பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த சிவராஜ் சிங் சௌகான் மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருக்கிறார். மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் சௌஹான் கூறியிருக்கிறார்.
பாலக்கோட் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இது தொடர்பாகப் பேசிய அவர், "நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் அடிப்படையில் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படுகிறது. அதில் அதிகமான வாய்ப்பு தனியார்ப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கே கிடைக்கிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதைச் சரிசெய்ய அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குச் சாதி வேறுபாடின்றி, மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கவிருக்கிறோம். பாலக்கோட்டில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்'' என்றார். மேலும், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கல்லூரிக் கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் எனத் தெரிவித்திருக்கிறார்.

ஏழை மாணவர்களின் நலன் அடிப்படையில் இந்த அறிவிப்பு இருந்தாலும், இதன் பின்பு இரண்டு முக்கிய அம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒன்று இந்தி மொழி, மற்றொன்று அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மத்தியப் பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
இந்தியைப் பள்ளியில் பயில்வோராக, அரசுப் பள்ளி மாணவர்களே அதிகமாக இருக்கின்றனர். எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் அதிக வாய்ப்பளிப்பதன் மூலம் இந்தியில் மருத்துவம் படித்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதே அரசின் திட்டம் எனச் சொல்லப்படுகிறது. அதேவேளையில், அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் நடுத்தர, ஏழை மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.