Published:Updated:

ஆட்டத்தைத் தொடங்கிய பா.ஜ.க... ரங்கசாமிக்குக் கைகொடுக்குமா தி.மு.க?

புதுச்சேரி அரசியல்
பிரீமியம் ஸ்டோரி
News
புதுச்சேரி அரசியல்

புதுச்சேரி களேபரம்

கொரோனா தொற்று ஏற்பட்டு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கே தெரியாமல் தங்கள் கட்சியைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்கள் ஆக்கியிருக்கும் பா.ஜ.க., ராஜ்யசபா எம்.பி-க்கும் ஆளைத் தேர்வு செய்துவிட்டதாக வெளிவரும் தகவல்கள் புதுச்சேரி அரசியலைத் தகிக்கவைத்திருக்கிறது!

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பா.ஜ.க ஆறு தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. எதிரணியில், காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், தி.மு.க ஆறு இடங்களிலும் வெற்றிபெற்றன. எதிர்பாராத வகையில் ஆறு சுயேச்சைகளும் வெற்றிபெற்றார்கள். பெரும்பான்மைக்குத் தேவையான 16 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து ரங்கசாமியைச் சந்தித்த பா.ஜ.க மேலிடப் பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா, ‘‘நீங்கள்தான் முதல்வர். ஆனால், எங்களுக்கு ஒரு துணை முதல்வர், இரண்டு அமைச்சர் பதவிகள் வேண்டும்’’ என்று கேட்டிருக்கிறார். துணை முதல்வர் பதவியை பா.ஜ.க-வுக்குக் கொடுத்தால், தன்னால் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது என்று உணர்ந்த ரங்கசாமி, ‘‘புதுச்சேரியில் துணை முதல்வர் பதவியே இல்லையே...’’ என்று பிடிகொடுக்காமல் பேசியிருக்கிறார். அப்போது, ‘‘மாநில முதல்வர் என்ற முறையில் நீங்கள் பரிந்துரைத்தால், துணை முதல்வர் பதவியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்’’ என்று அழுத்தம் கொடுத்திருக்கிறார் சுரானா.

ஆட்டத்தைத் தொடங்கிய பா.ஜ.க... ரங்கசாமிக்குக் கைகொடுக்குமா தி.மு.க?

இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், மே 7-ம் தேதி ரங்கசாமி மட்டும் முதல்வராகப் பதவியேற்றார். அதற்கு முந்தைய தினம் துணை முதல்வர் பதவி குறித்து சேலத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘‘அப்படியொரு பதவி இல்லை. எனவே, அது குறித்துப் பேச வேண்டாம்’’ என்று கூறியதால் குழப்பமடைந்தது பா.ஜ.க. அதனால், ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்ற நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ‘‘பா.ஜ.க-வுக்குத் துணை முதல்வர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள்’’ என்று தட்டிவிட்டார். தொடர்ந்து ரங்கசாமியின் குடுமி நம் கையில் இருக்க வேண்டும் என்று நினைத்த பா.ஜ.க தரப்பு, ‘‘ஒரு துணை முதல்வர், ஓர் அமைச்சர் பதவியுடன் சபாநாயகர் பதவியும் எங்களுக்கு வேண்டும்’’ என்று ஆரம்பித்திருக் கிறார்கள். அதற்கு, ‘‘ஆறு இடங்களில் வெற்றிபெற்ற உங்களுக்கு எப்படி மூன்று அமைச்சர்களைத் தர முடியும்... அதிலும், சபாநாயகர் பதவியை எப்படித் தர முடியும்? துணை சபாநாயகர் பதவி வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்று மறுத்திருக்கிறார்.

அதன் பிறகு உடல்நலக் குறைவு காரணமாக பா.ஜ.க பொறுப்பாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்த ரங்கசாமி, அவர்களின் போன் அழைப்புகளையும் ஏற்கவில்லை. அதையடுத்து சுயேச்சைகளை வளைத்து தங்கள் எம்.எல்.ஏ-க்கள் பலத்தை உயர்த்தத் திட்டமிட்ட பா.ஜ.க., ‘தேர்தலுக்குச் செலவு செய்த தொகையுடன் 5 கோடி ரூபாய்’ என்ற ஆஃபருடன் பேரத்தை நடத்திவருவதாகத் தகவல்.

மே 9-ம் தேதி ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தங்கள் எம்.எல்.ஏ-க்களின் பலத்தை உயர்த்த இதுதான் சரியான சமயம் என்று நினைத்த மத்திய பா.ஜ.க அரசு, தங்கள் கட்சியைச் சேர்ந்த கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக்பாபு மூவரையும் நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமித்து உத்தரவு வெளியிட்டது. ஏற்கெனவே ஏனாம் தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ-வான கொல்லப்பள்ளி நிவாஸ் அசோக் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்திருந்ததால், பா.ஜ.க-வும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் 10 - 10 எம்.எல்.ஏ-க்கள் என்ற விகிதத்தில் சம பலத்தில் இருக்கின்றன.

முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூழலில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்கள் பதவி ஏற்காத நிலையில், இரவோடு இரவாக பா.ஜ.க அரங்கேற்றிய இந்தச் செயல் கட்சிகளைத் தாண்டி பொதுமக்களையும் அதிர்ச்சியடையவைத்தது. மத்திய உள்துறையின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில், ‘‘இது அரசியல் மற்றும் ஜனநாயகப் படுகொலை’’ என்று பா.ஜ.க-வையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துவரும் நெட்டிசன்கள், ‘‘தி.மு.க-வுடன் கூட்டணிவைத்து ஆட்சியை என்.ஆர்.காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ராமலிங்கம்,, வெங்கடேசன், அசோக்பாபு
ராமலிங்கம்,, வெங்கடேசன், அசோக்பாபு

அதேபோல, எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்புக்காக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணனைத் தற்காலிக சபாநாயகராகத் தேர்வுசெய்து அதற்கான கோப்பை ஆளுநர் தமிழிசைக்கு அனுப்பிவைத்தார்கள். பா.ஜ.க-வின் அழுத்தம் காரணமாக ஆளுநர் அதற்கு அனுமதி தரவில்லை என்று குற்றம் சுமத்துகிறது என்.ஆர்.காங்கிரஸ் தரப்பு. தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை பா.ஜ.க-வின் இந்தச் செயலைக் கண்டித்திருப்பதுடன், ‘‘புதுச்சேரியில் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி கொல்லைப் புறமாக பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது’’ என்று குற்றம் சுமத்தியிருக்கின்றன. ‘‘தி.மு.க தங்கள் எம்.எல்.ஏ-க்கள் மூலம் ரங்கசாமியை ஆதரித்து ஜனநாயகத்தைக் காக்க வேண்டும்’’ என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க... காங்கிரஸ் ஆட்சியில் கடைசிவரை அமைச்சராக இருந்து, அறுவடையை முடித்துக்கொண்டு பா.ஜ.க-வுக்குத் தாவிய நமச்சிவாயம், ஊசுடு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தீப்பாய்ந்தானையும் ராஜினாமா செய்யவைத்து தம்முடன் அழைத்துச் சென்றார். ஆனால், அந்தத் தொகுதியில் சாய் ஜெ.சரவணக்குமாருக்கு சீட் கொடுத்த பாஜ.க., தீப்பாய்ந்தானைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது, நியமன எம்.எல்.ஏ பதவி வாங்கித்தருவதாகக் கூறி அவரைச் சமாதானப்படுத்தினார் நமச்சிவாயம். ஆனால், ஸ்வீட் பாக்ஸ்களைப் பெற்றுக்கொண்டு எண்ணெய் கம்பெனி அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், வழக்கறிஞர் என கட்சிக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லாத மூன்று பேர் நியமன எம்.எல்.ஏ-க்களாக அறிவிக்கப்பட்டதும், நொந்துபோனார் தீப்பாய்ந்தான். வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அவரது சுயநல அரசியலுக்காக பலி கொடுத்துவிட்டாரே என்று முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் பட்டியல் சமூக மக்கள்.

புதுச்சேரி அரசியலில் இன்னும் என்னென்ன திருப்பங்கள் அரங்கேறுமோ?