Published:Updated:

கொரோனா வைரஸுக்காக சீல் வைக்கப்பட்ட புதுச்சேரி எல்லைகள்! - எந்தெந்த வாகனங்களுக்கு அனுமதி ?

புதுச்சேரி
புதுச்சேரி

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புதுச்சேரியின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதால் அண்டை மாநில வாகனங்களும், சுற்றுலாப் பயணிகளும் உள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டு மக்கள் அனைவரும் இன்று ஒரு நாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். அவரின் வேண்டுகோளை ஏற்று இன்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகின்றனர். புதுச்சேரியிலும் அனைத்து மக்களும் வீட்டைவிட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து வருகின்றனர்.

கொரோனா
கொரோனா

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றும், பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், முதல்வர் நாராயணசாமி இன்று வெளியே எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே மக்கள் பணிகளை மேற்கொண்டார்.

காரைக்கால், மாஹே, மற்றும் ஏனாம் பகுதிகளிலுள்ள அதிகாரிகளை வீட்டில் இருந்தபடியே தொடர்புகொண்டு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிவதுடன், அவர்களுக்கு பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ``வரும் 31 ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளின்றி, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

கொரோனா தடுப்பு மருத்துவக் கருவிகள் வாங்குவதற்காக புதுச்சேரிக்கு 300 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். நாளை முதல் 31ம் தேதி வரை அண்டை மாநில வாகனங்கள் புதுச்சேரிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்படும்.

நாராயணசாமி
நாராயணசாமி

வெளிமாநில பேருந்துகள் நிறுத்தப்படும். அத்தியாவசிய பொருள்கள் தடையில்லாமல் கிடைக்கும். அதேசமயம் வரும் 31-ம் தேதி வரை அரசின் கட்டுப்பாட்டிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்காக வரும் 31-ம் தேதி வரை வெளிமாநில 4 சக்கர வாகனங்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. அதேசமயம் மாநில அனுமதி (Intra State) பெற்றிருக்கும் வாகனங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும், அதாவது புதுச்சேரியிலிருந்து பாகூர், நெட்டப்பாக்கம், மதகடிப்பட்டு, திருக்கனூர் காலாப்பட்டு போன்ற பகுதிகளுக்கும், காரைக்காலில் இருந்து அம்பகரத்தூர், விழுதியூர் போன்ற பகுதிகளுக்கும் செல்லலாம். மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் அனுமதி பெற்ற (Interstate Permit) வாகனங்கள் புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்குள் நுழைய அனுமதி கிடையாது.

நாராயணசாமி
நாராயணசாமி

அதேசமயம் அரசு வாகனங்களுக்கும், அத்தியாவசியத் தேவைகளான பால், உணவுப் பொருள்கள், காய்கறிகள், மளிகைப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் மற்றும் மருந்து உபகரணங்கள் கொண்டுவரும் வாகனங்களுக்கு இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த தடை உத்தரவு இருசக்கர வாகனங்களுக்கு பொருந்தாது. பொதுமக்கள் முக்கியமான காரணமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அரசு எடுக்கும் கொரோனா நோய் முன்னெச்சரிக்கைக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு