Published:Updated:

நாற்காலி சண்டை... நாற்றமெடுக்கும் புதுச்சேரி அரசியல்!

இரண்டு அமைச்சர் பதவிதான் தர முடியும். அதில் ஒன்றை நீங்கள் துணை முதல்வராக மாற்றிக்கொள்ளுங்கள். ஒரு துணை சபாநாயகர் தருகிறேன்

பிரீமியம் ஸ்டோரி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றி ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. வெறும் ஆறு எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்திருக்கும் பா.ஜ.க, சுயேச்சைகள் மற்றும் நியமன எம்.எல்.ஏ-க்களை வைத்துக் கொண்டு அமைச்சரவையில் அதிக இடங்களைக் கேட்டு ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்துவருகிறது. இதனால் புதிய ஆட்சி அமைந்து, முதல்வரும் பதவியேற்றுக்கொண்ட நிலையில், அமைச்சரவை இறுதி செய்யப்படாததால் முடங்கிக் கிடக்கிறது புதுச்சேரி மாநிலம்.

புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க நினைத்த பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உட்பட ஐந்து எம்.எல்.ஏ-க்களை வளைத்து, நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தது. நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, அ.தி.மு.க கூட்டணியுடன் தேர்தலை சந்திப்பதுதான் பா.ஜ.க முதலில் போட்டு வைத்திருந்த கணக்கு. ஆனால், புதுச்சேரியில் ரங்கசாமியை எதிர்த்து நிற்பது தற்கொலைக்கு சமம் என்பதை உணர்ந்த பா.ஜ.க, அவருடன் கூட்டணி வைத்ததுடன் தொகுதிப் பங்கீட்டிலும் சரணடைந்தது.

நாற்காலி சண்டை... நாற்றமெடுக்கும் புதுச்சேரி அரசியல்!

தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்றால் நமச்சிவாயத்தை முதல்வராக்கிவிடலாம் அல்லது முதல்வர் பதவியை மட்டும் ரங்கசாமிக்கு விட்டுக்கொடுத்து, அமைச்சரவையை அ.தி.மு.க-வுடன் பங்கிட்டுக்கொள்ளலாம் என்று திட்ட மிட்டது பா.ஜ.க. அதனால்தான் தேர்தல் பிரசாரத்தின்போது “நான்தான் முதல்வர்” என்று ரங்கசாமி சொன்னபோதும், “முதல்வர் யார் என்பதைத் தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ-க்கள் முடிவு செய்வார்கள்” என்று பேட்டி கொடுத்தார் பா.ஜ.க-வின் தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுராணா. தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பா.ஜ.க 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.

துணை முதல்வர் பதவி கேட்டு நமச்சிவாயம் அழுத்தம் கொடுத்ததால், ரங்கசாமியை சந்தித்த பா.ஜ.க நிர்வாகிகள், “துணை முதல்வர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள், சபாநாயகர், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் உள்ளிட்ட பதவிகள் எங்களுக்கு வேண்டும்” என்று வலியுறுத்தினார்கள். அதற்கு, “முதல்வர் பதவியையும் சேர்த்து மொத்தமே ஆறு அமைச்சர் பதவிகள்தான் உள்ளன. ஆறு தொகுதிகளில் வெற்றிபெற்ற உங்களுக்கு எப்படி மூன்று அமைச்சர் பதவிகளைக் கொடுக்க முடியும்? இரண்டு மட்டும்தான்” என்று கறார்காட்டிய ரங்கசாமி, மே 7-ம் தேதி அவர் மட்டும் முதல்வராக பதவி யேற்றுக்கொண்டார்.

மறுநாளே கொரோனா தொற்று காரணமாக ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, இதுதான் வாய்ப்பு என்று நினைத்த மத்திய அரசு, பா.ஜ.க-வைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க் களாக நியமித்துவிட்டது. அதேவேகத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களான கொல்லப்பள்ளி நிவாஸ் அசோக், சிவசங்கரன், அங்காளன் மூவரையும் தங்கள் பக்கம் இழுத்தது. இதையடுத்து, ரங்கசாமி மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் அவரைச் சந்தித்த பா.ஜ.க பொறுப்பாளர் நிர்மல்குமார் சுராணா, “இப்போது எங்கள் கட்சியில் 12 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். நாங்கள் கேட்ட பதவிகளைக் கொடுங்கள்’’ என்று கெத்து காட்டினார். அப்போதும் அசைந்துகொடுக்காத ரங்கசாமி, “இரண்டு அமைச்சர் பதவிதான் தர முடியும். அதில் ஒன்றை நீங்கள் துணை முதல்வராக மாற்றிக்கொள்ளுங்கள். ஒரு துணை சபாநாயகர் தருகிறேன்” என்று கூறிவிட்டார். ஆனால், தனது கோரிக்கையில் விடாப்பிடியாக நின்றது பா.ஜ.க.

நாற்காலி சண்டை... நாற்றமெடுக்கும் புதுச்சேரி அரசியல்!

இந்தநிலையில்தான் மே 26-ம் தேதி எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு முடிந்தவுடன், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 3,000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி கொடுப்பதற்காக ரங்கசாமி அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அன்றைய தினமே அனுமதி கொடுத்தார். இதனால், கோபமடைந்த பா.ஜ.க நிர்வாகிகள், “அமைச்சரவைப் பங்கீடு முடிவதற்குள் கோப்புக்கு ஏன் அனுமதி கொடுத்தீர்கள்?’’ என்று தமிழிசையிடம் காட்டம் காட்டியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டது.

பொதுவாகவே, தனது மௌனத்தாலேயே எதிராளிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வித்தை தெரிந்தவர் ரங்கசாமி. மேற்கண்ட விவகாரத்துக்குப் பிறகு, பா.ஜ.க நிர்வாகிகளை சந்திப்பதைட்த் தவிர்த்ததுடன், அமித் ஷா உள்ளிட்டவர்களின் போன் அழைப்புகளையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. “பா.ஜ.க வசம் 12 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். நம் கட்சியையும் ஆட்சியையும் முடக்கிவிடுவோம் என்கிறார்கள். ஏன் வம்பு?” என்று ஒருவர் ரங்கசாமியிடம் கூற... “அப்படிப் பார்த்தால் தி.மு.க, காங்கிரஸ் கட்சியினரை சேர்த்து நம்மிடம் 21 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள்” என்று நமுட்டு சிரிப்பை உதிர்த்திருக்கிறார். இதுவே, அவர் எதற்கும் தயார் என்பதை உணர்த்துகிறது. இப்படி ரங்கசாமியிடம் இருந்து எந்த சிக்னலும் வராததால், டெல்லிக்குப் பறந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் நமச்சிவாயமும் ஏம்பலம் செல்வமும் ஜெ.பி.நட்டாவை சந்தித்து புலம்பிவிட்டு திரும்பியிருக்கிறார்கள்.

ஆக்ஸிஜன் படுக்கைகள் தொடங்கி உயிர்க்காக்கும் உபகரணங்கள் வரை இல்லை என்று கதறுகிறார்கள் நோயாளிகள். புதுச்சேரி மக்களைக் கொத்துக் கொத்தாக காவு வாங்கிக் கொண்டிருக்கிறது கொரோனா இரண்டாவது அலை. தனக்கு ஓட்டுப் போட்ட மக்களின் பிணங்களின் மீதே அமர்ந்துகொண்டு அருவருப்பு அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு