அரசியல்
Published:Updated:

புதுச்சேரி ஆட்சி கவிழ பா.ஜ.க மட்டுமா காரணம்?

நாராயணசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
நாராயணசாமி

வீழ்ந்த நாராயணசாமி!

‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் எதிரணியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களை வளைத்து, அந்த ஆட்சிக்கட்டிலை உடைத்து, தனது புதிய தலைமையில் ஆட்சிப்பரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்திவரும் பா.ஜ.க., லேட்டஸ்ட்டாகப் புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியையும் ‘வெற்றிகரமாக’ கவிழ்த்திருக்கிறது!

தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளுநர்கள் மூலம் அரசுக்குப் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுப்பது பா.ஜ.க-வின் ஸ்டைல். அந்த வகையில், புதுச்சேரியில் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றியதும் கிரண் பேடியைத் துணைநிலை ஆளுநராகத் தன் தரப்பில் களமிறக்கியது மத்திய அரசு. தேர்தலைச் சந்திக்காத நாராயணசாமி முதல்வர் ஆனார்.

பா.ஜ.க-வின் முதல் அஸ்திரம்!

என்.ஆர்.காங்கிரஸில் ஏழு எம்.எல்.ஏ-க்கள், அ.தி.மு.க-வில் நான்கு எம்.எல்.ஏ-க்கள் வென்றிட, அதே கூட்டணியில் இருந்த பா.ஜ.க போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழந்திருந்தது. இந்தநிலையில், 2017-ல் தங்கள் கட்சியைச் சேர்ந்த மூன்று நிர்வாகிகளை நியமன எம்.எல்.ஏ-க்களாக்கி, புதுச்சேரி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்தது மத்திய உள்துறை அமைச்சகம். அப்போதே ஆட்சிக் கவிழ்ப்புக்கான காய்களை நகர்த்தத் தொடங்கிய பா.ஜ.க., முதல்வர் பதவி கிடைக்காத அதிருப்தியிலிருந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு முதலில் குறிவைத்தது. ஆரம்பத்தில் தயங்கிய அவர், பின் வீழ்த்தப்பட்டார். அதே அஸ்திரத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், எம்.எல்.ஏ-க்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் மூவரையும் அடுத்தடுத்து வீழ்த்தியது பா.ஜ.க.

அதனால், ஆளும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டணி Vs என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி இடையிலான பலம் என்பது 14-14 என்ற விகிதத்தில் சமமானது. இந்தநிலையில், துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை நீக்கிவிட்டு, தமிழிசை சௌந்தரராஜனை அதிரடியாகக் களமிறக்கியது மத்திய அரசு. மீதமிருக்கும் நாள்களில் அவர் மூலம் சில திட்டங்களைச் செயல்படுத்தி ‘பிரச்னை கிரண் பேடிதான்... பா.ஜ.க அல்ல’ என்ற பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

புதுச்சேரி ஆட்சி கவிழ பா.ஜ.க மட்டுமா காரணம்?

பா.ஜ.க-வின் இரண்டாம் அஸ்திரம்!

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, பிப்ரவரி 22-ம் தேதி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டார் துணைநிலை ஆளுநர் தமிழிசை. இரு தரப்பும் சம பலத்துடன் இருந்தாலும், ‘நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை’ என்று சபாநாயகர் மூலம் எதிரணிக்கு ‘செக்’ வைக்கத் திட்டமிட்டிருந்தது காங்கிரஸ். ஆனால், கிரண் பேடிக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணனும், தி.மு.க எம்.எல்.ஏ வெங்கடேசனும் 21-ம் தேதியன்று அடுத்தடுத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், பலமிழந்து துவண்டுபோனார் நாராயணசாமி.

இறுதி அத்தியாயம்!

22-ம் தேதி காலை 10 மணிக்கு மிச்சமிருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் புடைசூழ இறுகிய முகத்துடன் பேரவைக்குள் வந்த முதல்வர் நாராயணசாமி, ‘‘நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருப்பதால், பா.ஜ.க ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுகிறது. ஆட்சிக் கவிழ்ப்புக்கு அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். ஆட்சி முடிய 10 நாள்களே உள்ள நிலையில், மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஆட்சியை இப்படிக் கவிழ்ப்பது ஜனநாயகப் படுகொலை. சரியாகச் சொல்ல வேண்டுமானால் இப்படிச் செய்வது அரசியல் விபசாரம்’’ என்று விமர்சித்தவர், ‘‘பச்சோந்திகளாக இருக்காதீர்கள்’’ என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய அமைச்சர்களையும் எம்.எல்.ஏ-க்களையும் கடுமையாகத் தாக்கிப் பேசிவிட்டு, சிவப்பேறிய கண்களுடன் வெளிநடப்பு செய்தார். அவருடன் வந்த எம்.எல்.ஏ-க்களும் வெளியேறியதும், ‘பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேறவில்லை’ என்று அறிவித்தார் சபாநாயகர் சிவக்கொழுந்து. தொடர்ந்து தமிழிசையைச் சந்தித்த நாராயணசாமி, தன் ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதன் மூலம் புதுச்சேரியில் நான்கரை வருடங்களாக நீடித்து வந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

புதுச்சேரி ஆட்சி கவிழ பா.ஜ.க மட்டுமா காரணம்?

வீழ்ந்த நாராயணசாமி!

கொந்தளிப்பிலிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘இந்த ஆட்சி கவிழ்வதற்கு அச்சாரமிட்டதே நாராயணசாமியின் முதல்வர் கனவுதான். 30 வருடங்களுக்கு மேலாக டெல்லி அரசியலில் கோலோச்சிவிட்டு, அங்கு ஆட்சி போன பிறகு பின்வாசல் வழியாக வந்து முதல்வர் ஆனதால்தான், எதிரணிக்குத் தாவும் முடிவுக்கு நமச்சிவாயம் வந்தார். கட்சிக்காக உழைத்தவர்களைத் தூக்கி வீசிவிட்டு, தான் முதல்வராக வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கட்சிக்குத் தொடர்பே இல்லாத லாட்டரிச்சீட்டு வியாபாரியான ஜான்குமாரையும், ரியல் எஸ்டேட் செய்துவந்த சிவக்கொழுந்துவையும், அரசு ஊழியரான தீப்பாய்ந்தானையும், பா.ம.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட அனந்தராமனையும் எம்.எல்.ஏ-க்களாக்கினார். தனக்காகத் தொகுதியை விட்டுத் தரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை.

இதுவரை எந்தச் சர்ச்சையிலும் சிக்காத லட்சுமி நாராயணனை ஓரங்கட்டிவிட்டு, கொலை வழக்கில் தலைமறைவாக இருந்துவிட்டு பிறகு எம்.எல்.ஏ-வான அனந்தராமனுக்கு அரசு கொறடா பதவி கொடுத்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவி காலியானபோதும், முதன்முறை எம்.எல்.ஏ-வான சிவக்கொழுந்துவை அமரவைத்தார். அனுபவம் வாய்ந்த வேறு யாராவது சபாநாயகராக இருந்திருந்தால், எங்கள் எம்.எல்.ஏ-க்களை பேரம் பேசிய விவகாரத்தை வைத்து, எதிரணியைச் சேர்ந்த இரண்டு

எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்து ஆட்சியைக் காப்பாற்றியிருப்பார். கட்சித் தலைவர் பதவியைக்கூட லட்சுமி நாராயணனுக்குத் தர மனமில்லாதவர் நாராயணசாமி. இப்படிக் கட்சியைப் பற்றி கவலைப்படாமல் அவர் சுயநல அரசியலைச் செய்ததால்தான் இப்போது ஆட்சியை இழந்து நிற்கிறோம். வரும் தேர்தலிலாவது கட்சிக்கு உழைத்தவனுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பளித்தால்தான் கட்சி உருப்படும்’’ என்றார்கள் ஆதங்கத்தோடு.

ஆட்சி கவிழ்ந்ததற்கு பா.ஜ.க-வின் அஸ்திரங்கள் காரணமாக இருந்தாலும், நிர்வாகிகளின் அர்த்தமுள்ள ஆதங்கக் குரல்களை காங்கிரஸ் தலைமை காதுகொடுத்துக் கேட்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!