Published:Updated:

புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு; புகார் தெரிவித்த பெண்-அதிகாரிகளைக் கடிந்த தமிழிசை

கவர்னர் தமிழிசை

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று தொடர்ச்சியாக எழுந்த புகார்களின் அடிப்படையில், நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டார் கவர்னர் தமிழிசை.

புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு; புகார் தெரிவித்த பெண்-அதிகாரிகளைக் கடிந்த தமிழிசை

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று தொடர்ச்சியாக எழுந்த புகார்களின் அடிப்படையில், நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டார் கவர்னர் தமிழிசை.

Published:Updated:
கவர்னர் தமிழிசை

புதுச்சேரி மாநில அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் உள்ளிட்டவர்களின் பற்றாக்குறையாலும், மருந்து, மாத்திரைகளின் பற்றாக்குறையாலும் நோயாளிகள் கடும் அவதிப்படுவதாக தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாகப் புகார் தெரிவித்துவந்தன. இந்த நிலையில், அரசு பொது மருத்துவமனையில் ஆய்வுசெய்த தமிழிசை, உள்நோயாளிகள் பிரிவு, பரிசோதனைக் கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று நோயாளிகள், அவர்கள் உறவினர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது ஒரு பெண் தன் கணவருக்குக் கடும் வயிற்றுவலி காரணமாக மூன்று நாள்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும், ஆனால் இதுவரை அவருக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகூட மேற்கொள்ளவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.

ஆய்வில் கவர்னர் தமிழிசை
ஆய்வில் கவர்னர் தமிழிசை

உடனே அவசர சிகிச்சை பிரிவிலுள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையத்தை ஆய்வு செய்வதற்காகச் சென்றார் தமிழிசை. அப்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையம் பூட்டப்பட்டு, அதன் சாவியை மருத்துவர் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த தமிழிசை, ”அவசர சிகிச்சை மையத்தில் இருக்கும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மையத்தையே பூட்டிவிட்டுச் செல்லும் அளவுக்கு அலட்சியமா?” என்று அதிகாரிகளைக் கடிந்துகொண்டார். தொடர்ந்து அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகளை ஊழியர்கள் யாரும் அழைத்துச் செல்லாததை நேரில் கண்டு அதிர்ச்சியானார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, “அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகளை அவர்களின் உறவினர்களே இறக்குகின்றனர். அதை நானே நேரடியாகப் பார்த்தேன். சாமானிய மக்களின் நம்பிக்கையே அரசு மருத்துவமனைதான். அந்த அரசு மருத்துவமனை சரியாக செயல்படாததை ஏற்றுக்கொள்ள முடியாது. மருத்துவராக இருந்து நோயாளிகளின் சிரமத்தைப் பார்த்திருக்கிறேன்” என்றவரிடம், ”வெறும் 8,000 ரூபாய் கொடுத்து ஸ்ட்ரெச்சர் வாங்க முடியாத இந்த அரசாங்கத்தால் மோடி சொன்ன பெஸ்ட் புதுச்சேரியை எப்படி உருவாக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்துகின்றனவே..?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழிசை, “இந்த ஒன்றரை ஆண்டில் குறைபாடுகளைச் சரிசெய்யவில்லை என்று சொல்கின்றனர். அப்படியானால் இதற்கு முந்தைய ஆட்சியில் அதைச் சரி செய்யவில்லை என்றுதானே அர்த்தம்... முந்தைய ஐந்து ஆண்டுகளில் ஏன் எதுவும் நடக்கவில்லை... அதனால் ஒருவருக்கொருவர் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதற்கு நமக்கு கால அவகாசம் கிடையாது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைகள் மேலும் மேம்படுத்தப்படும். அதிலுள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படும். ஆம்புலன்ஸில் ஸ்ட்ரெச்சர் எடுத்துச் செல்லாதது தவறுதான். அதற்காக அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மூன்று மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்துப் பிரச்னைகளையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.