Published:Updated:

ஜெகத்ரட்சகன் பேச்சு : நாராயணசாமிக்கு செக்... புதுச்சேரியில் ஸ்டாலினின் புதுக்கணக்கு! #Election2021

ஸ்டாலின் - ஜெகத்ரட்சகன் - நாராயணசாமி
ஸ்டாலின் - ஜெகத்ரட்சகன் - நாராயணசாமி

''முப்பது தொகுதிகளிலும் தி.மு.க வெற்றிபெறவேண்டும்'' என தி.மு.கவின் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் பேசியிருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

``புதுச்சேரியில் தி.மு.க தலைமையில்தான் ஆட்சியே அமையும். முப்பது தொகுதிகளிலும் தி.மு.க வெற்றிபெறவேண்டும். இல்லையென்றால் மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன்'' என முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் பற்றவைத்த தீப்பொறி, புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்திலும் அனலாய்த் தகிக்கிறது.

தமிழகத்தைப் போன்றே புதுச்சேரியிலும் வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக, தி.மு.கவின் பொறுப்பாளராக, ஜெகத்ரட்சகன் எம்.பி, தி.மு.க தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் தலைமையில், தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் புதுச்சேரியில் நடந்தது. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ வரவேற்றார். வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பேசிய ஜெகத்ரட்சகன்,

தி.மு.க ஜெகத்ரட்சகன்
தி.மு.க ஜெகத்ரட்சகன்

'' புதுச்சேரிக்கு சென்று தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்து வாருங்கள் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டார். தொண்டர்களின் உணர்வுகளைக் கேட்டேன். தி.மு.க தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதை ஸ்டாலினிடம் சொல்ல உள்ளேன். எந்த இயக்கத்தோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்பதை அவர்தான் முடிவு செய்வார்'' எனப் பேசியவர் தொடர்ந்து,

''புதுச்சேரியை சொர்க்கமாக்கலாம். இந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்தவன் நான், இந்த மண்ணை நேசிப்பவன் நான், பாவிகள் புதுச்சேரியை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு என்ன செய்ய முடியாது, ஏன் செய்ய முடியாது... இத்தனை தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. இதனால் எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. புதுச்சேரிக்கு வருவாய் வருவதற்கு என்ன திட்டம் தீட்டியுள்ளீர்கள். நான் திட்டம் வைத்துள்ளேன்'' எனப் பேசியது அங்கு மிகப்பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காரணம், தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி முதல்வராக இருக்கிறார். பாண்டிச்சேரி(23), காரைக்கால்(5), மாஹி(1), ஏனாம்(1) சேர்த்து ஒட்டுமொத்த முப்பது தொகுதிகள் உள்ளன. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 21 தொகுதிகளிலும், தி.மு.க 9 இடங்களிலும் போட்டியிட்டன. அதில் காங்கிரஸ் 15 இடங்களிலும் தி.மு.க 2 இடங்களிலும் வெற்றி பெற்று, தி.மு.கவின் தயவிலேயே காங்கிரஸ் கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இந்தநிலையில் வரும் தேர்தலில், முப்பது தொகுதிகளிலும் தி.மு.க வெற்றிபெறவேண்டும் என தி.மு.கவின் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் பேசியிருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

ஜெகத்ரட்சகன் - ஸ்டாலின்
ஜெகத்ரட்சகன் - ஸ்டாலின்

காங்கிரஸ் கூட்டணியில், தங்களின் சீட்டு எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காகவே தி.மு.க இப்படியொரு விளையாட்டை ஜெகத்ரட்சகனை வைத்து விளையாட ஆரம்பித்திருக்கிறது; ஜெகத்ரட்சகன் பேசியிருப்பதற்கு பின்னால் பா.ஜ.க இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைக் கவிழ்க்க திரைமறைவில் வேலைகள் நடந்து வருகின்றன என பல்வேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. அதுமட்டுமல்ல, தமிழகத்தில், காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்களை ஒதுக்கவே, பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு செக் வைக்கிறது தி.மு.க. கடந்த ஒருவாரமாகவே, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்குவது தொடர்பாக பல்வேறு குளறுபடிகள் நடந்துவருகின்றன. காங்கிரஸ் கட்சி, தி.மு.க கூட்டணியில் அதிக இடங்களை எதிர்பார்க்கிறது. அந்தக் குரலை மட்டுப்படுத்தவே புதுச்சேரியை தி.மு.க கையில் எடுத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்,

''முப்பது தொகுதிகளில் ஜெயிக்கவில்லை என்றால் மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன் எனச் சொல்கிறார். இன்னும் சில மாதங்களில் தேர்தல் வந்துவிடும். என்ன நடக்கப் போகிறது என நாம் பார்க்கத்தான் போகிறோம். போனமுறை, ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 2 இடங்களில் மட்டும்தான் தி.மு.கவினர் ஜெயித்தார்கள். நாங்கள் 15 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். போகிற போக்கில் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்'' என்கின்றனர். ஆனால், ''பாண்டிச்சேரியின் சலசலப்பு தி.மு.க காங்கிரஸ் கூட்டணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார். நாராயணசாமி ஆட்சி கவிழ்வதை தி.மு.க அனுமதிக்காது. எங்கள் கூட்டணி எஃகுக் கோட்டைபோல் உறுதியாக உள்ளது'' என்கிறார், காங்கிரஸ் கட்சியின் து.தலைவர் கோபண்ணா.

கோபண்ணா
கோபண்ணா

'' புதுச்சேரியில் ஆட்சியமைக்கவேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கும் இருக்கிறது. இதற்கு முன்பாக, எங்கள் கட்சியைச் சேர்ந்த ஜானகிராமன் முதல்வராகவும் இருந்திருக்கிறார். கடந்த முறை பத்து தொகுதிகளில் நாங்கள் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றோம். ஆனால், அதில் காங்கிரஸ் கட்சியின் உள்ளடி வேலைகள் அதிகம். தவிர நாராயணசாமி எங்கள் கட்சி நிர்வாகிகளை சரியாக நடத்துவதில்லை. எங்கள் தயவில் ஆட்சி நடக்கும்போது, ஆட்சியில் பங்குபெறவேண்டும் என்கிற எண்ணம் எங்கள் தொண்டர்களுக்கு இருக்கக்கூடாதா எனக் கொதிக்கிறார்கள், தி.மு.கநிர்வாகிகள். ஆனால்,.'' இயக்கத்தைப் பலப்படுத்தவே ஜெகத்ரட்சகன் அப்படிப் பேசியிருக்கிறார். கட்சியின் செயல்வீரர்கள் மத்தியில் அவர்களை உற்சாகப்படுத்த இப்படித்தானே பேச முடியும். எங்கள் தலைவர் சொல்லியிருப்பதைப் போல, இதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமில்லை'' என்கிறார், தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

புதுச்சேரி அரசியலைக் கலக்கும் காங்கிரஸ் - பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் புகைப்படம்! - பின்னணி என்ன?

அரசியல் விமர்சகர்கள் இதுகுறித்துப் பேசும்போது,

''கடந்த நான்கரை ஆண்டுகளில் நாராயணசாமியின் மீது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தி இருக்கிறது. கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவே இல்லை. அதைத் திசைதிருப்புவதற்காக தி.மு.க இப்படியொரு நாடகத்தில் இறங்கியிருக்கிறது. கூடவே, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில், தங்களின் பேரத்தை அதிகப்படுத்துவதும் தி.மு.கவின் திட்டமாக இருக்கிறது. புதுச்சேரியில், கிட்டத்தட்ட 60 சதவிகிதத்துக்கும் அதிகமாக வன்னிய சமூக மக்கள் இருக்கிறார்கள். அதனால்தான், தற்போது ஜெகத்ரட்சகனை வைத்துப் பேச வைத்திருக்கிறார்கள். அவர் ஏற்கெனவே,வன்னிய சமுதாய அமைப்புகளை எல்லாம் நடத்தி வந்திருக்கிறார்.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

ஆனால், புதுச்சேரி மக்கள் தி.மு.க, அதி.மு.கவை எல்லாம் தமிழ்நாட்டுக் கட்சியாகத்தான் பார்ப்பார்கள். காங்கிரஸ் கட்சிக்கு, என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் பரந்துபட்ட ஆதரவு தி.மு.க, அ.தி.மு.கவுக்குக் கிடையாது. அதனால், தனியாக நின்றால் தி.மு.கவால் வெல்ல முடியாது. தவிர ஜெகத்ரட்சகனை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் பாண்டிச்சேரி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மண்ணின் மக்களை மட்டுமே ஆதரிப்பார்கள்'' என்கின்றனர்.

இந்தநிலையில், புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையிலான சலசலப்பு குறித்துப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி “கூட்டணிக்குள் எது நடந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் நண்பர்களோடு இணக்கமான சூழ்நிலையை விரும்புகிறோம். அதேவேளையில் தனியாக நிற்கவும் தயாராக இருக்கிறோம்'' எனக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு