ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தியிடம் இன்று விசாரணை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ``அம்மாவின் மரணம் இயற்கையான மரணம் அல்ல. மிகத் தெளிவாகச் சொல்கிறேன்... அலட்சியப்படுத்தியதன் காரணமாகத்தான் அம்மா இறந்துவிட்டார். அம்மா வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தால் அவர் பல காலம் உயிரோடிருந்திருப்பார். அம்மாவை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்காததுதான் அவர் மரணத்துக்குக் காரணம்.

அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் வெளிநாட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். அம்மாவை ஏன் வெளிநாட்டுக்கு கொண்டு செல்லவில்லை... அ.தி.மு.க-விடம் பணம் இல்லையா... அப்படி இல்லையென்றால்கூட அ.தி.மு.க தொண்டர்களும், மக்களும் பணம் கொடுக்கத் தயாராக இருந்தனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக எட்டு முறை ஓ.பி.எஸ்-ஸுக்கு சம்மன் அனுப்பிய பிறகு, `எனக்கு எதுவும் தெரியாது... தெரியாது!" என பதிலளித்தார்.
இத்தனைக்கும் காரணம், தங்கள் வாழ்வையும் வளத்தையும் மேம்படுத்துவதற்காக ஓர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றிய ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும்தான். அவர்கள் இருவரும் இதிலிருந்து தப்ப முடியாது. ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என ஆணித்தரமாகக் கூறியிருக்கிறேன். இது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆறுமுகசாமி ஆணையத்திடம் முறையீடு செய்திருக்கிறேன்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது. மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஜூன் 24-ம் தேதிக்குள் தமிழக அரசுக்குத் தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.