Published:Updated:

பஞ்சாப்: சிக்கலில் பாஜக; விரிசலில் காங்கிரஸ்; முந்தும் ஆம் ஆத்மி! - 2022 தேர்தல் யாருக்குச் சாதகம்?

பஞ்சாப் - 2022 தேர்தல்

``பஞ்சாப் அரசியலில் முக்கியத் தலைவராக விளங்குகிறார் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல். இதுவரை ஐந்து முறை பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்திருக்கிறார். ஆனால்..?!'' - பஞ்சாப் காங்கிரஸ் விரிசல்... 2022 தேர்தல் எந்தக் கட்சிக்குச் சாதகம்?

பஞ்சாப்: சிக்கலில் பாஜக; விரிசலில் காங்கிரஸ்; முந்தும் ஆம் ஆத்மி! - 2022 தேர்தல் யாருக்குச் சாதகம்?

``பஞ்சாப் அரசியலில் முக்கியத் தலைவராக விளங்குகிறார் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல். இதுவரை ஐந்து முறை பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்திருக்கிறார். ஆனால்..?!'' - பஞ்சாப் காங்கிரஸ் விரிசல்... 2022 தேர்தல் எந்தக் கட்சிக்குச் சாதகம்?

Published:Updated:
பஞ்சாப் - 2022 தேர்தல்
அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட சவால்களைச் சமாளிப்பது எவ்வளவு சிரமமோ, அதே அளவுக்கு உட்கட்சிப் பூசல்களைச் சமாளிப்பதும் சிரமமான காரியம்தான். அதுவும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சிக்குள் சண்டைகள் வெடித்தால் இன்னும் கடினமாகிவிடும். அப்படியான ஒரு சூழலைத்தான் எதிர்கொண்டிருக்கிறது பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி.
சித்து, கேப்டன் அமரீந்தர்
சித்து, கேப்டன் அமரீந்தர்

உட்கட்சி மோதல்!

பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் கேப்டன் அமரீந்தர் சிங் முதல்வராக இருக்கிறார். இவருக்கும் அதே கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் ஏற்பட்டுவந்தது. 2016 வரை பா.ஜ.க-விலிருந்த சித்து, 2017-ல் காங்கிரஸில் இணைந்து, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2017-ம் ஆண்டு முதல் அமரீந்தர் சிங் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து, 2019-ம் ஆண்டு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இவர்கள் இருவருக்கும் இடையே எதற்காக, எப்போது மோதல் ஏற்படத் தொடங்கியது, சித்து ஏன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள, கீழுள்ள லிங்க்கை க்ளிக் செய்து படிக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால், தனக்கு ஆதரவாக இருக்கும் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ-க்களை ஒன்று திரட்டி சில அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுவருகிறார் சித்து. முதல்வர் வேட்பாளர் அல்லது காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பு என எதையாவது ஒன்றைப் பெற்றுவிட வேண்டுமென சித்து முயன்றுவருவதாகப் பஞ்சாப் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அமரீந்தரின் ஆதரவாளர்களோ, ``பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்தவர்களை விடுத்து, புதிதாக வந்த சித்துவுக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கக் கூடாது'' எனப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மோதலைப் பெரிதாக்கிய ட்விட்டர் பதிவு!

பல விஷயங்களில் சித்துவும், அமரீந்தரும் உரசிக்கொண்டனர் என்றாலும், சமீபத்தில் சித்து பதிவிட்ட ட்வீட் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், ``நாம் சரியான பாதையில் சென்றால் `பவர் கட்' என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அலுவலக நேரங்களை மாற்றியமைப்பது, ஏசி பயன்பாடு உள்ளிட்டவை பற்றி முதல்வர் யோசிக்க வேண்டிய அவசியமும் இருக்காது'' என்று பதிவிட்டதோடு நிறுத்திக்கொள்ளாமல், `டெல்லி மாடலை பயன்படுத்தினால் பஞ்சாப் மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கலாம்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பஞ்சாபில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மிதான் டெல்லியில் ஆட்சி செய்துவருகிறது என்பதால், சித்துவின் கருத்து ஆம் ஆத்மிக்கு சாதகமாகப் பார்க்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், நவ்ஜோத் சிங் சித்துவின் பெயரிட்ட பஞ்சாப் மின்சாரத்துறையின் பில் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதில், கடந்த ஆண்டு சித்துவின் வீட்டுக்கு ரூ.17 லட்சம் மின்சாரக் கட்டணம் பாக்கியிருந்ததாகவும், அதில் 10 லட்சம் ரூபாயை மார்ச் மாதத்தில் அவர் கட்டியிருப்பதாகவும் தகவல்கள் இருக்கின்றன. மேலும், தற்போது சித்துவின் பெயரில், 8.67 லட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கியிருக்கிறது என்ற தகவலும் அந்த ரசீதில் இடம்பெற்றிருக்கிறது.

மேற்கண்ட சம்பவங்களால் இருதரப்புக்குமிடையே விரிசல் அதிகமாகியிருக்கிறது. பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இரு தரப்பும் மோதிக்கொள்வதால் காங்கிரஸ் மேலிடத்துக்கு இது பெரும் தலைவலியை உண்டாக்கியிருக்கிறது.

சிக்ஸர் சித்து!
சிக்ஸர் சித்து!

சித்து-அமரீந்தர் மோதலால் பஞ்சாப் காங்கிரஸில் ஏற்பட்டிருக்கும் விரிசலைப் பயன்படுத்தி, ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் வேலைகளைச் செய்துவருகின்றன எதிர்க்கட்சிகள். காங்கிரஸில் ஏற்பட்டிருக்கும் இந்த விரிசல் எந்தக் கட்சிக்குச் சாதகமாக அமையும் என்பதைப் பார்ப்பதற்கு முன்னர் 2017 தேர்தல் நிலவரம் குறித்துப் பார்த்துவிடலாம்.

2017 சட்டமன்றத் தேர்தல்!

பஞ்சாபில் 117 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. 2017 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 77 இடங்களைக் கைப்பற்றியது. சிரோமணி அகாலி தளம் 94 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றிகண்டது. அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க 23 இடங்களில் போட்டியிட்டு மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஆம் ஆத்மி 112 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் கூட்டணியிலிருந்த லோக் இன்சாஃப் கட்சி ஐந்து இடங்களில் போட்டியிட்டு இரண்டு இடங்களைக் கைப்பற்றியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எந்தக் கட்சிக்குச் சாதகம்?

சரி... இப்போது, பஞ்சாப் காங்கிரஸ் விரிசல் எந்தக் கட்சிக்கு சாதகமாக அமையும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலர் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். ``2012-ல் சிரோமணி அகாலி தளம், பா.ஜ.க கூட்டணி 68 இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது. 2017 தேர்தலில் இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சியாகக்கூட வர முடியவில்லை. கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை எதிர்த்து பா.ஜ.க கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலி தளம் வெளியேறியது, பஞ்சாபில் பா.ஜ.க-வுக்கு பின்னடைவாக அமைந்தது. முன்னதாக புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததே பஞ்சாபில் பா.ஜ.க-வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. மேலும், இத்தனை நாள்களாக பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் போராட்டம் செய்தும், வேளாண் சட்டங்களை பா.ஜ.க அரசு திரும்பப் பெறாதது அந்தக் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரகாஷ் சிங் பதால்
பிரகாஷ் சிங் பதால்

பஞ்சாப் அரசியலில் முக்கியத் தலைவராக விளங்குகிறார் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல். இதுவரை ஐந்து முறை பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்திருக்கிறார். இருந்தும், வேளாண் சட்டங்களை எதிர்த்து சிரோமணி அகாலி தளம், பா.ஜ.க-விலிருந்து வெளியே வந்ததைத் தவிர விவசாயிகளுக்காக வேறொன்றும் அந்தக் கட்சி செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.

எனவே, வரவிருக்கும் தேர்தலில் ஆம் ஆத்மிக்கான வெற்றி வாய்ப்புகள்தான் அதிகம் எனலாம். அதற்கு வலுவான சில காரணங்களும் இருக்கின்றன.

கடந்த தேர்தல்தான் பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு முதல் தேர்தல். வென்றது 20 தொகுதிகள்தான் என்றாலும், முதல் தேர்தலிலேயே எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுவிட்டது அந்தக் கட்சி. கடந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யாரென்று அறிவிக்காமல் போட்டியிட்டது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. ஆனால், இந்த முறை சுதாரித்துக்கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி. சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாபில், சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பஞ்சாப்பில் தற்போது பிரதான பிரச்னையாக இருக்கும் மின்வெட்டைக் கையிலெடுத்து, பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது ஆம் ஆத்மி.

மேலும், பஞ்சாப்பில் ஆட்சியமைத்தால், ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம் என அறிவித்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இதை எதிர்த்து, `டெல்லியில், தொழிற்சாலைகள், கடைகள் என கமர்ஷியலாக மின்சாரம் பயன்படுத்துபவர்களிடம் ஒரு யூனிட்டுக்கு 9.80 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பஞ்சாப்பில் தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய்தான் வசூலிக்கிறோம். தொழிற்சாலைகள், கடைக்காரர்களிடம் அதிகம் பணம் வசூலித்து, வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறார் கெஜ்ரிவால்' என்று பேசியிருக்கிறார் அமரீந்தர்.

arvind kejriwal
arvind kejriwal

ஆனால், இந்தக் கருத்து மக்களிடம் எடுபட்டதாகத் தெரியவில்லை. காரணம், அமரீந்தர் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால்வாசி நிறைவேற்றப்படவில்லையாம். அதேநேரத்தில், கெஜ்ரிவால் மின்சாரம், தண்ணீர் தொடர்பாகக் கொடுத்த வாக்குறுதிகளைப் பெருமளவு டெல்லியில் நிறைவேற்றியிருக்கிறார். எனவே, டெல்லி மாடலைக் காட்டி வாக்கு சேகரித்தால் ஆம் ஆத்மிக்கு அது சாதகமாகவே இருக்கும்.

அதேநேரத்தில், ஆம் ஆத்மிக்கு பஞ்சாப்பில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குத் தலைவர்கள் யாரும் இல்லாதது பின்னடைவாக இருக்கிறது. எனவே, இந்தத் தேர்தலில், காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம்'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism