Published:Updated:

புதுச்சேரி: முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி! மருமகன் துணை முதல்வரா?!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையின் 15-வது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரங்கசாமி, நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்.

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கைப்பற்றியதால் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைகின்றது. அதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற கட்சித்தலைவராக ரங்கசாமி எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து கடந்த 3-ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்த ரங்கசாமி ஆட்சி அமைக்க உரிமைகோரினார்.

புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற ரங்கசாமி
புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற ரங்கசாமி

அதையடுத்து ரங்கசாமியும், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவின் அமைச்சர்கள் 7-ம் தேதி பதவியேற்பார்கள் என்றும், பதவியேற்பு விழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு மேடை, பந்தல் அமைக்கும் பணியும் நடந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடு அமலில் உள்ளதால் காந்தி திடலில் பதவியேற்பு விழா நடத்தினால் தொண்டர்கள், பொதுமக்கள் குவிய வாய்ப்புள்ளது. எனவே பதவியேற்பு விழாவை ஆளுநர் மாளிகை வளாகத்தில் எளிய முறையில் நடத்த முடிவு செய்தனர்.

அதனால் காந்தி திடலில் பந்தல் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதுடன், ஆளுநர் மாளிகை வளாகத்தில் எளிய முறையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டது. இன்று பிற்பகல் 1.10 மணியளவில் ரங்கசாமி ஆளுநர் மாளிகைக்கு வந்தார். தொடர்ந்து ஆளுநர் தமிழிசையும் வர தேசிய கீதம் இசைக்கப்பட்டு பதவியேற்பு விழா தொடங்கியது. 1.15 மணியளவில் தலைமை செயலர் அஸ்வனி குமார் முதலமைச்சராக ரங்கசாமி நியமிக்கப்பட்டதற்கான ஜனாதிபதியின் ஆணையை வாசித்தார். தொடர்ந்து ஆளுநர் தமிழிசை, ரங்கசாமிக்கு பதவிப்பிரமாணமும், ரககிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 4-வது முறையாக புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ரங்கசாமி, ஏற்கனவே 2001 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் முதல்அமைச்சராக இருந்தார்.

புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சிக் கவிழ்ப்பு முதல் ரங்கசாமி பதவியேற்பு வரை! - பா.ஜ.க-வின் ரோல் என்ன?

பதவியேற்பு விழாவில் விழாவில் மிக குறைவானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.முதல்அமைச்சராக பதவியேற்ற ரங்கசாமி தமிழிசையிடம் இருந்து விடைபெற்று சட்டசபை வளாகத்துக்கு வந்தார். அங்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், முதலமைச்சர் அறைக்கு சென்று புதிதாக 10,000 பேருக்கு முதியார் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு பென்ஷன் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். அதையடுத்து நிலுவையில் உள்ள ரேஷன் கடைகளில் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்கும் திட்டத்தில் 2 மாதத்திற்கான அரிசி வழங்கும் கோப்பில் ரங்கசாமி கையெழுத்திட்டார். மூன்றாவதாக உயர் கல்வி பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான சென்டாக் அரசின் நிதி வழங்கும் கோப்புகளில் கையெழுத்திட்டார். இதற்கிடையில் ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜ.கவிற்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். பதவியேற்பு விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, “பா.ஜ.கவுக்கும், என்.ஆர்.காங்கிரசுக்கும் சுமூகமான உறவு இருக்கிறது. ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. துணை முதல்வர் உள்பட 3 அமைச்சர்கள் இரண்டு நாள்களில் பதவியேற்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும், பா.ஜ.கவின் எம்.எல்.ஏவுமான நமச்சிவாயத்திற்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று அக்கட்சியின் தெரிவிக்கின்றனர். ரங்கசாமியின் அண்ணன் மருமகன்தான் இந்த நமச்சிவாயம். இதன்மூலம் மாமனார் முதல்வராகவும், மருமகன் துணை முதல்வராகவும் வலம் வர இருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு