Published:Updated:

புதுச்சேரி: `ஊரடங்கை மீறி கிரிக்கெட்; கொரோனா தடுப்பில் தன்னார்வலர் பணி!’ - பெண் எஸ்.பி அதிரடி

புதுச்சேரி ஊரடங்கை மீறிய இளைஞர்கள்
புதுச்சேரி ஊரடங்கை மீறிய இளைஞர்கள்

புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கை மீறி விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர்களை உறுதிமொழி ஏற்க வைத்ததுடன், கொரோனா பணியில் காவல்துறையினருடன் இணைந்து தன்னார்வலராக பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி ரட்சனாசிங்.

உருமாறிய கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஒட்டுமொத்த புதுச்சேரியையும் சிதைத்துப் போட்டிருக்கிறது. தொற்றின் எண்ணிக்கை நாளொன்றுக்கு இரண்டாயிரத்தைத் தாண்டியதும் பகுதிநேர ஊரடங்கை அமல்படுத்தியது புதுச்சேரி அரசு. அதேபோல கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமார் 30 முதல் 40 ஆக அதிகரித்தது. மக்கள் தொகையின் அடிப்படையில் இந்திய அளவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் புதுச்சேரி இரண்டாமிடத்தில் இருப்பதாகக் கூறுகின்றன புள்ளி விபரங்கள்.

புதுச்சேரி ஊரடங்கு
புதுச்சேரி ஊரடங்கு

தொற்றை கட்டுப்படுத்த மதியம் 12 மணிக்கு மேல் ஊரடங்கை அமல்படுத்தியதால், புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கடந்த சில தினங்களாக குறையத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும் எதாவது ஒரு காரணத்தைக் கூறி ஊரடங்கை சுற்றிப் பார்க்கவும், ஹாயாக காற்று வாங்கவும் மக்கள் உலா வருவதால் தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போராடுகிறது அரசு. ’அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வாருங்கள்’ என்று அரசு கூறுவதை மக்கள் அலட்சியப் படுத்தவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறையவில்லை.

இந்தச் சூழலில் நேற்று மாலை வம்பாகீரப்பாளையம் கலங்கரை விளக்கம் அருகே சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், முகக்கவசம் அணியாமல் தனித்தனி குழுவாக கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். சிலர் ஆபத்தை உணராமல் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பம் சகிதமாக நடைப்பயிற்சியும் மேற்கொண்டது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எஸ்.பி ரட்சனா சிங்
எஸ்.பி ரட்சனா சிங்

உடனே அந்தக் காட்சியை படமெடுத்து நமது ‘ஜூனியர் விகடன்’ முகநூல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதைப் பார்த்த கிழக்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ரட்சனா சிங், காவலர்களுடன் உடனடியாக களத்தில் இறங்கினார். காவலர்களுடன் அந்த இடத்திற்கு சென்றதும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்கள், நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் என அனைவரும் அங்கிருந்து தெறித்து ஓடினர்.

எஞ்சிய சிலரை வளைத்து நிறுத்திய எஸ்.பி ரட்சனா சிங், “கொரோனாவின் தாக்கத்தால் புதுச்சேரியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை தடுப்பதற்காகத்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. உங்கள் சுதந்திரத்தைப் பறிப்பது எங்கள் நோக்கமல்ல. தொற்றிலிருந்து உங்களை பாதுகாக்கவே இரவும், பகலும் நாங்கள் போராடி வருகிறோம்.

உறுதி மொழி எடுக்க வைத்த காவல் ஆய்வாளர் சஜித்
உறுதி மொழி எடுக்க வைத்த காவல் ஆய்வாளர் சஜித்

காவலர்களும் உங்களைப் போல பொதுமக்களில் ஒருவர்தான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அன்றாடம் அதிகமான நபர்களை கையாள்வதால் அவர்களும் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். அனைத்தையும் விட உங்கள் உயிர் உங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் முக்கியமானது.

அதனை உணர்ந்து செயல்படுங்கள்” என்று அட்வைஸ் செய்தார். தொடர்ந்து அவர்களிடம் அபராதத் தொகையை வசூலித்ததைத் தொடர்ந்து, ‘இனிமேல் இப்படி செய்ய மாட்டோம்’ என்று கூறி இளைஞர்கள் கலைந்து சென்றனர். அதையடுத்து எஸ்.பி ரட்சனா சிங்கின் உத்தரவின்படி ஆய்வு மேற்கொண்ட உருளையன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சஜித், ஏ.எஃப்.டி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை வளைத்துப் பிடித்தார்.

புதுச்சேரி: அதிரவைக்கும் கொரோனா மரணங்கள்! - இடைவிடாமல் எரியும் சடலங்கள்

அவர்களிடம் இருந்த கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததுடன், ‘கொரோன விதிமுறைகளை கடைப்பிடிப்போம். ஊரடங்கு விதிகளை மதிப்போம்’ என்று உறுதிமொழி எடுக்க வைத்தார். தொடர்ந்து, இரண்டு வாரங்கள் காவல்துறையினருடன் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும்” என்று உத்தரவிட்டார். அந்த இளைஞர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து அங்கிருந்த கலைந்து சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு