Published:Updated:

புதுச்சேரி போலீஸின் `டி-ஷர்ட்’ யூனிஃபார்ம்! - சுற்றுலாப் பயணிகளைக் கவர விடுமுறை திட்டம்

புதுச்சேரிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக போக்குவரத்துக் காவலர்களுக்கு டி-ஷர்ட் சீருடையைக் கொடுத்து அசத்தியிருக்கிறது அம்மாநில அரசு.

புதிய யூனிஃபார்ம்
புதிய யூனிஃபார்ம்

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வார விடுமுறை நாள்கள் மட்டுமின்றி, அரசு விடுமுறை தினத்தில் பணியிலிருக்கும் போக்குவரத்து போலீஸார், கருநீல வெள்ளை நிற டி-ஷர்ட் சீருடை அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.

யூனிஃபார்ம்
யூனிஃபார்ம்

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, செப்டம்பர் முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுவருகிறது. புதுச்சேரியில், நவம்பர் 1-ம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, அதனடிப்படையில் அபராதமும் வசூலிக்கப்பட்டுவருகிறது. அதையடுத்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துசெல்லும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், போக்குவரத்துக் காவலர்களுக்கு புதிய சீருடைகளை அந்தந்த மாநில அரசுகள் அறிமுகப்படுத்திவருகின்றன.

ஏற்கெனவே மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் போக்குவரத்துக் காவலர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், நவீன சீருடை வழங்க முடிவெடுத்த மாநில அரசு, கருநீலம் மற்றும் வெள்ளை நிறத்துடன்கூடிய டி-ஷர்ட்டை போக்குவரத்துக் காவலர்களுக்கு சீருடையாக வழங்கியிருக்கிறது. இந்தப் புதிய திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

புதிய யூனிஃபார்மில் போலீஸ்
புதிய யூனிஃபார்மில் போலீஸ்

பணியில் இருக்கும் இன்ஸ்பெக்டர் தொடங்கி, கடைநிலை காவலர்கள் வரை அனைவரும் வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு மட்டுமின்றி அரசு விடுமுறை நாள்களிலும் இந்தப் புதிய சீருடையை அணிய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு காவலருக்கும் தற்போது தலா 2 செட் புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.