Published:Updated:

`ராகுலே சொல்லிட்டார்; அப்பறம் என்ன?' - காங்கிரஸைப் பதறவைத்த இளைஞர்

சத்யா கோபாலன்

ராகுல் காந்தி தன் ராஜினாமா முடிவிலிருந்து பின்வாங்காததால் அவரின் பதவிக்கு புனே இளைஞர் விண்ணப்பித்துள்ளார்.

ராகுல் காந்தி - கஜானந்த்
ராகுல் காந்தி - கஜானந்த்

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி கடுமையான தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வியின் எதிரொலியாக மே 25-ம் தேதி நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ராகுல்காந்தி. ஆனால், அவரின் ராஜினாமாவை ஏற்க காரிய கமிட்டி மறுத்துவிட்டது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Twitter/@RahulGandhi

காங்கிரஸைச் சேர்ந்த எத்தனையோ தலைவர்கள் ராகுல்காந்தி பதவி விலகக் கூடாது எனக் கருத்து தெரிவித்தனர். ஆனால், அவற்றையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத ராகுல், சில நாள்கள் கழித்து ஒரு அறிக்கை வெளியிட்டு அதில், `கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று தான் பதவி விலகுவதாகக் குறிப்பிட்ட அவர் தொடர்ந்து, கட்சியின் புதிய தலைவரை தான் தேர்ந்தெடுப்பது சரியாக இருக்காது. காங்கிரஸை மறுசீரமைக்கக் கடினமாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டியுள்ளது. கட்சியின் வளர்ச்சிக்கு தன் ராஜினாமா முக்கிய பங்காற்றும். தற்போதுள்ள சூழலில் காங்கிரஸுக்கு இளம் தலைவரே தேவை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Vikatan

கட்சித் தலைவர்கள் சமாதானப்படுத்தியும் தன் முடிவிலிருந்து ராகுல் காந்தி மாறாததால், பல மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், செயலாளர்கள் போன்றவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். தற்போது வரை காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பது பற்றியும், ராகுல் காந்தி முடிவு குறித்து கட்சி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

காங்கிரஸ்
காங்கிரஸ்
Twitter/@RahulGandhi

இந்த நிலையில், காங்கிரஸின் தலைவர் பதவிக்காக விண்ணப்பித்துள்ளார் புனேவைச் சேர்ந்த 28 வயது இளைஞர். கஜானந்த் ஹோசலே என்ற எலெக்ட்ரானிக் இன்ஜினீயர், அடுத்த ராகுல் காந்தியாகத் தான் வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். புனேயில், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் உற்பத்தி நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்துவருகிறார் கஜானந்த். தன்னுடைய விருப்பத்தை விண்ணப்பமாகத் தயார் செய்து புனேயின் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் பாக்வேவிடம் அளித்து, கட்சித் தலைமை இதைப் பற்றி ஆலோசிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது பற்றிப் பேசியுள்ள கஜானந்த், ``காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக உள்ளார் ராகுல் காந்தி. தற்போது, அடுத்த தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பத்தில் உள்ளது கட்சி. எனவே, அந்தப் பதவிக்கு நான் விண்ணப்பிக்க வேண்டும் என நினைத்து இதைச் செய்தேன். காங்கிரஸுக்கு இளம் தலைவர் தேவை என ராகுல் காந்தியே தெரிவித்துள்ளார். அந்தத் தலைவர் வயதில் மட்டும் இளையவராக இல்லாமல், மனது மற்றும் யோசிக்கும் திறமையிலும் இளமையாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

கஜானந்த் ஹோசலே
கஜானந்த் ஹோசலே
FaceBook/@GajanandHosale

கஜானந்துக்கு அரசியல் துறையில் ஏதேனும் அனுபவம் உள்ளதா அல்லது ஏதேனும் சமூக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளாரா என்று கேட்டதற்கு ``இல்லை'’ என ஒரே வார்த்தையில் பதில் அளித்துள்ளார். இருந்தாலும், தான் கிராமப்புறப் பின்னணியில் இருந்து வருவதாகவும், பல பிரச்னைகளில் தான் தனி நபராக அதிகாரிகளை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

`` காங்கிரஸ் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன்னதாக நான் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்துவிட்டேன். ஒரு கட்சியின் தலைவராக என்னுடைய உந்துதல் முழுவதும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். தற்போது கட்சி இருக்கும் நெருக்கடியிலிருந்து விடுவிப்பேன் என எனக்கு நம்பிக்கை உள்ளது” என நம்பிக்கையாகப் பேசியுள்ளார் கஜானந்த்.