Published:Updated:

கமலை ஏன் சந்தித்தார் பி.வி.சிந்து?- சுவாரஸ்யப் பின்னணி

கமல் - சிந்து
கமல் - சிந்து

``கோபேக் கோபேக்னு சொல்லி அவர் வரமாலே போய்விட்டால்... தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது. நேர்மையான விமர்சனங்களை முன்வைப்போம்.

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்துப்பேசினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல், `இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்த வீராங்கனை தற்போது இந்த வீட்டில் இருக்கிறார். நாங்கள் இருந்த வீடு இது. இப்போ அலுவலகமாக இருக்கிறது. இங்கே அவர்களை வரவேற்பதில் நாங்களும், நண்பர்களும் பெருமைப்படுகிறோம். இது கட்சிக்கெல்லாம் அப்பாற்பட்டது. தேசத்தின் பெருமையைக் கொண்டாடும் ஒரு விஷயம்’ என்றார். தொடர்ந்து பேசிய பி.வி.சிந்து, `எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல். அவரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அவருடைய நடிப்பு மிகவும் பிடிக்கும். அவரின் படங்களைப் பார்த்திருக்கிறேன்.

கமல் - பி.வி.சிந்து பத்திரிகையாளர் சந்திப்பு
கமல் - பி.வி.சிந்து பத்திரிகையாளர் சந்திப்பு

என்னுடைய ஒலிம்பிக் குவாலிஃபிகேஷன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நான் என்னுடைய முழுத் திறனை அதில் வெளிப்படுத்துவேன். அதேபோல டோக்கியோ போட்டிக்காகவும் தயாராகிவருகிறேன்” என்றார். இதையடுத்து பேசிய கமல், ``என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் இங்கே வாய்ப்பில்லாத ஏழைக்குழந்தைகளுக்குப் பயிற்சி மையம் அமைக்க வேண்டும். அது வியாபாரமாக இல்லாமல், நாட்டுக்காக செய்ய வேண்டும். அதற்கு என்ன உதவிகள் தேவையோ அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். பி.வி.சிந்து தான் சம்பாதித்த பெருமையையும் புகழையும் மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்க முடியாது. ஆனால், அவரிடம் இருக்கும் திறமையை மற்றவர்களுக்கு அளிக்க முடியும். 8 வயதிலிருந்து அவர்கள் இதே கனவாக, முழுமூச்சாக இருந்து சாதித்துள்ளார்” என்றார்.

`சீன அதிபரின் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ``இரண்டு நாட்டுத் தலைவர்கள் 60 வருடங்களுக்குப்பிறகு சந்திக்கின்றனர். சீனாவிலிருந்து அதிபர் வருகிறார். இருபெரும் தலைவர்களும், இரண்டு நாடுகளுக்கு நன்மை பயக்கும் முடிவுகள் எடுக்க முனைந்தாலும், அது வெற்றிபெற வேண்டும் என்று இந்தியராகவும், இந்திய - சீன உறவு மேம்பட வேண்டும் என்ற ஆசையுள்ளவனாகவும் இதை தெரிவித்துக்கொள்கிறேன். சீன அதிபரிடம் எங்கள் பிரதமர் முன்வைப்பார். அதைத் திறம்பட செய்ய வாழ்த்துகள். பேனர் கூடாது என நான் சொல்லவே முடியாது.

கமல்ஹாசன் - பி.வி.சிந்து
கமல்ஹாசன் - பி.வி.சிந்து

ஏனென்றால் நான் சினிமாத்துறையில் இருப்பவன். எங்களுக்கு பேனர் உண்டு. சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற இடங்களில் பேனர் வைக்கலாம். அது எல்லா நகரங்களிலும் அதற்கு அனுமதி உண்டு; இடமுண்டு. சீன அதிபர் வருகையில் அப்படிச் செய்ய முடியாது. அவர் இங்கே வருகிறார். அவரை வரவேற்பது நாட்டின் கடமை. சீனா- திபெத் இருநாட்டின் சித்தாந்தங்கள் வேறுபட்டவை” என்றார். மேலும், `கோபேக் மோடி ஹேஷ்டேக்’ இம்முறையும் டிரெண்டாகும்பட்சத்தில் அது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கேட்டதற்கு, ``கோபேக் கோபேக்னு சொல்லி அவர் வரமாலே போய்விட்டால்... தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது. நேர்மையான விமர்சனங்களை முன்வைப்போம். அதை அவர் எப்படி ஏற்றுக்கொள்வாரோ அப்படி ஏற்றுக்கொள்ளட்டும்” என்று தெரிவித்தார்.

இந்த திடீர் சந்திப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தரப்பில் விசாரித்தோம். ``இந்தச் சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. தெலுங்கு சினிமாவில் கமல் நடித்த படங்களைப்பார்த்து ஈர்க்கப்பட்டுள்ளார் பி.வி.சிந்து. சென்னை வரும்போது, கமல்ஹாசனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்திலும், பிடித்த நடிகர் என்பதாலும் இந்தச் சந்திப்பு அரங்கேறியுள்ளது. எங்களுக்கே இந்தச் சந்திப்பு குறித்து 3 மணி நேரத்துக்கு முன்புதான் தெரியும்” என்றனர்.

முன்னதாக சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிந்து கலந்துகொண்டார். அங்கிருந்த மாணவர்களுடன் ஜாலியாக பேட்மின்டன் விளையாடினார். தொடர்ந்து, அந்த மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அதையடுத்து, அவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு