Published:Updated:

`செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்கத்தான் இந்த ரெய்டு!'-அதிகாரிகள் ஆய்வால் கொதித்த கரூர் தி.மு.க

செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணிக்குச் சொந்தமான கொசுவலை உற்பத்தி தொழிற்சாலையில் தர நிர்ணய அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

அதிகாரிகள் சோதனை
அதிகாரிகள் சோதனை

முன்னாள் அமைச்சரும் தி.மு.க மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி என்பவரது வீடு, கரூரை அடுத்த மூர்த்திப்பாளையம் பகுதியில் உள்ளது. அதேபகுதியில் ராசாயனக் கலவை கலந்த கொசுவலை தொழிற்சாலை ஒன்றை நடத்திவருகிறார். சுப்பிரமணி நடத்திவரும் இந்தக் கொசுவலை தொழிற்சாலையை, அவரின் அண்ணன் ராசப்பன் என்பவரின் பெயரில் நடத்திவருவதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், சுப்ரமணியின் வீடு மற்றும் கொசுவலை தொழிற்சாலையில், மதுரை மத்திய மண்டல சுங்கத்துறை கண்காணிப்பாளர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தர நிர்ணய அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்தத் தகவலை கேள்விப்பட்ட தி.மு.க-வினர், அங்கே குவிந்தனர். `தங்கள் சோதனைக்கு இதனால் இடைஞ்சல் வரக் கூடாது' என்பதற்காக, போதிய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.

Vikatan
 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

`கொசுவலை தொழிற்சாலை நடத்த உரிய அரசு அனுமதி பெற்றுள்ளதா?' என்றும் தரச்சான்றுகள் குறித்தும் கொசுவலையில் தயாரிக்கப்படும் நூலின் தரத்தையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு திரண்டிருந்த தி.மு.க-வினர், `ஆளுங்கட்சியின் அமைச்சர் தூண்டுதலின் பேரில், இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி தரவே, இப்படிச் செய்துள்ளனர்" என்று குற்றம்சாட்டினர்.

தொழிற்சாலையில் நடந்த சோதனை குறித்து அதிகாரிகள் கூறும்போது, ``இது வழக்கமான ஒன்றுதான். சுப்ரமணி மற்றும் அவரின் சகோதரர் உற்பத்தி செய்துகொடுக்கும் கொசுவலை நூல், மதுரை பைபாஸில் இருக்கும் புத்தாம்பூரில் உள்ள மற்றொரு நிறுவனம் மூலம் பைகளாகத் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அந்த பைகளில் உள்ள நூலின் தரம் குறைவாக இருப்பதாக எங்களுக்குத் தொடர்ச்சியாக புகார் வந்தது. அதனையொட்டியே இங்கு சோதனை நடத்தினோம். இங்குள்ள நூலை ஆய்வுக்கு எடுத்துச் செல்கிறோம். அந்த நூலில் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டால், சுப்பிரமணியின் தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சோதனையில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை" என்று தெரிவித்தனர்.

அதிகாரிகள் சோதனை
அதிகாரிகள் சோதனை

இதுகுறித்து, சுப்பிரமணியிடம் பேச முயன்றோம். அவர் சார்பில் நம்மிடம் பேசியவர்கள், ``நாங்கள் மிகவும் சரியாகவும் தரமாகவும் கொசுவலைகளை உற்பத்தி செய்துவருகிறோம். ஆனால், இங்குள்ள ஆளுங்கட்சிப் புள்ளியின் தூண்டுதலின்பேரில், இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் எண்ணம் ஈடேறாது. நாங்கள் சட்டப்படி இந்தப் பிரச்னையை சந்திப்போம்" என்கின்றனர் கொதிப்புடன்.