Published:Updated:

புதுச்சேரி: `சட்டத்தைப் பின்பற்றாத மக்கள், இலவச சிகிச்சை கேட்பது ஏன்?’ - கொந்தளித்த கிரண் பேடி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி

``இந்தியாவில் கொரோனா அதிகரிப்பது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கும் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, ``சட்டத்தைப் பின்பற்றாத மக்கள் ஊரடங்கு தளர்வு அளித்தவுடன், பல இடங்களில் ஒரு மைல் தூரத்துக்கு நின்று, முண்டியடித்து மதுபாட்டிலை வாங்கிச் சென்றனர்” என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா தொற்று குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ``விநாயகர் சதுர்த்திக்கு பொருள்களை வாங்குவதற்காகப் பல இடங்களில் கூட்டமாக மக்கள் அலைமோதினார்கள். வெளியே வராமல், வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அறிவுறுத்தியும் யாரும் மதிக்கவில்லை.

புதுச்சேரி மக்கள் கூட்டம்
புதுச்சேரி மக்கள் கூட்டம்

அனைவரும் வெளியே கடைகளுக்குச் சென்று, கும்பல் கும்பலாகக் கலந்து பொருள்களை வாங்கிச் சென்று கொண்டாடினார்கள். இதனால் கொரோனாநோய்த் தொற்று அதிகரிக்கும். இப்படி நோயைப் பரப்புவதால், ஒவ்வொரு தனிநபருக்கும் ஆயிரக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு தனிநபருக்கும் மருத்துவர், செவிலியர், மருந்துகள், வென்டிலேட்டர், மருத்துவமனை, படுக்கைகள் தேவைப்படுகின்றன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் சட்ட விதிகளை மீறுபவர்கள், எப்படி இலவச சிகிச்சையைக் கேட்க முடியும்... எதற்காக அரசிடம் வருகிறார்கள்... பணம் செலுத்தி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே?

புதுச்சேரி: `70 பேரில் இருந்து 100 ஆக மாறும்!' - அதிகரித்த தொற்று; அச்சத்தில் கிரண் பேடி

`நாங்கள் வரி செலுத்துகிறோமே...’ என்று மக்கள் கேட்கலாம். அனைவரும் மறைமுக வரியைத்தான் செலுத்துகிறோம். ஆனால், நேரடி வரியை எவ்வளவு பேர் செலுத்துகிறார்கள்? நூறு கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், சில கோடிப் பேர் மட்டுமே உண்மையில் வரி செலுத்துகிறார்கள். மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் மக்களை நமது அரசு நிர்வகிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது’’ என்று ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு