Published:Updated:

புதுச்சேரி: கொரோனா மருத்துவமனை கழிவறையைச் சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்!

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரியில் கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு ஆய்வுக்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அங்கிருந்த நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,127 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 8,968 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதமுள்ள 4,938 பேர் ஜிப்மர் மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 221-ஐ தொட்டிருக்கிறது.

கழிவறையை சுத்தம் செய்யும் சுகாதாரத்துறை அமைச்சர்
கழிவறையை சுத்தம் செய்யும் சுகாதாரத்துறை அமைச்சர்

கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கடி ஆய்வுக்குச் செல்லும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அங்கிருக்கும் நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையின் கழிவறை மோசமான நிலையில் இருப்பதாக நோயாளி ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மறுநாளே அங்கு சென்று கழிவறையை சுத்தம் செய்ய உத்தரவிட்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அந்த நோயாளியையும் சந்தித்து புகைப்படத்தை வெளியிட்டார்.

புதுச்சேரி: தீவிரமடையும் கொரோனா... மீண்டும் ஊரடங்கு! - அரசு குறிப்பிடும் 32 பகுதிகள்

அத்துடன் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தமாகப் பராமரிக்கும்படி மருத்துவமனை நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தினார். அதையடுத்து இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்குச் செல்லும் சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வந்தார்.

`கொரோனா அச்சம்; பணிக்கு வராத மருத்துவ ஊழியர்கள்!’ -54 பேரை டிஸ்மிஸ் செய்த புதுச்சேரி கலெக்டர்

அதன்படி வழக்கம்போல நேற்று‌ ஆய்விற்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அங்கிருந்த கழிவறைகளை ஆய்வு செய்தார். அப்போது சுத்தம் செய்யப்படாத ஒரு கழிவறையை துடைப்பான் மூலம் சுத்தம் செய்த அவர், எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதையும் கூறினார். அப்போது அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர், `நான் சுத்தம் செய்கிறேன் சார்’ என்று துடைப்பானை வாங்கிக் கொண்டார். சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ காட்சிகள் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு