக்கள் பயன்படும் வகையில் செயல்படுவேன். தமிழ் பேசும் இடத்துக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. என்னை நியமித்ததில் எந்த உள்அர்த்தமும் இல்லை, அரசியலும் இல்லை. உள்ளார்த்தமாக வந்திருக்கிறேன். உள் அர்த்தத்தோடு வரவில்லை” என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு