Published:Updated:

புதுச்சேரி: `எனக்கு அமைச்சர் பதவி என்றார்கள்! ஆனால்...’ பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார் ஓப்பன் டாக்!

பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார்
பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார்

``ஒருவேளை நான் தேர்தலுக்கு முன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தால், ரங்கசாமித் தனியாகத் தேர்தலைச் சந்தித்து 20 தொகுதிகளில் வெற்றிபெற்றிருப்பார். நானும் அமைச்சராகியிருப்பேன். ஆனால், அதனால் ஒரு பிரயோஜனமும் இருந்திருக்காது” -பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார்

பா.ஜ.க-வின் காமராஜர் நகர் தொகுதியின் எம்.எல்.ஏ-வான ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி தர வலியுறுத்தி அவரின் ஆதரவாளர்கள், புதுச்சேரி பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில், டெல்லியிலுள்ள ஜான்குமாரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டேன். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க-வில் நாங்கள் ஆறு எம்.எல்.ஏ-க்கள் வெற்றிபெற்றோம். நீங்கள் அப்பாவும் மகனும் வெற்றிபெற்றிருப்பதால் கண்டிப்பாக உங்களுக்கு ஓர் அமைச்சர் பதவி என்று ஒரு மாதத்துக்கு முன்பாகவே கூறியிருந்தார்கள்.

பா.ஜ.க அலுவலகம் முற்றுகை
பா.ஜ.க அலுவலகம் முற்றுகை

சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் இருந்தேன். காங்கிரஸ் கட்சியில் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக இருந்தபோது பணி நிமித்தமாக பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா உள்ளிட்டவர்களைச் சந்தித்திருக்கிறேன். அதைத் தாண்டி டெல்லியில் பா.ஜ.க தலைவர்கள் யாரும் எனக்கு அறிமுகமில்லை. தேர்தலுக்கு முன்பாகத்தான் கட்சியில் இணைந்தேன் என்பதால், அதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலிருந்து இரண்டு அமைச்சர்களை நாங்கள் பெற்றோம்.

எனக்குத்தான் அமைச்சர் பதவி என்பதை எங்கள் கட்சியில் கடந்த வாரம் மீண்டும் உறுதி செய்தார்கள். அதன் பிறகுதான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நட்டா உள்ளிட்டவர்களுக்கு நன்றி சொல்லி அனைத்து செய்தித்தாள்களிலும் விளம்பரமும் கொடுத்தேன். கோயில்களில் பூசைவைத்து அனைவருக்கும் நன்றி சொல்லி, வேளாங்கண்ணி கோயிலுக்கும் பூசைக்கான பணத்தைக் கட்டினேன். இந்தநிலையில்தான் நேற்று ’அமைச்சர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை. பா.ஜ.க-வில் 10 வருடங்களாக இருக்கும் சாய் ஜெ.சரவணனுக்குத்தான் அமைச்சர் பதவி தருகிறோம்’ என்று கூறினார்கள். மூன்று முறை வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குச் சென்ற சீனியர் என்ற முறையில் எனக்கு அமைச்சர் பதவி தராதது வருத்தம்தான். அதனால்தான் பிரதமரை நேரில் சந்தித்து இது குறித்துப் பேசலாம் என்று டெல்லிக்கு வந்திருக்கிறேன்.

பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்டு, ஜான்குமார்
பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்டு, ஜான்குமார்

அப்போது பிரதமரின் தனிச்செயலர், சந்தோஷ்ஜியை பார்க்கும்படி கூறினார். அதன்படி அவரைச் சந்தித்தபோது, “உங்களைக் கைவிட மாட்டோம். கண்டிப்பாக உங்களுக்கு அமைச்சர் பதவி உண்டு. ஆனால் ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடம் காத்திருங்கள். சுழற்சி முறையில் அமைச்சர் பதவியை வழங்கலாம்” என்று கூறினார். அப்படியானால், "முதல் ஒரு வருடத்தை எனக்குக் கொடுங்கள்" என்று கேட்டேன். அதற்கு "பார்த்துக்கொள்ளலாம். அனைவரும் சேர்ந்து பணியாற்றுவோம்" என்று கூறினார். கடந்த காலத்தில் நான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அனுபவத்தில் கூறுகிறேன். பா.ஜ.க ஆட்சி இருந்தால்தான் புதுச்சேரியைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறேன். மத்தியிலும், மாநிலத்திலும் வேறு வேறு ஆட்சிகள் இருந்தால் அனைத்துக் கோப்புகளும் சுவற்றில் அடித்த பந்தைப்போலத்தான் திரும்பி வரும்.

புதுச்சேரிக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் பா.ஜ.க-வுக்குச் சென்றேன். நான் அமைச்சரானால் மிகவும் நேர்மையாக இருப்பேன். ஒருவேளை அந்தக் காரணத்தால்தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போகிறதோ என்று நினைக்கிறேன். நான் அமைச்சராகியிருந்தால், புதுச்சேரி மக்கள் இதுவரை சந்தித்திராத ஓர் அமைச்சராக செயல்பட்டிருப்பேன். ஏனென்றால், நேர்மை மட்டும்தான் எனக்குப் பிடிக்கும். அது பா.ஜ.க-வுக்கே ஓர் அபார வளர்ச்சியைக் கொடுத்திருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. கட்சி கூறுவதற்கு நான் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். தேர்தலுக்கு முன்பு முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கே வந்து "கட்சியில் இணையுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு அமைச்சர் பதவி தருகிறேன்" என்று வாக்குறுதி கொடுத்தார்.

புதுச்சேரி: ’அமைச்சர் பதவி யாருக்கு?’ அடித்துக்கொள்ளும் பா.ஜ.க; அலுவலகத்தை நொறுக்கிய தொண்டர்கள்!

ஒருவேளை தேர்தலுக்கு முன் நான் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தால், ரங்கசாமி தனியாகத் தேர்தலைச் சந்தித்து இருபது இடங்களில் வெற்றிபெற்றிருப்பார். நானும் அமைச்சராகியிருப்பேன். ஆனால் ஒரு பிரயோஜனமும் இருந்திருக்காது. எந்த வேலையும் நடைபெற்றிருக்காது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததுதான் இப்போதும் நடந்திருக்கும். மத்தியிலிருந்து எந்த நிதியும் நமக்குக் கிடைத்திருக்காது. இப்போது என்.ஆர் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சி நடப்பதால், மத்தியிலிருந்து அனைத்து நிதியும் நமக்குக் கிடைக்கும். அந்தத் தொலைநோக்கு பார்வையில்தான் நான் பா.ஜ.க-வில் இணைந்தேன். எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற கோபத்தில்தான் எனது ஆதரவாளர்கள் எங்கள் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். எங்கள் அலுவலகம் எனது மகன் தொகுதியான நெல்லித்தோப்பில்தான் அமைந்திருக்கிறது என்பதால், மக்கள் உடனே கூடிவிட்டார்கள். எனக்கு அமைச்சர் பதவி இல்லை என்பது கொஞ்சம் பேருக்குத்தான் தெரியும். அனைவருக்கும் தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இதுதான் அரசியல். அதேசமயம், மாநிலத்தின் நன்மைக்காகக் கட்சிக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு