Published:Updated:

'புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு விவகாரம்' - சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள்!

புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு
புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு

சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியிலுள்ள குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரமற்ற முறையில் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து இரண்டு அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழகத்தில் குடிசை மாற்று வாரியம் 1970-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் வீடுகட்டித்தரும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது இந்த வாரியம். இந்த வாரியத்தின் மூலம் இதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. சென்னை புளியந்தோப்பில் இருந்த குடிசை மாற்று வாரியக் கட்டடம் பழுதடைந்ததால் அந்தப் பழைய கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களைக் கட்ட குடிசை மாற்று வாரியம் முடிவு செய்தது.

புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு
புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு

இதற்காக, கடந்த 2019-ம் ஆண்டு முதற்கட்டமாக ரூ.112.26 கோடியில், நான்கு பிளாக்குகளாக, ஒன்பது தளங்களுடன் 864 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. 2020-ம் ஆண்டு ரூ.139.13 கோடி மதிப்பீட்டில், நான்கு பிளாக்குகளாக, ஒன்பது தளங்களுடன் 1,056 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டன. 2018-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டுக்குள் இந்த மொத்த கட்டடங்களும் கட்டி முடிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் ஆற்றங்கரையோரம் வசித்த மக்கள் புளியந்தோப்பு கே.பி.பூங்கா பகுதியிலுள்ள குடிசை மாற்று வாரியத்தின் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டனர். அப்படிக் குடியமர்த்தப்பட்ட ஒரு கட்டடம் தரமற்றிருப்பதாகவும், சுவர்ப் பகுதிகள் தொட்டாலே பெயர்ந்துவருவதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டினர். இந்தப் பிரச்னை குறித்த செய்தி வெளியானதும் விஷயம் பெரிதானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடியிருப்புப் பகுதியில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், துறைசார் அதிகாரிகளும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கட்டடம் கட்டியதில் முறைகேடு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பரந்தாமன் ``தொட்டால் விழும் கட்டடத்தை அதிமுக அரசு கட்டியிருக்கிறது. இந்தக் கட்டடம் முறைகேடாகக் கட்டப்பட்டுள்ளது. கட்டட ஒப்பந்ததாரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடந்த ஆட்சியில் கட்டப்பட்டிருக்கும் ஒட்டுமொத்த கட்டடத்தையும் ஆய்வு செய்து தரத்தை உறுதிசெய்ய வேண்டும்” என்று சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதோடு, இந்த விவகாரம் தொடர்பாகச் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

`பல கோடிகளில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம்  பயனற்றுக் கிடக்கும் அவலம்'!-நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?!
புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு
புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன். ``ஊடகங்களில் வெளியான செய்தியின் உண்மைத் தன்மையைத் தெரிந்துகொள்ள நானும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும், சட்டமன்ற உறுப்பினர்கள், துறை அதிகாரிகளுடன் நேரடியாக அந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தோம். அந்த கட்டடத்தின் உறுதித்தன்மையைத் தெரிந்துகொள்ள ஐ.ஐ.டி-க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து அந்தக் கட்டுமானப் பணியில் தவறு இருக்கிற என்று அறிக்கையில் சுட்டிக்காட்டினார்கள் என்றால், அந்த குடியிருப்பைக் கட்டிய ஒப்பந்ததாரர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில் அந்தக் கட்டடத்தைக் கட்டிய PST கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் பதிலளித்துள்ளது. ``K.P.பார்க் பகுதியில் எங்களது நிறுவனத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் தரமான முறையில் கட்டப்படவில்லை என்றும், அதன் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாகச் செய்திகள் வருகின்றன. அந்தச் செய்தியைக் கேட்டு எங்கள் நிறுவனத்தின் உரிமையாளர்களும், பணியாளர்களும் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகினர். அந்தச் செய்தி துளியளவும் உண்மையல்ல. எங்கள் நிறுவனத்தால் தரமான முறையில் கட்டி முடிக்கப்பட்ட கட்டுமானங்களை குடிசைவாழ் மக்களுக்குக் கடந்த இரண்டு ஆண்டுக்காலமாக ஒதுக்கீடு செய்யாமல் அதை கொரானா தொற்றின் காரணமாக, கொரானா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தித் தங்கவைப்பதற்கான தற்காலிக மருத்துவமனையாகச் சென்னை மாநகராட்சியால் ஓராண்டுக்காலம் பயன்படுத்தப்பட்டதில் பல்வேறு இயந்திரங்களும் தளவாடங்களும் படிக்கட்டுகள் வழியாக எடுத்துச் சென்று அதன் காரணமாகச் சேதம் ஏற்பட்டுள்ளது" என்றும்,

புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு
புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு

மேலும், ``எங்கள் நிறுவனத்தின் சார்பாக நல்லாட்சி வழங்கும் தமிழக அரசுக்கும், பொதுமக்கள் அனைவருக்கும் பணிவுடன் தெரிவிப்பது யாதெனில் K.P.பார்க் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு எங்கள் நிறுவனத்தால் கட்டப்பட்ட கட்டுமான குறைபாடுகளோ அல்லது தரமற்ற பொருள்களோ காரணம் அல்ல என்பதைப் பணிவுடன் தெரிவிக்க விரும்புகிறோம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள், ஆளும் கட்சியினர் என்று பல்வேறு தரப்பினர் நேரடியாக ஆய்வு செய்துவரும் நிலையில். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துவருகிறார்கள்.

பழுதடைந்த வீடு
பழுதடைந்த வீடு

பிரச்னை பூதாகாரமாகிவரும் நிலையில், நேற்று இது தொடர்பாக, உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாகப் பொறியாளர் அன்பழகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். கட்டடத்தின் தரம் குறித்த அறிக்கை வரும்போது மேலும் பலர் பணியிடை நீக்கம் செய்யப்படவிருப்பதாகவும், ஒப்பந்ததாரர் தவறு செய்திருந்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் அதிக வாய்ப்பிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு