Published:Updated:

புதுச்சேரி: `அவகாசம் கேட்கும் தேர்தல் ஆணையம்!’-அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மேலும் நான்கு மாதங்கள் கால அவகாசம் வேண்டுமென மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இதுவரை இரண்டு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றிருக்கிறது. 1968-ம் ஆண்டுக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் 2011-ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தனர். அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அக்டோபர் மாதத்துக்குள் தேர்தலை நடத்தி, முடிவுகளை அறிவிக்கும்படி உத்தரவிட்டது. அதனால் செப்டம்பர் 22-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

ஆனால் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில், இட ஒதுக்கீடுகளில் குளறுபடிகள் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் சென்றார் முத்தியால்பேட்டை தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ பிரகாஷ்குமார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 29-ம் தேதி உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைத்து, வார்டு குளறுபடிகளைச் சரிசெய்யும்படி உத்தரவிட்டது. அதனால் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டைத் திரும்பப்பெற்றது அரசு.

இது அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்தலை நடத்தக் கூடாது என வலியுறுத்தினர். இருப்பினும் மாநில தேர்தல் கமிஷன் இரண்டாவது முறையாக உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அதையடுத்து தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் இட ஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கடந்த 11-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை 21-ம் தேதி வரை தள்ளிவைத்தது. இதனால் அன்றைய தினம் தொடங்கிய வேட்புமனு தாக்கல் நிறுத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் புதுவை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் சார்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த மனுவில், ``உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முரண்பாடு இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், வேட்புமனு தாக்கலை நிறுத்தி வைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காகச் சட்டத்தை மீற முடியாது என உயர் நீதிமன்றம் அக்டோபர் 1-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளது. அதனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் நான்கு மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: தோல்வியடைந்த ஏனாம்; வெற்றிபெற்ற தட்டாஞ்சாவடி! -முதல்வரின் தேர்தல் செலவு எவ்வளவு?

உயர் நீதிமன்றத்தில் புதுவை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நான்கு பேர் தொடர்ந்திருக்கும் வழக்குகள் வரும் 21-ம் தேதி தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வருகின்றன. அதேபோல மாநில அரசும் அன்றைய தினம் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தகவல்களைத் தாக்கல் செய்யவிருக்கிறது. அதனால் புதுவை மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் கால அவகாசம் அளிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார்கள். அப்படி கால அவசாகம் கொடுத்தால், உள்ளாட்சி தேர்தல் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு