Published:Updated:

அமித் ஷா-வின் அதிரடிப் பேச்சு... அதிருப்தியில் ரங்கசாமி... தனித்து இறங்குகிறதா என்.ஆர்.காங்கிரஸ்?

ரங்கசாமி
பிரீமியம் ஸ்டோரி
ரங்கசாமி

புதுச்சேரி பாலிடிக்ஸ்

அமித் ஷா-வின் அதிரடிப் பேச்சு... அதிருப்தியில் ரங்கசாமி... தனித்து இறங்குகிறதா என்.ஆர்.காங்கிரஸ்?

புதுச்சேரி பாலிடிக்ஸ்

Published:Updated:
ரங்கசாமி
பிரீமியம் ஸ்டோரி
ரங்கசாமி

‘‘புதுச்சேரியில் பா.ஜ.க தலைமையில்தான் ஆட்சி அமையும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றவைத்திருக்கும் நெருப்பால், கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்.ஆர்.காங்கிரஸ்.

முதல்வர் பதவி பறிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி 2011-ல் ஆட்சியைப் பிடித்தார். அப்போது முதல் என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணியிலிருக்கிறது பா.ஜ.க. புதுச்சேரியில் அடித்தளமும் வாக்குவங்கியும் இல்லாத பா.ஜ.க., கடந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டைப் பறிகொடுத்தது. இந்தநிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் போட்டியிடுவதுடன், கூட்டணியிலிருக்கும் அ..தி.மு.க மற்றும் பா.ஜ.க-வுக்கு தலா ஆறு இடங்களை ஒதுக்கலாம் என்பதுதான் ரங்கசாமி போட்டுவைத்திருந்த கணக்கு.

தன்னை ஒன் மேன் ஆர்மியாக நினைத்துக்கொண்டு வலம்வரும் ரங்கசாமி, தேர்தல் வரும் நேரத்தில் மட்டுமே வெளியில் தலைகாட்டுவார். ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கைகொண்டவரான அவருக்கு, ‘ஸ்ரீஅப்பா பைத்தியம் சுவாமிகள் கோயில்’ குருக்கள் கூறுவதுதான் வேதவாக்கு. எவ்வளவு சீரியஸான பிரச்னை குறித்து ரங்கசாமியிடம் விவாதிக்கச் சென்றாலும் ‘பார்க்கலாம்’ என்ற ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு, தன் நண்பரின் வாட்ச் கடையில் அமர்ந்து ஓடுகிற, ஓடாத கடிகாரங்களில் மணி பார்க்கத் தொடங்கிவிடுவார். கடைசி நேரம் வரை அவரைத் தவிர அவரது முடிவை யாராலும் கணிக்க முடியாது. இது தெரியாத பா.ஜ.க-வின் புதுச்சேரி பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, கூட்டணி குறித்துப் பேசுவதற்காகக் குஷியாகக் கிளம்பி, தொடர்ச்சியாக மூன்று முறை ரங்கசாமியைச் சந்திக்கச் சென்றார். அதன் பிறகு, அன்றாடம் அவர் எலுமிச்சைப்பழத்தைத் தலையில் தேய்த்துக் குளித்துக்கொண்டிருக்கிறாராம்... அவ்வளவு கொதிப்பு!

அமித் ஷா-வின் அதிரடிப் பேச்சு... அதிருப்தியில் ரங்கசாமி... தனித்து இறங்குகிறதா என்.ஆர்.காங்கிரஸ்?

அதன் பிறகு, ரங்கசாமியைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல், ‘புதுச்சேரியில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும்’ என்று காய்நகர்த்திய பா.ஜ.க., அமலாக்கத்துறை ஆயுதத்தால் காங்கிரஸ் கட்சியிலிருந்த அமைச்சர்களையும் எம்.எல்.ஏ-க்களையும் வீழ்த்தியது. காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தியிலிருந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை, ‘நீங்கள்தான் முதல்வர்’ என்ற வாக்குறுதி கொடுத்து தங்கள் பக்கம் இழுத்தது. முதல்வர் பதவிக்காகத் தனிக்கட்சி தொடங்கிய ரங்கசாமியும், அதே முதல்வர் பதவிக்காகக் கட்சி மாறிய நமச்சிவாயமும் தற்போது ஒரே அணியில் இருக்கிறார்கள். ‘நமது தலைமையில்தான் ஆட்சி... நம்மை மீறி எதுவும் நடக்காது’ என்ற நம்பிக்கையிலிருந்தார் ரங்கசாமி. ஆனால், தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்காகக் கடந்த மாதம் புதுச்சேரிக்கு வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ‘‘புதுச்சேரியில் பா.ஜ.க 23 தொகுதிகளில் வெற்றிபெறும்’’ என்று பேசியதால் பெரும் குழப்பமடைந்தார்.

இந்தநிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை நீக்கிவிட்டு, தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்குக் கூடுதல் பொறுப்பாக அதை வழங்கியது மத்திய உள்துறை. இரண்டு அமைச்சர்களும், நான்கு எம்.எல்.ஏ-க்களும் கட்சி மாறியதால், புதுச்சேரி காங்கிரஸ் அரசும் கவிழ்ந்தது. தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை மூலம் அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று முட்டைகள், பெட்ரோல்-டீசலுக்கு வாட் வரி குறைப்பு என வரிசையாக மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து பா.ஜ.க-வை வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது அக்கட்சித் தலைமை. ஒருபக்கம் காங்கிரஸ் கூடாரத்தைக் காலிசெய்துவரும் பா.ஜ.க., மற்றொருபுறம் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கும் குறிவைத்திருக்கிறது.

சமீபத்தில் காரைக்கால் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘புதுச்சேரியில் பா.ஜ.க தலைமையில் ஆட்சி அமையும்’’ என்று பேசியிருப்பதுதான் என்.ஆர் கூடாரத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது. ‘‘ஜெயலலிதாவுக்கே விபூதி அடித்தவர் ரங்கசாமி. கண்டிப்பாக அவர் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க மாட்டார். இவ்வளவு ரிஸ்க் எடுத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து, அவர்களை பலவீனப்படுத்தி, ரங்கசாமியை ஏன் முதல்வராக்க வேண்டும்? நம் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயத்தை முதல்வராக்கலாமே’’ என்ற பா.ஜ.க நிர்வாகிகளின் குரலுக்குச் செவிசாய்த்திருக்கிறது தலைமை.

அமித் ஷா-வின் அதிரடிப் பேச்சு... அதிருப்தியில் ரங்கசாமி... தனித்து இறங்குகிறதா என்.ஆர்.காங்கிரஸ்?

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரமும் பா.ஜ.க-வில் ஐக்கியமாகியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக ரங்கசாமியைச் சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர், ‘‘மதவாத சக்தியான பா.ஜ.க நமக்குக் கூடுதல் சுமைதான். அதனால், நாம் தனியாகவே தேர்தலைச் சந்திக்கலாம். கண்டிப்பாக ஆட்சி அமைப்போம் தலைவா’’ என்று கூறியிருக்கின்றனர். அதை ஆமோதிப்பதுபோலத் தலையசைத்திருக்கிறார் ரங்கசாமி. அதனால், பா.ஜ.க-வையும் அ.தி.மு.க-வையும் கழற்றிவிட்டுவிட்டுத் தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்திருக்கிறாராம் ரங்கசாமி.

அதேசமயம், ‘‘தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களைப் பிடித்தாலும், ஹரியானாவைப்போலத் தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ-க்களைக் கொத்தாகத் தூக்கி, மொத்தமாகக் கட்சியின் கதையை முடித்துவிடுவார்கள். பா.ஜ.க-வுடன் கூட்டணி சேரவில்லை என்றால், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைக் கலைப்பதற்கான வேலைகளில் பா.ஜ.க இறங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகம்’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இவ்வளவு பரபரப்பான அரசியல் சூழலில், மிக ரிலாக்ஸாக ஒரு வாரகால ஆன்மிகப் பயணம் கிளம்பியிருக்கிறார் ரங்கசாமி. திருச்செந்தூர், பழநிக்குப் பிறகு பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன் புதூரிலுள்ள அழுக்கு சாமியார் ஜீவசமாதிக்கும், சேலத்திலுள்ள ஸ்ரீஅப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கும் சென்று பலமான வேண்டுதலை வைக்கவிருக்கிறாராம்.

‘ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்’ என்று சூறாவளியாகச் சுற்றிவரும் பா.ஜ.க-வை, என்.ஆர்.காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!