Published:Updated:

ரங்கசாமியா, நாராயணசாமியா... காமராஜர் நகர் கைகொடுக்கப்போவது எந்தச் சாமிக்கு?

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த வைத்திலிங்கம், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி ஆகிவிட்டதால், இடைத்தேர்தலைச் சந்திக்கிறது காமராஜர் நகர் தொகுதி.

ரங்கசாமியா, நாராயணசாமியா
ரங்கசாமியா, நாராயணசாமியா

ங்கு காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் நெல்லித்தோப்புத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான ஜான்குமார் போட்டியிடுகிறார். என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பி.ஜே.பி கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸின் புவனா (எ) புவனேஸ்வரன் போட்டியிடுகிறார். காங்கிரஸும், என்.ஆர்.காங்கிரஸும் நேருக்குநேர் மோதும் இந்தத் தேர்தல், முதல்வர் நாராயணசாமிக்கும், முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கும் இடையே நடக்கும் நேரடிப் போட்டியாகவே பார்க்கப்படுகிறது.

நாராயணசாமி டெல்லி அரசியலில் மட்டுமே புழங்கிவந்ததால், அவருக்கு சொந்தத் தொகுதி எதுவும் இல்லாமல்போனது. அதனால், முதல்வரான பிறகும் தொகுதி கிடைக்காமல் அல்லாடினார். அப்போது நெல்லித்தோப்புத் தொகுதியை நாராயணசாமிக்காக விட்டுக்கொடுத்தவர்தான் ஜான்குமார். அதன் பிறகே அங்கு நாராயணசாமி போட்டியிட்டு, வெற்றிபெற்று முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். அதற்கு நன்றிக்கடனாகவே ஜான்குமாருக்கு இப்போது சீட் அளிக்கப் பட்டிருக்கிறது. இதனால், ஜான்குமாரை நாரா யணசாமியின் நேரடி ‘ஸ்டார்’ வேட்பாளராகப் பார்க்கிறார்கள் கட்சித் தொண்டர்கள். அசைக்க முடியாத பொருளாதார பலம், முதல்வர் நாராயணசாமியின் ஆதரவுபெற்ற ஆளும் கட்சி வேட்பாளர் போன்றவை ஜான்குமாருக்கு ப்ளஸ். தொகுதிக்குத் தொடர்பே இல்லாதவர் என்பது மைனஸ்.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ் வரனும் பொருளாதார பலம்மிக்கவர்தான். தேர்தல் செலவுகளில் அள்ளித் தெளிப்பார் என்கிறார்கள். புதுச்சேரியின் முக்கியமான ரியல் எஸ்டேட் அதிபர்களில் இவரும் ஒருவர். முன்னாள் முதல்வரான ரங்கசாமியின் பின்னணியில் போட்டியிடுவது இவருக்கு ப்ளஸ். அதேசமயம் தொகுதியைச் சேராதவர் என்பதும் மக்களுக்கு அறிமுகமில்லாதவர் என்பதும் இவருக்கு மைனஸ்.

மொத்தம் 35,325 வாக்காளர்களைக்கொண்ட இந்தத் தொகுதியில், கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 11,618 வாக்குகளைப் பெற்று 5,106 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 15,000 வாக்குகளைப் பெற்றது காங்கிரஸ். இந்த நிலையான வாக்குவங்கி தங்களுக்கு ‘கை’கொடுக்கும் என நினைக்கிறது காங்கிரஸ் தரப்பு.

ரங்கசாமியா, நாராயணசாமியா
ரங்கசாமியா, நாராயணசாமியா

அதேபோல் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இங்கு தனித்துப் போட்டியிட்டு 6,512 வாக்குகள் பெற்ற அ.தி.மு.கவும், 3,642 வாக்குகள் பெற்ற என்.ஆர்.காங்கிரஸும், 764 வாக்குகள் பெற்ற பி.ஜே.பி-யும் தற்போது ஒரே அணியில் இருப்பது தங்களுக்கு சாதகம் எனக் கணக்குபோடுகிறது என்.ஆர்.காங்கிரஸ். தவிர, அந்தக் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட தட்டாஞ்சாவடி, கடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க வசம் சென்றுவிட்டதால், இந்தத் தேர்தலில் தங்கள் பலத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்.ஆர்.காங்கிரஸ்.

இதனாலேயே அந்தக் கட்சியின் தலைவர் ரங்கசாமி வீடு வீடாக ஏறி வாக்குக் கேட் கிறார். பொதுவாக, பிரசார வாகனத்திலேயே வந்து சென்றுவிடும் ரங்கசாமியின் இந்த மாற்றம், காங்கிரஸ் தரப்புக்கு கிலியை ஏற்படுத்தி யிருக்கிறது. இதனால் தொகுதி யின் முன்னாள் எம்.எல்.ஏ-வான வைத்திலிங்கத்தை கையோடு அழைத்துச் செல்லும் நாராயணசாமி, “இவரைப் போலவே ஜான்குமாரும் உங்களுக்கு விசுவாசமாக இருப்பார். அதனால், ஜான் குமாருக்கே ஓட்டு போடுங்கள். இலவச அரிசி உள்ளிட்ட பல திட்டங்களுக்கு ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போட்டபோது அமைதியாக இருந்த ரங்கசாமியைப் புறக்கணியுங்கள்” என்று கூறி தொகுதியைச் சுற்றி வருகிறார்.

என்.ஆர்.காங்கிரஸோ, “ஜான்குமார், அரசியல் வியாபாரி. நெல்லித்தோப்புத் தொகுதி மக்களை விலைக்கு வாங்கி, அதை நாராயணசாமிக்கு விற்றுவிட்டார். இந்தமுறை நீங்கள் அவரை வெற்றி பெறவைத்தாலும் நாராயணசாமிக்கு உங்கள் தொகுதியை விற்றுவிட்டு, அடுத்த தேர்தலில் மீண்டும் நெல்லித்தோப்புக்கே சென்றுவிடுவார்” என்று எதிர் தரப்பினரின் பிரசாரத்தை உடைக்கிறது.

ரங்கசாமியா, நாராயணசாமியா... காமராஜர் நகர் கைகொடுக்கப்போவது எந்தச் சாமிக்கு?

இப்படியாக கடுமையான மோதல் ஏற்பட்டிருக்கும் சூழலில் ‘பசையான’ தரப்பே வெற்றியை அறுவடைசெய்யும் என்ற சூழல் நிலவுகிறது. வெற்றிவாய்ப்புக்கான இன்னோர் அம்சமும் இருக்கிறது. படுமோசமான சாலைகள், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது, கடுமையான குடிநீர்ப் பிரச்னை... இவற்றையெல்லாம் சரிசெய்வோம் என்று மக்கள் மனதில் நம்பிக்கையை விதைப்பவர் வெற்றிபெறலாம்.

இரு சாமிகளுக்கு இடையே நடக்கும் இந்தப் பலப்பரீட்சையில், தீர்ப்பு எழுதக் காத்திருக் கிறார்கள் காமராஜர் தொகுதி மக்கள்.

மாமா... மாப்பிள்ளை!

ரங்கசாமியா, நாராயணசாமியா... காமராஜர் நகர் கைகொடுக்கப்போவது எந்தச் சாமிக்கு?

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர், அமைச்சர் நமச்சிவாயம். இவர், என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமியுடைய அண்ணனின் மருமகன். ஏற்கெனவே, கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றபோது, நமச்சிவாயம் தான் முதல்வர் என்கிற சூழல் உருவானது. ஆனால், கடைசி நேரத்தில் தேர்தலிலேயே போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார். நமச்சிவாயத்தின் முதல்வர் கனவு கலைந்தது. இந்த இடைத்தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்த நாராயணசாமிக்கும் நமச்சிவாயத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த முறையும் நாராயணசாமியே வெற்றி பெற்றார். இதனால் கடுப்பிலிருக்கும் நமச்சிவாயம், மறைமுகமாக தன் மாமாவான ரங்கசாமிக்கு உதவுவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது!