Published:Updated:

“கொங்கு நாடு என்பது பா.ஜ.க-வின் பகல் கனவு!”

நாராயணசாமி
பிரீமியம் ஸ்டோரி
நாராயணசாமி

- புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ‘பளீர்’

“கொங்கு நாடு என்பது பா.ஜ.க-வின் பகல் கனவு!”

- புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ‘பளீர்’

Published:Updated:
நாராயணசாமி
பிரீமியம் ஸ்டோரி
நாராயணசாமி
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அமைச்சரவைப் பங்கீடு, இலாகாக்கள் பிரிப்பதில் இழுபறி எனத் தொடர்ந்து கூட்டணிக்குள் குழப்பங்கள் நிலவிவந்தன. 60 நாள்களுக்குப் பிறகு, அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கியிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. தேர்தல் தோல்விக்குப் பிறகு அமைதியாக இருந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தத் தொடங்கி பரபரத்துவருகிறார். அவரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்...

“புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைந்து 50 நாள்களுக்குப் பிறகுதான் அமைச்சர்கள் பதவியேற்றார்கள். அதேபோல இலாகாக்கள் ஒதுக்குவதிலும் ஏகப்பட்ட குழப்பங்கள், தாமதங்கள்...” (இடைமறிக்கிறார்)

“கொள்கை இல்லாத சந்தர்ப்பவாதக் கூட்டணி என்பதால்தான் இவ்வளவு பிரச்னைகளும். தேர்தல் நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சைகளுக்கு பா.ஜ.க நிதியுதவி செய்கிறது. கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சைகளை ஆசீர்வதித்து அனுப்புகிறார் ரங்கசாமி. மக்களால் தேர்வுசெய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பதற்கு முன்பே கூட்டணிக் கட்சிகளிடம்கூட கலந்தாலோசிக்காமல், கொரோனா தொற்றால் முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமிக்கிறது பா.ஜ.க. இவர்களுக்குள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாததன் வெளிப்பாடுதான் இவை அனைத்துக்கும் காரணம்.”

“புதுச்சேரியைத் தமிழ்நாட்டுடன் இணைக்க, மத்திய அரசு முயல்கிறது என்று ஏற்கெனவே கூறியிருந்தீர்கள். தற்போது ‘கொங்கு நாடு’ என்ற வார்த்தையை முன்வைத்திருக்கிறது பா.ஜ.க. தொடர்ந்து புதுச்சேரியை ‘நடுநாடு’ என்று குறிப்பிட்டு பா.ஜ.க தரப்பு வரைபடத்தை வெளியிட்டிருக்கிறதே?”

“கொங்கு நாடு என்பது பா.ஜ.க-வுக்குப் பகல் கனவாகத்தான் இருக்கும். ‘நடுநாடு’ என்று புதுச்சேரியைக் குறிப்பிடுவதன் மூலம் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று புரிகிறது. நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலங்களின் அதிகாரங்கள் அனைத்தையும் இழுத்து மத்திய அரசில் குவிக்கிறார். குறிப்பாக, மாநில அரசைச் சேர்ந்த கல்வி, சுகாதாரம், மின்சாரம் போன்றவற்றை மத்தியத் தொகுப்புக்குக் கொண்டு செல்கிறார். நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு இருக்கும் மிருகபலத்தால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்துக் குவித்துவருகிறார்கள்.”

“320 கோடி ரூபாய் மதிப்பில், புதுச்சேரி புதிய சட்டப்பேரவை வளாகம் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்திருக்கிறாரே?”

“தற்போதிருக்கும் சட்டப்பேரவை வளாகத்திலேயே புதிய சட்டப்பேரவையைக் கட்டுவதற்காக நிதி கேட்டு மத்திய அரசை நாங்கள் அணுகியபோது, மாநில அரசின் நிதியில்தான் கட்ட வேண்டும் என்று கூறினார்கள். தற்போது அதற்கான நிதியை யார், எப்படிக் கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. முதல்வரின் ஒப்புதல் இல்லாமல் சபாநாயகரால் இதைச் செய்ய முடியாது. முதல்வர் அமைதியாக இருக்க, சபாநாயகர் நிர்வாகம் தெரியாமல் தன் இஷ்டத்துக்குப் புதிய சட்டமன்றம் குறித்த தகவலைப் பேசிவருகிறார்.”

“புதுச்சேரியில் தங்களிடம் 12 எம்.எல்.ஏ-க்கள் பலம் இருப்பதாகக் கூறிவருகிறது பா.ஜ.க. பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சந்தித்த அந்த எம்.எல்.ஏ-க்கள் தனி மாநில அந்தஸ்து குறித்துப் பேசவில்லையே?”

“அவர்களிடம் இருப்பது ஆறு எம்.எல்.ஏ-க்கள்தான். மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களையும், மூன்று சுயேச்சைகளையும் சேர்த்துத்தான் 12 எம்.எல்.ஏ-க்கள் என்று கூறிவருகிறார்கள். ‘புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காகத்தான் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தேன்’ என்று கூறினார் முதல்வர் ரங்கசாமி. ஆனால், இதுவரை அது குறித்து எங்கும் வாய் திறக்கவில்லை. மத்திய அரசு, மாநில அந்தஸ்து கொடுக்க மறுத்தால், பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறுவாரா ரங்கசாமி?”

“புதுச்சேரி மாநிலத்தை நீண்டகாலம் ஆட்சிசெய்த கட்சி என்று பெயரெடுத்த காங்கிரஸ், இந்தத் தேர்தலில் வெறும் இரண்டு எம்.எல்.ஏ-க்களுடன் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. ஏனாம் தொகுதியில் வேட்பாளரைக்கூட நிறுத்த முடியவில்லை. ஏன் இந்தச் சரிவு?”

“அதிகார துஷ்பிரயோகம் செய்து எங்கள் ஆட்சியைக் கலைத்தது பா.ஜ.க. அதன் பின்னணியில் இருந்தவர் ரங்கசாமி. காங்கிரஸ் கட்சியிலிருந்த சில துரோகிகள், அனைத்துப் பதவிகளையும் அனுபவித்துவிட்டு கடைசி நேரத்தில் கட்சி மாறினார்கள். தேர்தலில் வெற்றிபெறக்கூடிய சூழலை யாருக்கெல்லாம் நாங்கள் உருவாக்கி வைத்திருந்தோமோ அவர்களெல்லாம் வெளியேறி விட்டார்கள். அதுதான் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற முடியாமல் போனதற்குக் காரணம்.”

 “கொங்கு நாடு என்பது பா.ஜ.க-வின் பகல் கனவு!”

“காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்புகளிலிருந்த பெரும்பாலானவர்கள் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்குச் சென்றுவிட்டனர். அனைவருமே சோனியா காந்தியையோ, ராகுல் காந்தியையோ காரணமாகக் கூறாமல், நாராயணசாமி என்ற தனி மனிதரை மட்டும் கைகாட்டுவது ஏன்?”

“கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு ஏதாவது காரணம் கூற வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் ஊழல் செய்யாத முதல்வர். அதுதான் இவர்களெல்லாம் கட்சியிலிருந்து வெளியேறுவதற்குக் காரணம்.”

“சட்டமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க தரப்பில் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் காங்கிரஸ் சார்பில் யாரும் வராததற்குக் காரணம், தேர்தல் தோல்வியை முன்பே கணித்ததால்தானா?”

“அப்போது நான்கு மாநிலங்களுக்குத் தேர்தல் வந்தது. சோனியா காந்தியால் வர முடியாத சூழ்நிலை. தேர்தலுக்கு 15 நாள்களுக்கு முன்பு ராகுல் காந்தி வந்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன் பிறகு, பல மேலிடத் தலைவர்கள் வந்தார்கள். மொழிப் பிரச்னையும் ஒரு முக்கியக் காரணம்!”

“மத்திய இணை அமைச்சராக, பிஸியாக இருந்த நீங்கள் தற்போது எந்தப் பதவியுமின்றி இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?”

“கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திக்க வருகிறார்கள். கட்சிப் போராட்டங்களில் கலந்துகொள்கிறேன். ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கிறேன். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். பதவி இருந்தால்தான் கட்சிப் பணி செய்ய வேண்டும் என்பதில்லை!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism