Published:Updated:

விவசாயிகள் போராட்டம் முதல் தேர்தல் பிரசாரம் வரை! -விபத்தில் உயிரிழந்த நடிகர் தீப் சித்து யார்?!

நடிகர் தீப் சித்து ( Twitter )

பஞ்சாபி நடிகர் தீப் சித்து மரணத்தில் எழும் சந்தேகங்கள்... காரணம் என்ன?!

விவசாயிகள் போராட்டம் முதல் தேர்தல் பிரசாரம் வரை! -விபத்தில் உயிரிழந்த நடிகர் தீப் சித்து யார்?!

பஞ்சாபி நடிகர் தீப் சித்து மரணத்தில் எழும் சந்தேகங்கள்... காரணம் என்ன?!

Published:Updated:
நடிகர் தீப் சித்து ( Twitter )

டெல்லியில் ஓராண்டுக்கு மேலாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 26, 2020 அன்று, டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அப்போது விவசாயிகளின் ஒரு பகுதியினர் காவல்துறை அனுமதித்த பாதையிலிருந்து விலகி செங்கோட்டை நோக்கி பயணம் செய்து கலவரத்தில் ஈடுபட்டனர். அந்தக் கலவரத்தைத் தலைமை தாங்கியவர் பஞ்சாபி நடிகர் தீப் சித்து. இந்தக் கலவரத்தைத் தானே தலைமை தாங்கி நடத்தியது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் தீப் சித்து. இந்த நிலையில், நேற்று (பிப். 15) இரவு 9 மணி அளவில் நடந்த கார் விபத்து ஒன்றில் சிக்கி நடிகர் தீப் சித்து மரணமடைந்தார். பஞ்சாப்பில் தேர்தல் தேதி நெருங்கியிருப்பதால், தீப் சித்துவின் மரணம் பல்வேறு மர்மங்களைக் கிளப்பியிருக்கிறது!

தீப் சித்து
தீப் சித்து

யார் இந்த தீப் சித்து?

பஞ்சாப் மாநிலம், முக்த்சரில் (Muktsar) பிறந்தவர் சித்து. முதலில் மாடலிங் உலகில் அறிமுகமானவர், 2015-ம் ஆண்டு நடிகராகத் திரையுலகில் அறிமுகமானார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர், வழக்கறிஞராகவும் பணியாற்றியிருக்கிறார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட நடிகர் சன்னி தியோலுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருக்கிறார் தீப் சித்து. 2020-ம் ஆண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக `சம்பு மோர்ச்சா' என்ற அமைப்பைத் தொடங்கினார்.

விவசாயிகள் போராட்டம் தொடங்கியது முதலே சம்பு மோர்ச்சா அமைப்பை விவசாயிகள் போராட்டத்தில் இணைக்க முயன்றுவந்தார் சித்து. ஆனால், தொடக்கம் முதலே அவரைத் தங்களோடு இணைத்துக்கொள்ள மறுத்துவந்தனர் விவசாயிகள். `தீப் சித்து பா.ஜ.க ஆதரவாளர் என்பதால், அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என விவசாயச் சங்கங்கள் தொடக்கம் முதலே எச்சரித்துவந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செங்கோட்டைக் கலவரம்!

ஜனவரி 26 அன்று, காவல்துறை அனுமதித்த இடத்தில் மட்டுமே பேரணி நடத்தப்போவதாக விவசாயச் சங்கங்கள் உறுதியளித்திருந்தன. இந்த நிலையில், சில விவசாயச் சங்கங்களை இணைத்துக்கொண்டு தன்னுடைய ஆள்களுடன், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே பேரணியைத் தொடங்கியிருக்கிறார் தீப் சித்து. அதுமட்டுமில்லாமல், தீப் சித்து தலைமையிலானவர்கள் செங்கோட்டை நோக்கிப் பயணப்பட்டு, அங்கே மதக்கொடியை ஏற்றி, கலவரத்தில் ஈடுபட்டனர். இந்தக் கலவரத்தில் லக்கா சித்தானா (Lakha Siddhana) என்ற பிரபல ரௌடியோடு இணைந்து வன்முறைகளில் தீப் சித்து ஈடுபட்டிருப்பதாக விவசாயிகள் சிலர் குற்றஞ்சாட்டினர்.

தீப் சித்து பா.ஜ.க ஆதரவாளர். அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவே இப்படியான வன்முறைகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார்!
தீப் சித்து பற்றி விவசாயச் சங்கங்கள்
மோடியுடன் நடிகர் தீப் சித்து
மோடியுடன் நடிகர் தீப் சித்து

இதற்கிடையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் தீப் சித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்ததை அடுத்து, மிகப் பெரிய சர்ச்சையானது. அந்தப் புகைப்படங்களில் தீப் சித்துவுடன் காணப்பட்ட பா.ஜ.க நிர்வாகியான நடிகர் சன்னி தியோல், ``எனக்கும் என் குடும்பத்துக்கும் நடிகர் தீப் சித்துவோடு எந்தவொரு நேரடி தொடர்பும் கிடையாது'' என விளக்கமளித்தார்.

தொடர்ந்து, 2020 பிப்ரவரியில் செங்கோட்டைக் கலவர வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார் தீப் சித்து. பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில்தான், தன் காதலியும் நடிகையுமான ரீனா ராயுடன் டெல்லியிலிருந்து பஞ்சாப் திரும்பிக் கொண்டிருந்த தீப் சித்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் பயணித்த ஸ்கார்ப்பியோ கார் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியில் மோதி விபத்து ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தீப் சித்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீப் சித்து மரணத்துக்கு, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பக்வந்த் மான், சிரோமணி அகாலி தளம் கட்சியினர், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பல தரப்பட்டவர்களும் இரங்கல்களைப் பதிவு செய்துவருகின்றனர். தீப் சித்துவின் ரசிகர்கள் சிலர், ``சித்து மரணத்தில் மர்மம் இருக்கிறது. அவருடன் பயணித்த ரீனா ராய் பெரிய காயங்கள்கூட இல்லாமல் தப்பித்திருக்கிறார். ஏதோவொரு ரகசியம் தீப் சித்துவிடம் இருந்திருக்கிறது. அந்த ரகசியத்தைப் பஞ்சாப் தேர்தல் சமயத்தில் அவர் வெளியிட்டுவிடக்கூடாது என்று அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறாரோ என்கிற சந்தேக எழுகிறது'' என்று ட்விட்டரில் பதிவிட்டு அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்கள்.

தீப் சித்து
தீப் சித்து
ANI

இது குறித்துப் பேசும் பஞ்சாப் அரசியலை உற்று நோக்கும் சிலர், ``ஏற்கெனவே பஞ்சாப்பில், சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு பேர் மத ரீதியான மோதலில் கொல்லப்பட்டனர். பஞ்சாப் தேர்தலையொட்டி நடந்த இந்தக் கொலைகள் தொடர்பான வழக்குகளில் எந்த ஒரு பெரிய முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில், எதிர்வரும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தவரான நடிகர் தீப் சித்து உயிரிழந்திருக்கிறார். சிரோமணி அகாலி தளம் கட்சியிலிருந்து பிரிந்துவந்து ஆரம்பிக்கப்பட்ட சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களைக் கடந்த சில வாரங்களாக ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார் சித்து. இவர், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தீப் சித்து நடிகர் மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளோடும் நெருங்கிய தொடர்பிலிருப்பதால், அவர் மரணத்தில் இயல்பாகவே சந்தேகம் எழுகிறது. அதுவும் தேர்தலுக்கு ஐந்து நாள்கள் முன்பாக அவர் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது. இந்த விவகாரத்தில் சரியான முறையில் காவல்துறையினர் விசாரணை செய்தால் பல உண்மைகள் வெளிவரலாம் எனத் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism