Published:Updated:

`இப்படியொரு சூழல் வந்துவிட்டதே' என அழுதார் சசிகலா! - சிறைக் காட்சிகளை விவரிக்கும் புகழேந்தி

ஒவ்வொருவரும் இந்தக் கட்சிக்காக எதாவது ஒரு வகையில் உழைத்திருக்கிறார்கள். `மாற்றுக் கட்சிக்குப் போக வேண்டும் என விரும்பினால், சின்னம்மா வந்த பிறகு முடிவெடுங்கள்' என்றே கூறி வருகிறேன்.

Sasikala
Sasikala

பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு நாளை 67-வது பிறந்தநாள். ` ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். ஜெயலலிதா நினைவுகளோடு மிகுந்த மனவேதனையில் இருக்கிறார் சசிகலா' என்கிறார் அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி.

புகழேந்தியிடம் பேசினோம்.

Pugazhendhi
Pugazhendhi

மிகுந்த மனஅழுத்தத்தில் சசிகலா இருப்பதாகக் கூறுகிறீர்கள். அப்படியென்ன அவருக்கு நெருக்கடி?

`` பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் செல்வதற்கு முன்னால், அம்மா சமாதியில் சபதம் எடுத்தவர், ஆர்.கே.நகர் வெற்றியைக் கேள்விப்பட்டு பெரிதும் உற்சாகமடைந்தார். அதுவே இந்த இயக்கம் தேர்தலில் தோல்வியைச் சந்தித்து, முக்கியமானவர்கள் எல்லாம் விலகிப் போகும்போது எந்தளவுக்கு மனவேதனையில் இருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அம்மா (ஜெயலலிதா) உருவாக்கிக் கொடுத்த இந்த ஆட்சியையும் கழகத்தையும் இழப்பதற்கு அவர் தயாராக இல்லை. இந்த ஆட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அதற்காக மனம் வேதனைப்படக் கூடிய முதல் நபராகவும் சின்னம்மா இருப்பார். பலவிதமான மனவேதனைகளைத் தாங்கிக் கொண்டுதான் அவர் சிறையில் இருக்கிறார்".

நம்பர் 2 சிறைவாசி; நெருக்கும் நோய்கள்; குடும்ப குளறுபடி!
- எப்படியிருக்கிறார் சசிகலா?

நீங்கள் சசிகலாவைச் சந்தித்து நீண்ட நாள்களாகிவிட்டதே?

Sasikala, dr.Venkatesh
Sasikala, dr.Venkatesh

`` நாளை சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறேன் அல்லது இரண்டு நாள்களுக்குள் அவரைச் சந்தித்துப் பேசுவேன். இதுவரை சிறையில் அவரைச் சந்தித்துப் பேசியதில் எனக்கு ஆச்சர்யமளிக்கக் கூடிய விஷயம் ஒன்றுதான், அவர் யாரையுமே தவறாகப் பேசியது கிடையாது. மிகுந்த பண்பாடு மிகுந்தவராக இருக்கிறார். ஜெயலலிதா இருந்தவரையில் சின்னம்மாவைக் கூடவே வைத்திருந்தார் என்பதையும் தொண்டர்கள் மறக்கவில்லை. ஒருமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பிரசாதத்தை சசிகலாவிடம் கொடுப்பதற்காக வந்திருந்தார் முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன். அவருடன் முத்தையா என்பவரும் வந்திருந்தார்.

இரண்டு பேருக்கும் கட்சியில் பதவி வழங்கியதால், அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக வந்திருந்தனர். அவர்களை அழைத்துக்கொண்டு சிறைக்குள் சென்றேன். அந்தப் பிரசாதத்தை வாங்கிய அடுத்த நொடியில் அழுதுவிட்டார் சசிகலா. எங்களிடம் பேசியவர், ` ஜெயிலில் இருந்துகொண்டு உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டாள் பிரசாதத்தை இப்படியொரு சூழலில் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது' எனக் கூறி அழுதார். இதை எதிர்பார்க்காத நாங்கள், ` என்னம்மா... எப்போதுமே நீங்கள் கண்கலங்க மாட்டீர்கள். இப்படி அழுகிறீர்களே...' எனக் கூறி ஆறுதல்படுத்தினோம்".

அ.ம.மு.கழகத்தில் இருந்து வெளியேறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே?

T.t.v.Dinakaran
T.t.v.Dinakaran

`` கழகத்தை விட்டுச் சிலர் வெளியே போய்க் கொண்டிருக்கிறார்கள். `நீங்கள் வெளியே போய்விடுங்கள்' என மற்றவர்களிடம் கூறும் அளவுக்கு எனக்கு மனது இல்லை. என்னுடைய உயிரே போனாலும் நான் அப்படிச் சொல்ல மாட்டேன். ஒவ்வொருவரும் இந்தக் கட்சிக்காக எதாவது ஒரு வகையில் உழைத்திருக்கிறார்கள். `மாற்றுக் கட்சிக்குப் போக வேண்டும் என விரும்பினால், சின்னம்மா வந்த பிறகு முடிவெடுங்கள்' என்றே கூறி வருகிறேன். அவர் சிறையிலிருந்து வந்த பிறகு அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என நம்புகிறேன்.

`கட்சியின் செயல்பாடு தொய்வாக இருக்கிறது' எனச் சிலர் கூறுகிறார்கள். இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என விரும்புகிறேன். வேலூர் மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க சார்பில் வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாததில் எனக்கு வருத்தம்தான். அதற்குரிய காரணத்தை தினகரன் கூறியிருக்கிறார். இந்த இயக்கம், சின்னம்மாவால் உருவானது. அவரால்தான் மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டது. அதை யாரும் மறந்துவிடக் கூடாது. தினகரனுக்குத் துணைப் பொதுச் செயலாளர் என்ற வாழ்க்கையையும் அந்தஸ்தையும் கொடுத்தது சின்னம்மாதான். ஆட்சியில் இருப்பவர்களும் சின்னம்மாவைப் பற்றித் தவறாகப் பேசுவதில்லை. ஜெயக்குமார் மட்டும்தான் பேசி வந்தார். அவரைத் தவிர மற்ற அமைச்சர்கள் யாரும் பேசுவதில்லை".

தினகரனோடு நீங்கள் முரண்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது. எப்போது அவரிடம் பேசினீர்கள்?

Dinakaran
Dinakaran

`` நான் அவரும் பேசி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால், ஒரு வாரம் ஆகிவிட்டதாக அவர் கூறினார். அவர் அவருடைய வேலையில் பிஸியாக இருக்கிறார். நான் என்னுடைய பணியைச் செய்து வருகிறேன். கட்சி வேலையாக என்னை யாரும் அழைப்பதில்லை. நானும் செல்வதில்லை" என்றவர்,

`` சின்னம்மாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் மூன்று ஆண்டுகள் நிறைவடைய இருப்பதால், நன்னடத்தை விதிகளின்படி டிசம்பர் அல்லது பிப்ரவரிக்குள் சிறையிலிருந்து வெளியில் வந்துவிடுவார் என நம்புகிறேன். அவர் வந்த பிறகு சிறு சிறு சலசலப்புகள் எல்லாம் முடிவுக்கு வரும். அவர் சொல்வதைத்தான் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள்" என்றார் இயல்பாக.