Election bannerElection banner
Published:Updated:

பிஎம் கேர்ஸ் நிதி பற்றி வாய் திறக்காத அன்னா ஹசாரே... விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் ஏன்?

அன்னா ஹசாரே
அன்னா ஹசாரே

வேளாண் சட்டங்களுக்கு எதிராக லட்சக்கணக்கான விவசாயிகள் இரண்டு வாரங்களாக டெல்லியில் போராடிவரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே திடீரென்று உண்ணாவிரதம் இருந்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராடிவருகின்றனர். தலைநகர் டெல்லியை முற்றுகையிடும் வகையில் டெல்லியின் எல்லையில் முக்கியச் சாலைகளை லட்சக்கணக்கான விவசாயிகள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். போராடிவரும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். சர்ச்சைக்குரிய அந்த வேளாண் சட்டங்களைத் திருத்துவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறும் மத்திய அரசு, அந்தச் சட்டங்களை வாபஸ் பெறுவதற்குத் தயாராக இல்லை.

அன்னா ஹசாரே
அன்னா ஹசாரே

ஆனால், விவசாயிகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் முற்றிலுமாக வாபஸ் பெறும் வரை டெல்லியைவிட்டு நகர மாட்டோம் என்று சொல்லி போராட்டத்தைத் தொடர்கிறார்கள். இந்தநிலையில்தான், விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 8-ம் தேதி `பாரத் பந்த்’ எனப்படும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நாடு தழுவிய இந்தப் போராட்டம் பல மாநிலங்களில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் எதிர்பாராத இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்தன.

ஒரு சம்பவம், உள்துறை அமைச்சர் அமித் ஷா சம்பந்தப்பட்டது. அன்றைய தினம் அவர் திடீரென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய அரசுக்கும் விவசாயிகள் பிரதிநிதிகளுக்கும் இடையே டிசம்பர் 9-ம் தேதியன்று 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில், டிசம்பர் 8-ம் தேதி விவசாயிகள் பிரதிநிதிகளுடன் அமித் ஷா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அந்தப் பேச்சுவார்த்தை நான்கு மணி நேரம் நடைபெற்றது. ஆனால், சுமுக உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. காரணம், வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்க முடியாது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டில் அமித் ஷா உறுதியாக இருந்தார். எனவே, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்வரை போராட்டத்தைக் கைவிட முடியாது என்று விவசாயிகள் உறுதியாகக் கூறிவிட்டு வந்தனர். இந்தநிலையில், ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்ட 6-ம் கட்டப் பேச்சுவார்த்தை டிசம்பர் 9-ம் தேதியன்று நடைபெறவில்லை.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இரண்டாவது சம்பவம், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சம்பந்தப்பட்டது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அன்றைய தினம் உண்ணாவிரதம் இருந்தார் அன்னா ஹசாரே. மகாராஷ்டிரா மாநிலம், அகமதுநகர் மாவட்டத்திலுள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் உண்ணாவிரதம் இருந்த அவர், `டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் பரவ வேண்டும் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலம் அரசுக்கு அழுத்தம் ஏற்பட வேண்டும். அதற்கு, விவசாயிகள் சாலைகளில் இறங்கிப் போராட வேண்டும். ஆனால், யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது’ என்று கூறினார்.

உண்ணாவிரதப் போராட்டம் என அன்னா ஹசாரே திடீரென்று எழுந்து உட்கார்ந்ததைப் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இத்தனை நாளாக இவர் எங்கே இருந்தார் என்ற கேள்வியை சமூக ஊடங்களில் பலர் எழுப்பினர். அரசு சொல்கிற இடத்துக்குப் போனால்தான் பேச்சுவார்த்தை என்று விவசாயிகளுக்கு நிபந்தனை விதித்த அமித் ஷாவை, அந்த நிபந்தனையைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு இறங்கிவரவைத்துவிட்டது விவசாயிகளின் போராட்டம். அப்படியிருக்கும்போது, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்துதான் விவசாயிகள் போராட்டம் எழுச்சி பெற வேண்டும் என்ற நிலை இல்லை. இத்தகைய சூழலில் திடீரென்று இவர் ஏன் என்ட்ரி ஆகிறார் என்று எல்லோரும் புருவங்களை உயர்த்தினர். அதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

2011-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மத்தியில் நடைபெற்றபோது, ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னா ஹசாரே நடத்தினார். அது நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தப் போராட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டனர்.

தற்போது டெல்லி முதல்வராக இருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் அந்த இயக்கத்தின் முக்கிய கர்த்தாக்களாக இருந்தனர். அன்னா ஹசாரேவுடன் இருந்து அந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர். 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. அதற்கு, அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் முக்கியக் காரணம் என்று சொல்லப்பட்டது. அன்னா ஹசாரே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர், காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அகற்றி பா.ஜ.க ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்தன.

அதே குற்றச்சாட்டை வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சமீபத்தில் எழுப்பினார். அன்னா ஹசாரேவின் போராட்டத்தை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்-ஸும் பா.ஜ.க-வும்தான் என்றும், காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ்-ஸும் பா.ஜ.க-வும் இணைந்து வகுத்த திட்டம் அது என்றும், அவர்களின் பின்னணியை அப்போது கவனிக்கத் தவறிவிட்டேன் என்றும் பிரசாந்த் பூஷண் கூறினார். அது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டிருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிவரும் நிலையில், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.

ஊழலை ஒழிப்பதற்கு மத்தியில் `லோக் பால்’ சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், மாநிலங்களில் `லோக் ஆயுக்தா’ கொண்டுவரப்பட வேண்டும் என்பது அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தின் முக்கியக் கோரிக்கை. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு, ஆட்சியதிகாரத்துக்கு இரண்டாவது முறையாக பா.ஜ.க வந்திருக்கிறது. ஆனால், லோக்பால் என்ன கதியில் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்குப் பிறகு அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிவிட்டார். கிரண் பேடி புதுச்சேரி கவர்னர் ஆகிவிட்டார். அந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்த பாபா ராம்தேவ் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புகொண்ட தொழிலதிபராகிவிட்டார். தற்போது, கொரோனா காலத்தில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட`பிஎம் கேர்ஸ்’ நிதிக்கு பல லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறுவனங்களும் பிரபலங்களும் அள்ளிக்கொடுத்திருப்பதாகவும், அது பற்றிய கணக்குகள் வெளியிடப்படாமல் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்தநிலையில், பிஎம் கேர்ஸ் நிதி பற்றி அன்னா ஹசாரே ஏன் பேசவில்லை என்று பலர் கேள்வி எழுப்பினர். அன்னா ஹசாரே மீது பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டை முன்வைத்ததற்கு, அன்னா ஹசாரே எந்தப் பதிலும் சொல்லவில்லை. இப்போது, விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், திடீரென அவர் உண்ணாவிரதம் இருந்ததைப் பற்றி பலர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள்.

இது குறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம். ``நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து லோக் பால் சட்டம் குறித்துப் பேசிக்கொண்டே இருந்தார்கள். அன்னா ஹசாரே போராட்டத்துக்குப் பிறகுதான் லோக் பால் வந்தது. தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அது செயல்படவில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அப்படி ஒரு சட்டம் வந்திருக்கிறது என்பதற்குக் காரணம் அன்னா ஹசாரேவின் போராட்டம்தானே... அவரது கிராமமான ராலேகான் சித்தியை முன்னேற்றுவதற்காக நிறைய விஷயங்களை எடுத்துச் செய்திருக்கிறார். இதுவரை சமூகத்துக்கு நிறைய பங்களிப்பை அவர் ஆற்றியிருக்கிறார்.

செந்தில் ஆறுமுகம்
செந்தில் ஆறுமுகம்

அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்ப அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பிறகு ஏன் அவர் போராட்டங்களுக்கு வரவில்லை என்று கேள்வி கேட்பதைவிட, விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து அவர் உண்ணாவிரதம் இருந்ததை வரவேற்க வேண்டும். உண்ணாவிரதம் இருந்ததன் மூலம் விவசாயிகள் போராட்டத்துக்கு அவர் வலுச்சேர்த்திருக்கிறார். அதன் மூலம் விவசாயிகளுக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சிதானே...” என்றார் செந்தில் ஆறுமுகம்.

நிறைவடைந்தது வேல் யாத்திரை... பா.ஜ.க சாதித்தது என்ன?

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகத்திடம் பேசினோம். ``இந்தியாவில் ஒட்டுமொத்த விவசாயிகளும் கொந்தளித்துப், போராடிவருகிறார்கள். டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் எழுச்சியின் உச்சத்துக்குப் போகிறது. லட்சக்கணக்கான விவசாயிகள் குடும்பங்களுடன் வந்து தலைநகரை முற்றுகையிட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு புரட்சியையே நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.அப்படியிருக்கும்போது, அன்னா ஹசாரே போன்ற ஒரு தனிநபர் உண்ணாவிரதம் இருந்து என்ன ஆகப்போகிறது?

சண்முகம்
சண்முகம்

அன்னா ஹசாரே வந்துதான் இந்தப் போராட்டத்துக்கு எழுச்சியூட்ட வேண்டும் என்ற நிலை இல்லை. அவர்மீது பல விமர்சனங்கள் இருக்கின்றன. அந்த விமர்சனங்களை விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் துடைத்துக்கொள்ள முடியுமா என்று அவர் நினைத்திருக்கலாம். எனவே, அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு