Published:Updated:

`புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே தொடரும்!' - மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

``புதுச்சேரியை அண்டை மாநிலங்களுடன் இணைக்கவிருப்பதாக முதல்வர் நாராயணசாமி பொய் சொல்கிறார்’’ என்று மத்திய உள்துறை இணை அணைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

`இனி ஒரு நல்லாட்சி, காங்கிரஸ் இல்லாத புதுச்சேரி’ என்ற தலைப்பில் புதுச்சேரியில் இன்று நடைப்பெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, ``பிரதமர் மோடி புதிய, மதிப்புமிகு இந்தியாவை உருவாக்கிவருகிறார். அதேபோல புதிய புதுச்சேரி உருவாக வேண்டுமென்றால் நீங்கள் பா.ஜ.க-வை ஆதரிக்க வேண்டும்.

பா.ஜ.க பொதுக்கூட்டம்
பா.ஜ.க பொதுக்கூட்டம்

மத்திய பா.ஜ.க அரசின் திட்டங்கள் அனைத்தும் புதுச்சேரிக்கும் கிடைக்க வேண்டுமென்றால் புதுவையிலும் பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் பஞ்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லை. இந்தநிலை இனியும் தொடர வேண்டுமா? புதுச்சேரியில் மாற்றம் அவசியமாகிறது. அதற்கு மோடி தலைமையிலான ஆட்சி புதுவையில் அமைய வேண்டும்.

இந்திய மக்கள் யாருடைய சார்பும் இன்றி, சுயமாகச் சொந்தக் காலில் நிற்கலாம் எனப் பிரதமர் மோடி கூறிவருகிறார். அதற்கான தகுதியும் திறமையும் இந்தியர்களிடம் இருக்கின்றன. உங்கள் சொந்தக் காலில் நீங்கள் சுயமாக நிற்க பா.ஜ.க-வை ஆதரியுங்கள். புதுவை முதலமைச்சர் நாராயணசாமி சமீபகாலமாக தொடர்ச்சியாக ஒரு பொய்யைக் கூறிவருகிறார். யூனியன் பிரதேசமான புதுச்சேரியை அண்டை மாநிலங்களோடு இணைத்துவிடுவார்கள் என்பதுதான் அது.

`ஹைதராபாத்தில் பாகிஸ்தானியர்கள், ரோஹிங்கியாக்கள்!’ - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பகீர்

நான் சார்ந்திருக்கும் ஆட்சியின் சார்பாகவும், மத்திய உள்துறை இணையமைச்சர் என்ற முறையிலும் உங்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளிக்கிறேன். புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே என்றும் தொடரும். பொய் சொல்லும் நாராயணசாமிக்குத் தகுந்த பாடத்தைத் தேர்தலில் புகட்டுங்கள். புதுவை மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாகவே வழங்கும்” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு