Published:Updated:

புதுச்சேரி ராஜ்ய சபா சீட்... பிடிவாத ரங்கசாமி... தட்டிப்பறித்த அமித் ஷா!

புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி

‘இதில் என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. தலைமையிடம் பேசிக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார் தமிழிசை.

புதுச்சேரி ராஜ்ய சபா சீட்... பிடிவாத ரங்கசாமி... தட்டிப்பறித்த அமித் ஷா!

‘இதில் என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. தலைமையிடம் பேசிக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார் தமிழிசை.

Published:Updated:
புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் டெபாசிட் இழப்பை மட்டுமே சந்தித்துவந்த பா.ஜ.க., 2021 சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியுடன் காலூன்றியிருக்கிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் வெறும் ஆறு தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்று முதல்வர் ரங்கசாமியிடமிருந்து இரண்டு அமைச்சர்கள், ஒரு சபாநாயகர், மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை அள்ளிய பா.ஜ.க., தற்போது ராஜ்ய சபா சீட்டையும் தட்டிப்பறித்திருக்கிறது.

ராஜ்ய சபா எம்.பி கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் 2021, அக்டோபர் 6-ம் தேதியுடன் நிறைவடைவதால், புதிய எம்.பி-க்கான தேர்தல் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறுகிறது. அந்தப் பதவி யாருக்கு என்பதில் கூட்டணிக் கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் கடும் இழுபறி நீடித்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஐந்தாண்டுகள் அமைச்சராக இருந்துவிட்டு ஆட்சி நிறைவடையும் நிலையில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து ஆட்சியைக் கவிழ்த்தவர்களில் ஒருவரான ஏனாம் தொகுதியின் மல்லாடி கிருஷ்ணாராவ்தான், ரங்கசாமியின் தேர்தல் செலவுகளையெல்லாம் கவனித்தார். அதற்குப் பிரதிபலனாக அவருக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்கத் திட்டமிட்டிருந்தார் முதல்வர் ரங்கசாமி.

இந்தநிலையில்தான், ‘ராஜ்ய சபா தேர்தலில் எங்கள் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும்’ என்று பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் ரங்கசாமியிடம் கடிதம் கொடுக்க... புதுச்சேரியில் மீண்டும் அரசியல் நெருப்பு பற்றிக்கொண்டது. இன்னொரு பக்கம் அ.தி.மு.க., ‘‘நியமன எம்.எல்.ஏ பதவிகளில்தான் எங்களைப் புறக்கணித்துவிட்டீர்கள். ராஜ்ய சபா சீட்டையாவது கொடுங்கள்’’ என்று தன் பங்குக்கு அம்பை எய்தது. இதற்கிடையில் எப்படியாவது இந்தத் தேர்தலில் அறுவடை செய்துவிட வேண்டும் என்று நினைத்த பா.ஜ.க-வின் ஒரு பிரிவு, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை இறக்குமதி செய்து, ரங்கசாமியிடம் அழைத்துச் சென்றது. அவரது கையில் எலுமிச்சைப் பழத்தைக் கொடுத்த ரங்கசாமி, ‘இங்கு வழிப்பறி கும்பல்கள் அதிகம். மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுங்கள்’ என்றரீதியில் சிக்னல் கொடுத்திருக்கிறார். அவ்வளவுதான்... சில நிமிடங்களில் ஈ.சி.ஆரில் சென்னையை நோக்கிப் பறந்துவிட்டது அந்தத் தொழிலதிபரின் கார்.

புதுச்சேரி ராஜ்ய  சபா சீட்... பிடிவாத ரங்கசாமி... தட்டிப்பறித்த அமித் ஷா!

இதையடுத்து இந்த விவகாரம் குறித்துப் பேச செப்டம்பர் 20-ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனைச் சந்தித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. அங்கு நடந்த சம்பவங்களை ஆளுநர் மாளிகைக்கு நெருக்கமானவர்கள் சிலர் நம்மிடம் விவரித்தார்கள்... ‘‘தன்னைச் சந்தித்த ரங்கசாமியிடம், ‘இதில் என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. தலைமையிடம் பேசிக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார் தமிழிசை. அப்போதும் தயக்கத்துடன் அமர்ந்திருந்த ரங்கசாமியிடம் வீடியோ அழைப்பில் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அந்த ஒரு சீட்டை வெச்சுக்கிட்டு என்ன செய்யப்போறீங்க ஜி? நாராயணசாமி ஆட்சியைவிட உங்க ஆட்சி சிறப்பா இருக்கும்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ரங்கசாமி, ‘சரி நீங்களே எடுத்துக்கங்க... ஆனா, வேட்பாளரை நான் தர்றேன்’ என்று தெரிவித்திருக்கிறார். கடந்த முறை ராஜ்ய சபா சீட்டை அ.தி.மு.க-வுக்கு விட்டுக்கொடுத்த ரங்கசாமி, தன் நண்பர் கோகுலகிருஷ்ணனை இப்படித்தான் எம்.பி-யாக்கியிருந்தார். இந்தக் கதையெல்லாம் அறிந்திருந்த அமித் ஷா, ‘பழைய ஃபார்முலாவெல்லாம் வேணாம். நாங்க நிறுத்துற வேட்பாளருக்கு ஆதரவு கொடுங்க’ என்று சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த ஜுடீஷியல் கிருஷ்ணமூர்த்தி, காரைக்காலைச் சேர்ந்த ஜி.என்.எஸ்.ரவி, கூடப்பாக்கம் ஜெயக்குமார் ரெட்டியார், புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட நால்வர் பட்டியல் ரங்கசாமிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்களில் முதல் இருவரை நிராகரித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. அப்போதுதான் எதிர்பாராத ட்விஸ்ட்டாக இவர்கள் நால்வரையும் தவிர்த்துவிட்டு, தீவிர ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளரான முன்னாள் நியமன எம்.எல்.ஏ செல்வகணபதியை பரிந்துரைத்திருக்கிறது பா.ஜ.க. ரங்கசாமியும் அதற்கு பச்சைக்கொடி காட்டியதை அடுத்து போட்டியின்றி எம்.பி-யாகிறார் செல்வகணபதி’’ என்று சொல்லி முடித்தார்கள்.

புதுச்சேரி அரசியல் என்றாலே எப்போதும் விறுவிறுப்புதான்... ராஜ்ய சபா தேர்தலும் அதில் விதிவிலக்கல்ல!