அரசியல்
Published:Updated:

மீட்பாரா ரங்கசாமி? - முடங்கிக்கிடக்கும் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனம்...

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனம்...
பிரீமியம் ஸ்டோரி
News
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனம்...

இங்கு புதுச்சேரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிஹெச்.டி-யும், 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்.பில் படிப்பையும் முடித்திருக்கிறார்கள்.

பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படாதது, ஆய்வுப்பணிகள் முடக்கம் என மூடுவிழாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது உலகப் புகழ்பெற்ற புதுச்சேரி அரசின் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். இந்தநிலையில்தான், தற்போது புதுச்சேரியில் பொறுப்பேற்கும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான அரசு, மேற்கண்ட நிறுவனத்தை மீட்டு, புத்தாக்கம் செய்ய வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

மீட்பாரா ரங்கசாமி? - முடங்கிக்கிடக்கும் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனம்...

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரி மாநிலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்ச் எனப் பல மொழிகள் பேசும் மக்களையும், பிரெஞ்சிந்திய பண்பாட்டின் அடையாளத்தையும் கொண்டிருக்கிறது. தவிர, சங்க காலம் முதல் இரும்புக் காலம் வரை பல்வேறு வரலாற்று அடையாளங்களைத் தனக்குள் புதைத்துவைத்திருக்கிறது. இந்த பன்மொழிச் சூழலையும், பண்பாட்டையும் ஆய்வுசெய்வதற்காக 1981-ல் திருவனந்தபுரம் பன்னாட்டு திராவிட மொழியியல் நிறுவனத்தின் கிளை நிறுவனம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டது. வட்டார வழக்கு ஆராய்ச்சி, தமிழ் தெரியாதவர்களுக்கு தமிழ் கற்பித்தல், மொழியியல் சான்றிதழ் கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் என இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பார்த்த புதுச்சேரி அரசு, 1986-ல் ‘புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்’ என்று பெயர் மாற்றம் செய்து இதைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம் வருவதற்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் பண்பாட்டியல், மொழியியல், இலக்கியவியல், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட துறைகளுடன் செயல்படத் தொடங்கியது. புதுச்சேரி மக்களின் பண்பாடு, வரலாறு, மக்களின் வழக்காறுகளை ஆய்வுசெய்து நூல்களாக ஆவணப்படுத்துதல், கிளை மொழிகளை ஆய்வு செய்தல், பிரெஞ்ச் இலக்கியங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தல் ஆகிய பணிகளுடன் எம்.பில்., பிஹெச்.டி படிப்புகளையும், பண்பாட்டியல், மொழியியல், இலக்கியவியல், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பட்டயம் மற்றும் சான்றிதழ் வகுப்புகளையும் இந்த நிறுவனம் நடத்துகிறது. தவிர மொழி தெரியாத ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதுடன், வெளிநாட்டவர்களுக்குக் கட்டண அடிப்படையில் தமிழ் இலக்கணம், பேச்சு, வாசிப்பு பயிற்சிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.

சுமார் 350 வருடங்கள் பிரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியின் வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் ‘ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பு’ உட்பட அதி முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்களை வெளியிட்ட பெருமையும் இந்த நிறுவனத்துக்கு உண்டு. இதன் சிறப்பான செயல்பாடுகளைப் பார்த்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், 1998-ம் ஆண்டு தனது உறுப்பு நிறுவனமாக இணைத்துக்கொண்டது. அறிவுசார் ஆராய்ச் சிகளை மையமாகக்கொண்டு உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கிய இந்த நிறுவனம், கடந்த 1998-ம் ஆண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் சென்றதிலிருந்து தடுமாறத் தொடங்கியது.

இந்த நிறுவனம் முடங்கிக்கிடப்பது பற்றி வேதனையுடன் பேசினார் பேராசிரியர் ஒருவர்... ‘‘இங்கு புதுச்சேரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிஹெச்.டி-யும், 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்.பில் படிப்பையும் முடித்திருக்கிறார்கள். ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 60,000 ஆராய்ச்சித் தலைப்புகளைக்கொண்ட நூலகம் இருக்கிறது. பல வெளிநாட்டினர்கள் இங்கு வந்து தமிழைக் கற்றுக்கொண்டு தமிழ்மொழி குறித்து ஆய்வு செய்திருக்கிறார்கள்.

ஒன்பது பேராசிரியர்கள் பணியாற்றிய இந்த நிறுவனத்தில், 2019-ம் வருடம் ஆறு பேராசிரியர்கள் ஓய்வுபெற்றுவிட்டதால் ஆய்வுப்பணிகள் முடங்கிக்கிடக்கின்றன. மீதமுள்ள மூன்று பேரும் அடுத்த ஆண்டுக்குள் பணி ஓய்வு பெறவிருக்கிறார்கள். பேராசிரியர்கள் இல்லாததால் பிஹெச்.டி மாணவர்களையும் சேர்க்க முடியவில்லை. பேராசிரியர்களுக்குக் குறைந்தபட்சம் இரண்டு பணி ஆண்டுகள் இருந்தால்தான் பிஹெச்.டி மாணவர்களுக்கு வழிகாட்ட பல்கலைக்கழகம் ஒப்புதல் அளிக்கும். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிஹெச்.டி படிப்புக்கு அனுமதியளிக்க தஞ்சை பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது. பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

மீட்பாரா ரங்கசாமி? - முடங்கிக்கிடக்கும் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனம்...

எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கேட்டு வியந்த முன்னாள் ஆளுநர் கிரண் பேடி, ‘குறைந்த நிதியில் இவ்வளவு பெரிய பணியை மேற்கொண்டு வருகிறீர்கள்’ என்று கூறி ஒரு வருடத்துக்கான நிதிக்கு ஒரே நாளில் அனுமதி அளித்தார். அத்துடன் காலியாக இருக்கும் பேராசிரியர்களை நிரப்புவதற்கும் அனுமதி தந்தார். தற்போதைய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனும் இங்கு வந்து அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என்றார். ஆனால், இன்னமும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை’’ என்றார் ஆதங்கத்துடன்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க கலை பண்பாட்டுத்துறையின் செயலர் நெடுஞ்செழியனைத் தொடர்புகொண்டோம். ‘‘இந்தத் துறைக்கு நான் பொறுப்பேற்று ஒரு மாதம்கூட ஆகவில்லை. ஏற்கெனவே ஆறு பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. மீதமுள்ள மூன்று பேராசிரியர்களும் அடுத்த வருடத்துக்குள் ஓய்வுபெற இருக்கிறார்கள். அதனால், ஒன்பது பணியிடங்களுக்கும் நேர்காணல் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதால்தான் தாமதமாகிறது. விரைவில் பணியிடங்களை நிரப்புவோம்’’ என்றார்.

தமிழ் மொழி வளர்ச்சியில் உலக அளவில் முக்கியப் பங்காற்றிவரும் இந்த நிறுவனத்தை புதிய அரசு மீட்க வேண்டும் என்பதே அறிவுலகத்தின் குரலாக இருக்கிறது!