Published:Updated:

பஞ்சாப்:காங்கிரஸ் உட்கட்சிப் பூசல்களுக்கு முடிவுரை!-சித்து, அமரீந்தர் சிங் சந்திப்பில் நடந்தது என்ன?

சித்துவுக்குப் பதவி வழங்கியதற்குப் போர்க்கொடி தூக்கிய அமரீந்தர் இன்று தேநீர் விருந்தில் சித்துவிடம் சகஜமாகப் பேசிவிட்டு, மேடையில் மனம் திறந்து வாழ்த்தியது பஞ்சாப் காங்கிரஸில் நிலவிவந்த உட்கட்சிப் பூசல்களுக்கு முடிவுரை எழுதியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பஞ்சாப் காங்கிரஸில் மாதக்கணக்கில் நீடித்துவந்த உட்கட்சிப் பூசல் ஒருவழியாக தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் தலைமையின் உத்தரவின்பேரிலும், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில்வைத்தும் சித்துவுடன் கரம் கோத்து கட்சியை வழிநடத்த முடிவெடுத்திருக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மிக முக்கிய மாநிலமாகப் பார்க்கப்படும் பஞ்சாபில் கடந்த சில மாதங்களாகக் கடுமையான உட்கட்சி பூசல் நிலவிவந்தது . பஞ்சாபில் நிலவிவரும் மின்தட்டுப்பாடு பிரச்னை மற்றும் குரு கிராந்த் சாஹிப் சர்ச்சை ஆகியவை அமரீந்தர் அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான நவஜோத் சித்து அதே விவகாரங்களைக் கையிலெடுத்து அமரீந்தருடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தது, பஞ்சாப் மாநில காங்கிரஸில் பெரும் பிளவை ஏற்படுத்தியது.

2004-ல் பாஜக-வில் இணைந்து, பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமை சீட் வழங்காததால் அங்கிருந்து, 2016-ல் காங்கிரஸில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு காங்கிரஸ் தலைமை 2017 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்ட சித்து தேர்தலில் வெற்றிபெற்று மாநில சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர் பதவியும் பெற்றார். அதற்குப் பிறகு, 2018-ல் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கான் வெற்றிபெற்று பதவியேற்றபோது முதல்வர் அமரீந்தர் மற்றும் மூத்த தலைவர்களின் எதிர்ப்புகளை மீறி சித்து பாகிஸ்தான் சென்று இம்ரான் கானை வாழ்த்திவிட்டு வந்தார். அப்போதே சித்து மீது அமரீந்தர் தரப்புக்குப் பெரிய அதிருப்தி உண்டானது.

இம்ரான் கானுடன் சித்து
இம்ரான் கானுடன் சித்து

அதைத் தொடர்ந்து, 2019-ல் முதல்வர் அமரீந்தர் அமைச்சரவை மாற்றம் செய்தபோது சித்துவின் சுற்றுலாத்துறையையும் மாற்றினார். அதனால் கொதித்துப்போன சித்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமரீந்தர் குறித்து பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார். அதில் தொடங்கிய இருவரது மோதல் காலப்போக்கில் வலுவடைந்து, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்துப்போட்டது.

நாளுக்கு நாள் தீவிரமடைந்துவந்த உட்கட்சிப் பூசல்களால் காங்கிரஸ் பஞ்சாபில் வலுவிழந்துகொண்டிருந்தது. சித்து - அமரீந்தர் மோதல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாகிவிடும் என்பதால், கடந்த சில வாரங்களாகவே காங்கிரஸ் தலைமை இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுவந்தது. சித்துவுடனான மோதல் முற்றிவிட்ட நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங், தன் மீதான விமர்சனங்களுக்குப் பொதுவெளியில் சித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அப்படிச் செய்யத் தவறும் பட்சத்தில் சித்துவுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துவந்தார்.

மறுபுறம், அமரீந்தருடனான மோதலை முடித்துக்கொள்ள விரும்பாத சித்து, தொடர்ந்து பஞ்சாபில் தன் கை ஓங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தார். சித்து - அமரீந்தர் இடையேயான மோதலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பாஜக-வும், ஆம் ஆத்மியும் களத்தில் இறங்கி மின்வெட்டு மற்றும் சீக்கிய மத விவகாரங்களைக் கையிலெடுத்து பிரசாரம் மேற்கொண்டு ஸ்கோர் செய்ய முனைப்புக் காட்டி வந்தன.

அமரீந்தர் தலைமையிலான காங்கிரஸ் 2017 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 77 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அந்தத் தேர்தலில் பாஜக 18 இடங்களையும், ஆம் ஆத்மி 20 இடங்களையும் கைப்பற்றின. அதைத் தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அமரீந்தர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 13 மக்களவைத் தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. அதன் காரணமாக, பஞ்சாப், காங்கிரஸின் கோட்டையாக மாறியது.

அமரீந்தர் - சித்து
அமரீந்தர் - சித்து

இந்தநிலையில், பாஜக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் காங்கிரஸில் நிலவிக்கொண்டிருக்கும் உட்கட்சி மோதல்களைவைத்து 2022 தேர்தலில் அந்தக் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றத் தீவிரம் காட்டிவருகின்றன. ஆனால், நிலைமை கைமீறிச் சென்றுவிட்டதை அறிந்து தற்போது காங்கிரஸ் தலைமை களத்தில் இறங்கித் தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டதால், அடுத்த ஆண்டு தேர்தலில் காங்கிரஸுக்குப் பெரிய அளவில் பின்னடைவு இருக்காது என்று கூறப்படுகிறது.

பஞ்சாப் காங்கிரஸில் இரு துருவங்களாகப் பிரிந்து கிடந்த அமரீந்தர், சித்து இருவரும் அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்கள். அப்போது, சோனியா காந்தியும் சில மூத்த தலைவர்களும் இந்த உட்கட்சிப் பூசலால் தேர்தல் நேரத்தில் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிடும் என்று எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், அப்போதும்கூட அமரீந்தர், சித்து தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் மிக உறுதியாகவே இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையல், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வர் அமரீந்தர் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் நவ்ஜோத் சித்துவை தேர்தல் நேரத்தில் இழந்துவிடக் கூடாது என்று நினைத்த காங்கிரஸ் மேலிடம், சித்துவுக்கு பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்து அவரை தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டது. ஆனால், அதற்கு முதல்வர் அமரீந்தர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டதால், அவரைக் கலந்தாலோசிக்காமலேயே சித்துவுக்கு மாநிலத் தலைவர் பதவியும், அவருக்குக் கீழ் நான்கு செயல் தலைவர்களையும் நியமிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, தற்போது சுனில் ஜாகரை மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் சித்துவுக்குத் துணையாக சங்கத் சிங் கில்ஜியன், சுக்விந்தர் சிங் டேனி, பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா ஆகிய நான்கு பேர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

சித்து, சோனியா, அமரீந்தர்
சித்து, சோனியா, அமரீந்தர்

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மேற்கொண்ட ஆலோசனையின்படி சித்துவுக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், தன்னிடம் ஆலோசனை கேட்காமலேயே காங்கிரஸ் தலைமை சித்துவுக்கு பதவி வழங்கிவிட்டதால், முதல்வர் அமரீந்தர் அதிருப்தியில் இருந்ததாகவும், இருப்பினும், தன்னைக் கேட்காமலேயே சித்துவுக்கு பதவி வழங்கிவிட்ட கட்சி மேலிடம், அடுத்த ஆண்டு தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக்கூட சித்துவை முன்னிறுத்தலாம் என்று அச்சமடைந்துவிட்டதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.

அதனால், கருத்து மோதல்களை மறந்து கட்சியை வலுப்படுத்தி, சித்துவுக்குப் பதவி வழங்கியதைத் தான் வரவேற்பதாகவும், அடுத்த ஆண்டு தேர்தலிலும் தன்னையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்றும் நேற்று அமரீந்தர் டெல்லி மேலிடத்திடம் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது.

கேப்டன் அமரீந்தர் Vs சிக்ஸர் சித்து: ரூ. 8 லட்சம் மின் கட்டண பாக்கி! - பஞ்சாப் காங்கிரஸில் விரிசல்?

அதேபோல், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சித்து இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றுக்கொள்வார் என்று நேற்றைய தினமே தலைமையிலிருந்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, சித்துவுடன் பதவியேற்கவுள்ள நான்கு செயல் தலைவர்களும் முதல்வர் அமரீந்தரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தனர். தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என்ற மாபெரும் அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொள்வதில் உறுதியாக இருக்கும் அமரீந்தரும், அவர்களின் அழைப்பை ஏற்று சித்துவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதாக நேற்று அறிவித்தார். தனது ஆதரவாளர்களையும் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

அதேபோல், சித்துவும் முதல்வர் அமரீந்தருக்கு அனுப்பியிருந்த அழைப்பு கடிதத்தில், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், அடுத்த ஆண்டு தேர்தலுக்குத் தயார்ப்படுத்தும் நோக்கிலும் விருப்பு வெறுப்புகளைக் களைந்து கட்சி மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

சித்து
சித்து

இந்தநிலையில், இன்று காலை பதவியேற்பு விழாவுக்குச் சில மணி நேரத்துக்கு முன்னதாக முதல்வர் அமரீந்தரும் அவரின் ஆதரவாளர்களும், சித்துவுடனும் அவரின் ஆதரவாளர்களுடனும் தேநீர் அருந்தியது, இத்தனை மாத காலமாக காங்கிரஸில் நிலவிவந்த உட்கட்சிப் பூசல்களுக்கு முடிவுரை எழுதியிருக்கிறது.

கடந்த சில மாதங்களில் சித்து - அமரீந்தர் இருவரும் நேரடியாகச் சந்தித்துப் பேசிக்கொண்டது இதுவே முதன்முறை. சித்துவுக்கு பதவி வழங்கியதற்குப் போர்க்கொடி தூக்கிய அமரீந்தர் இன்று தேநீர் விருந்தில் சகஜமாக இருந்தது மீண்டும் காங்கிரஸ் தலைமைக்கு புதுத் தெம்பை அளித்திருக்கிறது.

இந்தநிலையில், இன்று காலை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக ஆதிகாரபூர்வமாக சித்து பொறுப்பேற்றதை அடுத்து, முதல்வர் அமரீந்தர் விழா மேடையில் விருப்பு வெறுப்புகளைக் களைந்து சித்துவை வாழ்த்தி பேசினார். அப்போது அவர், ``மாநில தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சித்துவுக்கும், செயல் தலைவர்களுக்கும் எனது வாழ்த்துகள். சித்து, நீங்கள் அடுத்த சில வருடங்களுக்குப் பஞ்சாபை நிர்வகிக்கப்போகிறீர்கள். பஞ்சாபில் தீர்வுகாண வேண்டிய ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. கடந்த நான்கு வருடங்களாக நாம் இணைந்து நெருக்கமாக பணியாற்றியிருக்கிறோம்.

சித்து பிறந்தபோது, நான் எல்லையில் பாதுகாப்புப் பணியிலிருந்தேன். இன்று சித்து இவ்வளவு பெரிய பதவிக்கு உயர்ந்திருக்கிறார். நாம் அனைவரும் சிந்துவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பஞ்சாபுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் நாம் பாடுபட வேண்டும். பாகிஸ்தான் தினமும் ஆயுதங்களைவைத்தும், கையெறி குண்டுகளைவைத்தும் நம்மைத் தாக்கிவருகிறது. நமது எல்லைகளில் பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து ஊடுருவ முயல்கின்றன. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என்று பேசினார்.

இன்று காலை சித்துவின் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ``பஞ்சாப் தகராறு தீர்க்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்த நிலையில், விழாவில் அமரீந்தர் பேசிய வார்த்தைகள் இரண்டாகப் பிளந்து கிடந்த கட்சியை ஒருங்கிணைத்திருக்கிறது. இதன் மூலம், பஞ்சாபில் காங்கிரஸ் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கிறது.

கேப்டன் அமரீந்தர் Vs சிக்ஸர் சித்து: ரூ. 8 லட்சம் மின் கட்டண பாக்கி! - பஞ்சாப் காங்கிரஸில் விரிசல்?

பஞ்சாப் காங்கிரஸில் நிலவிவந்த உட்கட்சிப் பூசல்களை வைத்து அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எளிதில் வாக்குகளைப் பிரித்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கு தற்போது ஏமாற்றம் மிஞ்சியிருப்பதாகவும், அகாலி தளம் கட்சி வேளாண் சட்டங்களால், பாஜக கூட்டணியிலிருந்து விலகிவிட்டதால் தற்போது பஞ்சாபில் பாஜக-வின் நிலைமையும் கஷ்டம்தான் என்றும், அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு