Published:Updated:

புதுச்சேரி: அதிக இடங்களில் வெற்றி; பாஜக -என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க இடம்பெற்றிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி மாநில சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அதேபோல காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

முன்னாள் முதல்வர்  ரங்கசாமி
முன்னாள் முதல்வர் ரங்கசாமி

10 இடங்களில் தனித்துப் போட்டி என்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பா.ம.க., கடைசி நேரத்தில் அவற்றை வாபஸ் பெற்று பா.ஜ.க-விடம் சரணடைந்தது. வேட்பாளர்கள் பற்றாக்குறையால் சுயேச்சைக்கு ஆதரவளிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது காங்கிரஸ் கட்சி. அதே நேரத்தில், கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற தேர்தல்களில் டெபாசிட் வாங்காத பா.ஜா.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களையும், அமைச்சர்களையும் அலேக்காக தன் பக்கம் தூக்கி 9 தொகுதிகளில் களமிறங்கியது.

இதுவரை எண்ணப்பட்ட 18 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 8 தொகுதிகள், பா.ஜ.க 3 தொகுதிகளில் என 11 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோல, உப்பளம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கென்னடி வெற்றிபெற்ற நிலையில், வில்லியனூர் மற்றும் காரைக்கால் தெற்கு தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்கள் முன்னணியில் இருக்கின்றனர்.

புதுச்சேரி: `மோடியின் தலைமையை ஏற்போருடன் கூட்டணி!' - பா.ஜ.க பொதுச்செயலாளர் ரவி

லாஸ்பேட்டை மற்றும் மாஹே என இதுவரை 2 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கின்றது. இதுதவிர உருளையன்பேட்டை மற்றும் முத்தியால்பேட்டை தொகுதிகளில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கும் நிலையில், திருபுவனை மற்றும் முத்தியால்பேட்டை தொகுதிகளிலும் சுயேட்சைகள் முன்னிலையில் இருக்கின்றனர். இதன்மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி புதுச்சேரியில் ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு