Published:Updated:

" `தமிழ்நாடு' என்ற பெயருக்குப் பின்னால் மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது!"- துணைநிலை ஆளுநர் தமிழிசை

துணைநிலை ஆளுநர் தமிழிசை

``துணைநிலை ஆளுநர்கள் இருக்கிற இடங்களிலெல்லாம் `அவர்களுக்கு அதிகாரமில்லை’ என்று முதலமைச்சர்கள் சொல்கிறார்கள். ஆனால், துணைநிலை ஆளுநர்களின் பொறுப்பு என்ன என்பதைப் புரிந்துகொண்டு முதலமைச்சர்கள் செயல்பட வேண்டும்.” - ஆளுநர் தமிழிசை

" `தமிழ்நாடு' என்ற பெயருக்குப் பின்னால் மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது!"- துணைநிலை ஆளுநர் தமிழிசை

``துணைநிலை ஆளுநர்கள் இருக்கிற இடங்களிலெல்லாம் `அவர்களுக்கு அதிகாரமில்லை’ என்று முதலமைச்சர்கள் சொல்கிறார்கள். ஆனால், துணைநிலை ஆளுநர்களின் பொறுப்பு என்ன என்பதைப் புரிந்துகொண்டு முதலமைச்சர்கள் செயல்பட வேண்டும்.” - ஆளுநர் தமிழிசை

Published:Updated:
துணைநிலை ஆளுநர் தமிழிசை

ஆரோவில் வளர்ச்சிக்குழுக் கூட்டம், அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா, காணும் பொங்கல் விழா ஆகியவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றன. இதில் ஆரோவில் அமைப்பின் செயலர் ஜெயந்தி ரவி உள்ளிட்ட ஆசிரம அதிகாரிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, ``அனைவருக்கும் காணும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்ரீஅரவிந்தர், அன்னை ஆகியோரின் கனவுகளை நிறைவேற்ற நாம் செய்கிற முயற்சிகளில் ஒரு முன்னேற்றத்தை இந்தக் கூட்டம் கொண்டுவரும் என்று நம்புகிறேன். நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடிக்கொண்டிருக்கிற வேளையில், ஜி20 மாநாட்டை தலைமையேற்று இந்தியா நடத்துகிறது. விடுதலைப் போராட்ட காலத்தில் சுதந்திரத்துக்காகப் போராடிய ஸ்ரீஅரவிந்தர், பாரதியார் போன்றோரின் கனவுகளை நாம் நிறைவேற்றவேண்டியது அவசியம்.

விழாவில் தமிழிசை
விழாவில் தமிழிசை

அப்போதுதான் இந்தியா முன்னேறும். ஜி20 மாநாட்டின் ஒரு பகுதி ஜனவரி 31-ம் தேதி புதுச்சேரியில் நடக்கவிருக்கிறது. பொருளாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவிருக்கிறது. விடுதலைப் போராட்ட காலத்திலும் புதுச்சேரி ஒரு தாயின் மடியைப்போல பலரை அரவணைத்தது. அரவிந்தர், பாரதியார், வாஞ்சிநாதன் போன்றோருக்கு புதுச்சேரி புகலிடமாக இருந்தது. ஆரோவில் நகரத்தில் 5,000 குடும்பங்கள் இருக்க வேண்டும் என்று அன்னை கனவு கண்டார். இத்தனை ஆண்டுகள் கடந்தும் 3,000 குடும்பங்கள் மட்டுமே அங்கே இருக்கின்றன. இதையெல்லாம் சரிசெய்வதற்கு, தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இன்று துணைநிலை ஆளுநர் மாளிகையில் அதற்கான உயர்மட்டக்குழு மற்றும் இதர குழுக்களின் கூட்டம் நடைபெற்றன. முதலில் இருந்ததைவிடப் பல நல்ல நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக காணும் பொங்கலில் அவர்களுக்கு ஒரு விருந்து நடைபெறுகிறது” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “துணைநிலை ஆளுநர்கள் இருக்கிற இடங்களிலெல்லாம் `அவர்களுக்கு அதிகாரமில்லை’ என்று முதலமைச்சர்கள் சொல்கிறார்கள். ஆனால் துணைநிலை ஆளுநர்களின் பொறுப்பு என்ன என்பதைப் புரிந்துகொண்டு முதலமைச்சர்கள் செயல்பட வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். `தமிழகம்’, `தமிழ்நாடு’ இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. `தமிழ்நாடு’ என்ற பெயருக்கு மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது. மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு அந்தப் பெயர் கிடைத்தது. அவ்வளவு இலகுவாக அந்தப் பெயரைப் புறம் தள்ளிவிட முடியாது. என்னைப் பொறுத்தமட்டில் நான் மக்களுக்காகத்தான் செயல்படுகிறேன். கோப்புகளை கோப்புகளாகப் பார்க்காமல், மக்களின் முகங்களாகப் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால், புதுச்சேரியில் அதை முதலமைச்சரோடு சேர்ந்து வழங்கவிருக்கிறோம். மக்களுக்காகச் செய்வதில் எந்தப் பாரபட்சமும் புதுச்சேரியில் இல்லை. மக்களுக்கு எது நல்லதோ அதைச் செய்துகொண்டிருக்கிறோம்.

ஜி20 மாநாட்டுக்கு வருபவர்களுக்கு நமது கலாசாரத்தைப் பற்றியும், தொன்மையைப் பற்றியும், உணவு முறையைப் பற்றியும் தெரிவிக்க வேண்டும். அத்துடன் நமது நாட்டின் தொழில் வளர்ச்சி, பருவநிலைப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் பங்களிப்பு, ஸ்டார்ட்அப் போன்றவற்றில் இளைஞர்கள் எப்படித் தொழில் தொடங்கியிருக்கிறார்கள் என்பதையும் வருபவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற கணிப்போடு இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுக்கு வருபவர்களுக்கு அந்தப் பகுதியிலுள்ள பிரமாண்ட இடங்களைச் சுற்றிக் காண்பிக்கிறோம். புதுச்சேரிக்கு வருபவர்களை ஆரோவில்லின் சிறப்பு கருதி, அது முக்கியமான இடமாக இருப்பதால் அதைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது” என்றார்.