தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, கரூர் மாவட்டத்திலுள்ள புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க கவுன்சிலர்கள், தி.மு.க சார்பில் தலைவர் வேட்பாளரை நிறுத்தி, வெற்றிபெறச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் - திருச்சி சாலையில் இருக்கிறது புலியூர் பேரூராட்சி. இந்தப் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், தேர்தல் நடப்பதற்கு முன்பே 8-வது வார்டில் போட்டியிட்ட அடைக்கப்பன் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், மீதியிருந்த 14 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க 12, இந்திய கம்னியூஸ்ட் கட்சி 1, பா.ஜ.க 1 இடத்தையும் கைப்பற்றின. இந்த நிலையில், புலியூர் பேரூராட்சி தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு புலியூர் பேரூராட்சி தி.மு.க பேரூர் கழகச் செயலாளரும், 15-வது வார்டு உறுப்பினருமான அம்மையப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு, மற்ற தி.மு.க உறுப்பினர்கள் 11 பேரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எதிராகப் புறக்கணித்து, 3-வது வார்டு தி.மு.க உறுப்பினர் புவனேஸ்வரியை முன்மொழிந்து மனுத்தாக்கல் செய்யவைத்தனர்.

இந்த நிலையில், புலியூர் பேரூராட்சியிலுள்ள 15 உறுப்பினர்களில் சுயேச்சை வேட்பாளர் அடைக்கப்பன் மறைமுகத் தேர்தலை புறக்கணித்தார். பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த 4-வது வார்டு உறுப்பினர் மட்டும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை முன்மொழியத் தயாராக இருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கலாராணிக்கு மேலும் ஓர் உறுப்பினர் மனுத்தாக்கல் செய்ய தேவைப்பட்டதால், தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் மேற்கொள்ள முடியாமல் பேரூராட்சி அலுவலகத்தில் காத்திருந்தார். இதற்கிடையே, 12 பேர்கொண்ட தி.மு.க உறுப்பினர்கள் அம்மையப்பன் தலைமையில், 3-வது வார்டு தி.மு.க உறுப்பினர் புவனேஸ்வரிக்கு முன்மொழிவு செய்ததால், புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்ததாக அறிவிக்கப்பட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கலாராணி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து தனது ஆதரவாளர்களுடன் கண்ணீருடன் வெளியேறினார். இதைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கரூர் மாவட்டச் செயலாளர் ரத்தினம் தலைமையில் கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள புலியூர் பேருந்து நிறுத்தத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புலியூர் பேரூராட்சி வேட்பாளர் கலாராணி,

``கூட்டணிக் கட்சி தர்மத்துக்கு எதிராகச் செயல்பட்டு, புலியூர் பேரூராட்சியை எங்களிடமிருந்து தி.மு.க-வினர் தட்டிப் பறித்துள்ளனர். பொதுநலத்தோடு செயல்பட்டு மக்களுக்காகப் போராடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஏமாற்றியுள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பதவிகளை வழங்கிவருகிறார். ஆனால், இங்குள்ள தி.மு.க-வினர், என்னைப் பெண் என்றும் பாராமல், எனக்கு வாக்களிப்பதாக நம்பவைத்து, மறைமுகத் தேர்தலின்போது புறக்கணித்து ஏமாற்றிவிட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை, இது குறித்து தி.மு.க தலைவரிடம் பேசி நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.