Published:Updated:

`கிரண்பேடி vs நாஞ்சில் சம்பத்' - இது புதுச்சேரி கலாட்டா!

 நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை அவதூறாகப் பேசிவிட்டதாக நாஞ்சில் சம்பத்தை கைதுசெய்ய ஆர்வம் காட்டுகிறது புதுச்சேரி காவல்துறை. இந்த நடவடிக்கை குறித்துப் பேசுகிற நாஞ்சில் சம்பத், `இந்தக் கைது நடவடிக்கைகளின் பின்னே சங்கிகள் இருக்கிறார்கள்' எனக் குமுறுகிறார்.

புதுச்சேரி மாநில அரசியலில், முதல்வர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இடையிலான முட்டல் மோதல்கள்தான் எப்போதுமே சூடுபறக்கும். ஆனால், இந்த முறை கிரண்பேடியோடு மோதியிருப்பது நம்ம ஊர் நாஞ்சில் சம்பத். விவகாரம் கைது வரை போயிருக்கிறது.!

அரசியல் மேடைகளில், அனல் பறக்கும் பேச்சுக்களால் கைதட்டல்களைக் குவித்துவரும் நாஞ்சில் சம்பத், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க & காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவந்தார். இதன் ஒருபகுதியாக, புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போது, அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக அவதூறான வார்த்தைகளை நாஞ்சில் சம்பத் பயன்படுத்திவிட்டார் என்று 28.03. 2019 அன்று வழக்கு பதிவாகியுள்ளது.

`ஆசிரியர்களும் வீட்டில் இருந்தே பணி செய்யுங்கள்..!’ - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை #NowAtVikatan
கிரண்பேடி
கிரண்பேடி

21-3-2020 அன்று, இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராக வேண்டும் என்று சொல்லி, நாஞ்சில் சம்பத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், நாடு முழுக்க கொரோனா பீதி இருப்பதால், விசாரணையில் ஆஜராவதை தள்ளிப்போடும்படி நாஞ்சில் சம்பத் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், புதுச்சேரி போலீஸார் தமிழ்நாட்டுக்குள் வந்து நாஞ்சில் சம்பத்தை கைது செய்யும் முயற்சியில் இறங்க... விவகாரம் பரபரப்பாகிவிட்டது.

என்ன நடந்தது என்ற விவரம் அறிய நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம்.

``திராவிட இயக்கத்தை நேசிக்கிற, சுவாசிக்கிற நான், எனக்கு வரமாகக் கிடைத்த சொல்லாற்றலை மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணிக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டேன். எனவே, மோடிக்கு எதிராக தி.மு.க-வுக்கு ஆதரவாகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பரப்புரைசெய்தேன்.

இந்த வகையில்தான் புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக தவளக்குப்பம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்திலும் பேசினேன். அந்தப் பேச்சுக்கு எதிராகத்தான் இப்போது என் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இப்படியொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற விவரம்கூட முதலில் எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது இந்த வழக்கில், என்னைக் கைது செய்வதற்காக என் சொந்த ஊருக்கே வந்து புதுச்சேரி போலீஸார் காட்டும் வேகமும் நோக்கமும் எனக்குப் புரிகிறது.

அதாவது, திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்காகப் பல்வேறு வியூகங்களை வகுத்து, அதெல்லாம் சாத்தியமாகாத சூழலில், அதன் குரலாக எதிரொலிக்கிற என் குரலை ஒடுக்குவதற்கு அவர்கள் திட்டமிடுகிறார்கள். அதனால்தான் காலாவதியாகிப்போன ஒரு வழக்கை கையில் எடுத்து, `21-ம் தேதி நான் அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும்' என்று ஆய்வாளர் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

Representational Image
Representational Image

`கொரோனா தொற்று அபாயகரமான அளவில் பரவிவரும் இந்தச் சூழலில், பயணங்களை ஒத்திவைத்திருக்கிற நான், இந்த முறை ஆஜராக முடியாது. வேறொரு சூழலில் ஆஜராகிறேன்' என ஏற்கெனவே சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். ஆனாலும்கூட, 21-ம் தேதிக்கு முன்பாக 19-ம் தேதியே என் சொந்த ஊருக்குத் தேடிவந்து என்னைக் குண்டுக்கட்டாகக் கைது செய்துகொண்டு போக புதுச்சேரி போலீஸார் அவசரப்பட்டனர்.

மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைதுசெய்யும்போது, கைதுக்கு உள்ளாகிறவர் குடியிருக்கிற காவல்நிலையத்தில் உரிய அனுமதியைப் பெறவேண்டும். ஆனால் புதுச்சேரி போலீஸாரோ, திருவட்டாறு காவல் நிலையத்தில் தகவல்கூட தெரிவிக்காமல் என்னைக் கைதுசெய்ய வந்திருந்தனர். இந்த விவரங்களையெல்லாம் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் நான் தகவல் சொன்னேன். உடனே தி.மு.க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் வந்திருந்து, சட்ட நுணுக்கங்களை எடுத்துக்கூறினர். இதற்கிடையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரே திருவட்டாறு காவல்நிலைய ஆய்வாளரைத் தொடர்புகொண்டு, கைது நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தி, புதுச்சேரி போலீஸாரை திருப்பியனுப்ப வழிசெய்தார்.

`மிரட்டல் புகார்; திடீர் விபத்து!’ - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணிப்பேட்டை நகராட்சி கமிஷனர்?

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நான் மிகக் கடுமையாக பிரசாரம் செய்துவருகிறேன். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஃபாஸிஸ்டுகளும் சங்கிகளும், என்னை முடக்குவதற்கான ஒத்திகையாகத்தான் இவ்வழக்கை கையில் எடுத்திருக்கிறார்கள். ஆனால், இதைத்தாண்டிய உயரத்துக்கெல்லாம் நான் பறப்பேன். ஏனெனில், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பற்றித் தவறாக நான் எந்தப் பேச்சும் பேசவில்லை. `மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரின் ஆட்சி புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கும்போது, கூடுதல் அரசியலமைப்பு அதிகாரத்தோடு இம்மாநிலத்தின் ஆளுநர் செயல்படுகிறார். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல' என்றுதான் பேசினேன்.

கொரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் இந்தச் சூழலில், இவ்வழக்கில் ஆஜராவதில் கால அவகாசம் வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறேன்" என்றார்.

புதுச்சேரி
புதுச்சேரி

தவளக்குப்பம் காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமாரிடம் பேசினோம். ``கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, பொதுமக்களிடையே தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்காமல், புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி பற்றி தனிப்பட்ட முறையில் பெண்மையை இழிவுப்படுத்தி மிரட்டுவதுபோல் நாஞ்சில் சம்பத் பேசியதாகப் புகார் கிடைத்தது. இதையடுத்தே 21-ம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு 3 சம்மன்கள் அனுப்பினோம். ஆனால், எந்த சம்மனுக்கும் அவர் முறையாக பதிலளிக்கவில்லை என்பதால்தான் அவரது சொந்த ஊருக்கே சென்று கைதுசெய்ய முயன்றோம். இதற்கு உள்ளூர் காவல்துறையினரிடம் அனுமதிபெற வேண்டிய கட்டாயம் இல்லை” என்றவரிடம், `21-ம் தேதி உங்கள் முன் ஆஜராக வேண்டுமென்ற நிலையில், 19-ம் தேதியே நீங்கள் கைது நடவடிக்கையை மேற்கொண்டது ஏன்?' என்ற கேள்வியை முன் வைத்தபோது, ``எந்த சம்மனுக்கும் அவர் ஆஜராகமாட்டார் என்பதால்தான் முன்கூட்டியே சென்றோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு