Published:Updated:

புதுச்சேரி: அனுமதியின்றி வைக்கப்பட்ட 'லட்சுமி யானை' சிலை! – தடியடி நடத்தி அப்புறப்படுத்திய போலீஸ்

அகற்றப்பட்ட யானை லட்சுமி சிலை

அனுமதியின்றி பொது இடத்தில் வைக்கப்பட்ட லட்சுமி யானை சிலையை இரவோடு இரவாக அப்புறப்படுத்தியிருக்கிறது புதுச்சேரி போலீஸ்.

புதுச்சேரி: அனுமதியின்றி வைக்கப்பட்ட 'லட்சுமி யானை' சிலை! – தடியடி நடத்தி அப்புறப்படுத்திய போலீஸ்

அனுமதியின்றி பொது இடத்தில் வைக்கப்பட்ட லட்சுமி யானை சிலையை இரவோடு இரவாக அப்புறப்படுத்தியிருக்கிறது புதுச்சேரி போலீஸ்.

Published:Updated:
அகற்றப்பட்ட யானை லட்சுமி சிலை

புதுச்சேரியின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, நவம்பர் 30-ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சியின்போது சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தது. அதையடுத்து யானை லட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வனத்துறைக்கு அருகே இருக்கும் காளத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் யானை லட்சுமிக்கு கற்சிலை அமைக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

யானை லட்சுமி சிலை அகற்றம்
யானை லட்சுமி சிலை அகற்றம்

இதற்கிடையில் யானை லட்சுமி உயிரிழந்த சாலையில், ஒரு சிலர் பூக்கள் தூவியும், கற்பூரம் ஏற்றியும் வழிபட ஆரம்பித்தனர். அவர்கள் திடீரென 2-ம் தேதி இரவு அங்கு 2 அடி உயரத்தில் யானை சிலை ஒன்றை அமைத்து அதற்கு ’யானை லட்சுமி’ என்று பெயரும், பேனர்களும் வைத்தனர். அத்துடன் அந்தச் சிலைக்கு சிறப்பு பூஜைகளையும் நடத்தினர். கலவைக் கல்லூரி பள்ளியின் சுற்றுச்சுவரையொட்டி, பொது இடத்தில் அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டது குறித்து போலீஸுக்குப் புகார்கள் சென்றன. அதையடுத்து உடனே அங்கு விரைந்த போலீஸார், அனுமதியின்றி வைக்கப்பட்ட அந்தச் சிலையை இரண்டு வாரங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று எச்சரித்தனர்.

ஆனால் அதன் பிறகும் அந்தச் சிலை அகற்றப்படாததுடன், தினமும் அந்தச் சிலைக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றுவந்தன. அதன் காரணமாக பொதுமக்களும் அங்கு குவிய ஆரம்பித்ததால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர், போலீஸார் பாதுகாப்புடன் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட அந்தச் சிலையை அகற்றும் பணியில் நேற்று இரவு 11 மணிக்கு ஈடுபட்டனர். அந்தத் தகவலறிந்து அங்கு கூடிய சில சிவனடியார்களும், சிலை வைத்தவர்களும் சிலையை அப்புறப்படுத்தக் கூடாது என்று நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களைத் தடுக்க முயன்ற போலீஸாரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது லேசான தடியடி மூலம் அவர்களை விரட்டியடித்த போலீஸார், செய்தியாளர்களையும் படமெடுக்க அனுமதிக்கவில்லை. அதையடுத்து ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் அங்கு வைக்கப்பட்டிருந்த யானை சிலை அகற்றப்பட்டு நகராட்சி அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

 “யானை லட்சுமி அனைத்துத் தரப்பு மக்களின் அன்பையும் பெற்றிருக்கிறது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அதன் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. அதேசமயம் சிலரின் சுய விளம்பரத்துக்காக வைக்கப்பட்ட இந்தச் சிலை, எதிர்காலத்தில் அங்கு படிக்கப்போகும் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாகவே இருக்கும். போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும்” என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துவரும் சமூக ஆர்வலர்கள், துரிதமாகச் செயல்பட்ட நகராட்சி ஊழியர்களையும் போலீஸாரையும் பாராட்டிவருகின்றனர்.