Published:Updated:

``ஓ.பி.எஸ்-ஸுக்கு தேவர் அருள் இல்லை; உதயநிதிக்கு அரசியல் அறிவு வளரணும்"- சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

எடப்பாடியால் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டும், ஆர்.பி.உதயகுமாரால் சட்டமன்றத்தின் முதல் வரிசையில் அமர முடியவில்லை. ஆனாலும், மனம் தளராமல் ஆளுங்கட்சி, ஓ.பி.எஸ்-மீது விமர்சனங்களை வீசிக்கொண்டிருக்கும் அவரின் சமீபகால நடவடிக்கைகள் குறித்துச் சில கேள்விகளை முன்வைத்தோம்...

``ஓ.பி.எஸ்-ஸுக்கு தேவர் அருள் இல்லை; உதயநிதிக்கு அரசியல் அறிவு வளரணும்"- சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

எடப்பாடியால் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டும், ஆர்.பி.உதயகுமாரால் சட்டமன்றத்தின் முதல் வரிசையில் அமர முடியவில்லை. ஆனாலும், மனம் தளராமல் ஆளுங்கட்சி, ஓ.பி.எஸ்-மீது விமர்சனங்களை வீசிக்கொண்டிருக்கும் அவரின் சமீபகால நடவடிக்கைகள் குறித்துச் சில கேள்விகளை முன்வைத்தோம்...

Published:Updated:
ஆர்.பி.உதயகுமார்

"உங்கள் ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்ததால்தான், மழைநீர் வடிகால் பணி தாமதம் என்கிறார்களே?"

``குறைசொல்லும் நேரம் இது இல்லை. வடகிழக்குப் பருவமழை தொடங்கும் நேரத்தில், நீர்நிலைகள், வடிகால் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவேண்டிய நேரம் இது. ஆனால், அபாண்டமான குற்றசாட்டுகளை எதிர்க்கட்சி மீது சுமத் தவேண்டும் என்பதை ஆளுங்கட்சி கடமையாக வைத்திருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் சட்டமன்றத்தில் மட்டும் 3,327 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயாராக இருக்கிறதா... போதாத குறைக்கு 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளைம் நிறைவேற்றாமல் 80 சதவிகிதம் பூர்த்தியாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்."

சென்னை மழை
சென்னை மழை

"ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார்களே?"  

"இரண்டு சம்பவத்திலும் ஆணையம் அமைத்ததே எடப்பாடியார்தான். அதனால்தான் முழு அறிக்கை வெளியாகி, விவாதங்கள் நடக்கின்றன. இதில் உரிமை கொண்டாட தி.மு.க-வுக்கு தார்மிக உரிமைகூட இல்லை. அவ்வளவு ஏன்... தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணைய அறிக்கையெல்லாம் கிடப்பில் கிடக்கின்றன. அதைப் பற்றி அவர்கள் பேசத் தயாரா?"

``ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணைய அறிக்கையில் உங்கள் தரப்பில் இருக்கும் விஜயபாஸ்கர் பெயர் அடிப்பட்டிருக்கிறதே?"

"இதில் நான் கருத்து சொல்ல முடியாது. சம்பந்தப்பட்டவர்களிடம்தான் கேட்க வேண்டும்."

ஆறுமுகசாமி ஆணையம்
ஆறுமுகசாமி ஆணையம்

`` `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டி.வி-யைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என்று எடப்பாடி கூறியது பொய் என்பது உறுதியாகி இருக்கிறதே?"

``ஏதோ இதற்கு முன்பு தமிழகத்தில் கலவரம் நடக்காதது மாதிரியும், துப்பாக்கிச்சூடே நடக்காததுபோலவும், சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுக்கால வரலாற்றில் இதுதான் முதல் துப்பாக்கிச்சூடுபோலவும் பேசுகிறார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எந்த முதல்வர் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்... கலவரம் நடக்கும்போது, அங்கிருந்த மாவட்ட நிர்வாகம்தான் பணிகளை மேற்கொள்ளும். முதல்வர் செய்தி சேனல்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளக் கூடாது என்று சட்டம் எதுவும் இருக்கிறதா... அது என்ன தேசவிரோத குற்றமா?"

``மாநிலத்தில் நடக்கும் ஓர் அசம்பாவிதத்தைச் செய்தி சேனலை சாதாரண மக்கள் பார்த்து தெரிந்துகொள்வதற்கும், முதல்வர் தெரிந்துகொள்வதற்கும் வித்தியாசமில்லையா?"

``உளவுத்துறை போன்ற அமைப்புகள் விஷயத்தைத் தன்னிடம் சொல்லவில்லை என்று எடப்பாடியார் மறுக்கவில்லை. சம்பவம் நடக்கும்போது தலைமைச் செயலகத்திலேயேதான் அவர் இருந்தார். அரசு அமைப்புகள் தன்னிடம் சொல்லும் ரகசியத் தகவல்களை முதல்வர் எப்படி வெளியே சொல்ல முடியும்?"

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

``கோவை கார் வெடிப்புச் சம்பவத்தில் அ.தி.மு.க ஓர் அறிக்கையோடு கடமையை முடித்துவிட்டதே?"

``நாடு முழுவதும் ராமஜென்ம பூமிக் கலவரம் நடந்தபோது, தமிழகம் அம்மா ஆட்சியில் அமைதியாக இருந்தது. 1998-ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற கோவை தொடர் குண்டுவெடிப்புபோலவே, தற்போதும் தி.மு.க ஆட்சியில் பயங்கரவாதம் வேரூன்றி, தலைதூக்குகிறது. இதை தி.மு.க அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆனால், மாவட்டப் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தெரியாமல் குழந்தைத்தனமாகப் பேசுகிறார். பயங்கரவாத்தை இரும்புக்கரம்கொண்டு அடக்க வேண்டும்."

``ஆனால், என்.ஐ.ஏ பாஜக-வின் கிளை அமைப்புபோலச் செயல்படும் என்கிறார்களே?"

``முதல்வர்தான் விசாரணையை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்தார். அப்படியிருந்தும், இது போன்ற கருத்துகளை அவர்களின் கூட்டணிக் கட்சியினரே கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையில் இந்த விவகாரத்தை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்தது சரிதான்."

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

``கடந்த 10 ஆண்டுகளாக மது விற்பனை செய்த நீங்கள், தற்போது தீபாவளிப் பண்டிகைக்கான மது விற்பனை குறித்து கவலைப்படுவது நியாயமா?"

``எதிர்க்கட்சியாக இருக்கும்போது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வீட்டுக்கு முன்பு நின்று அவர்தான் போராட்டம் செய்தார். இப்போது ஆளுங்கட்சியாக வந்த பின்னர், மது விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது."

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

``அப்படியென்றால், இப்போது நீங்கள் எதிர்க்கட்சி என்பதால் டாஸ்மாக் குறித்து சம்பிரதாயக் கவலைப்படுகிறீர்களா?"

``அப்படியில்லை... எங்கள் ஆட்சியில் படிப்படியாக 500 கடைகளைக் குறைத்தோம். ஆனால், தற்போது டாஸ்மாக் கடைகளில் அமைச்சருக்குப் பணம் கொடுத்துவிட்டு, ஓப்பன் பார் வைக்கும் அளவுக்கு அதை விரிவுபடுத்திருக்கிறார்கள். தனிநபர் சாராய சாம்ராஜ்யம் நடக்கிறது என்பதைத்தான் அப்படி குறிப்பிட்டேன்."

"அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் நீங்கள் தீபாவளிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று வலியுறுத்துவது சரியா?"

" அண்ணாவின் கொள்கையைத்தான் நாங்கள் கடைப்பிடிக்கிறோம். ஆனால், எம்.ஜி.ஆர்., அம்மா வாழ்த்து சொன்னார்களே... கொள்கையை மாற்றிக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. ஆனால், மக்கள் எதிர்பார்ப்பை முதல்வராக நிறைவேற்ற வேண்டும்."

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி


" கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்திவிட்டு, மதுரையில் கட்டமைப்பு சரியில்லாதபோது முதலீட்டாளர்கள் வானத்திலிருந்தா வருவார்கள் என்று விமர்சனம் செய்வது வேடிக்கையாக இல்லையா?"

" மதுரையில் ஐடி பார்க் அமைக்க தேர்வான இடம் அருகே, மய்ய பேருந்து நிலையம், பூ மார்க்கெட் என நெருக்கடி அதிகமாக இருக்கிறது. இதை முதலீட்டார்கள் விரும்ப மாட்டார்கள். நான் அமைச்சராக இருந்தபோது பாண்டிக் கோயில் அருகே ஐடி பார்க் திறக்கப்பட்டிருக்கிறது. அதை மேம்படுத்த வேண்டும்."

" `ஏழு முறை நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டவர்’ என்று ஓ.பி.எஸ்-ஸை விமர்சனம் செய்யும் நீங்களும்தான் பல முறை நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறீர்களே?"

" அம்மா மறைவுக்குப் பிறகு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கிவிட வேண்டும் என்று கட்சியினர் தீர்மானம் போட்டார்கள். அதைத்தான் நான் வழிமொழிந்தேன். இப்போது கட்சியினர் எடப்பாடியாரைத் தலைவராக ஏற்றுக்கொண்டதும், இந்த நிமிடம் வரை அதே நிலைபாட்டில்தான் நான் இருக்கிறேன். ஆனால், ஓபிஎஸ் தனிப்பட்ட முறையில் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேயிருக்கிறார்.’’

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

"அ.தி.மு.க ஆட்சியில் துணைவேந்தர் பதவிக்கு 50 கோடி ரூபாய் வரை பேரம் நடந்தாக முன்னாள் ஆளுநர் குற்றம்சாட்டியிருக்கிறாரே?"

"இதற்குச் சம்பந்தப்பட்ட  துறையின் முன்னாள் அமைச்சர் அன்பழகன் தெளிவாக பதில் கூறிவிட்டார். ஆளுநருக்கும் ஆட்சியாளருக்கும் இருக்கும் புரிதலின் அடிப்படையில்தான், மரபுவழியில்தான் நியமனம் நடக்கிறது. இருந்தபோதும் துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்குச் சம்பந்தமில்லை. தேடுதல் குழுதான் முடிவுசெய்கிறது."


"தமிழகத்தில் 73 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்திருப்பதாகச் சொல்லும் நீங்கள், 10 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?’’

"எங்கள் ஆட்சி முடியும்போது அந்த எண்ணிக்கை 60 லட்சமாக இருந்தது. இப்போது 73 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட திட்டங்கள் வைத்திருந்தோம். இன்றைய ஆட்சியாளர்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பதே எனது கேள்வி."

ஜெயலலிதா சமாதியில் பன்னீர் தர்மயுத்தம்
ஜெயலலிதா சமாதியில் பன்னீர் தர்மயுத்தம்

"உங்களின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்காக சட்டமன்றத்தையே புறக்கணிப்பது நியாயமா?

"அ.தி.மு.க-வின் பொன்விழா நிறைவுநாள் விழாவை மழுங்கடிக்கவே, அதேநாளில் (17.10.2022) சட்டமன்றத்தை திமுக கூட்டியது. இரண்டாவதாக துணைத் தலைவர் என்பது எனக்கானதில்லை. அது எங்களின் உரிமைப் பிரச்னை. அதை மறுத்ததால்தான் சட்டமன்றத்தைப் புறக்கணித்தோம். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை, எங்கள் பொதுச்செயலாளர் பக்கத்தில், அதுவும் துணைத் தலைவர் என்ற பொறுப்பில் அமரவைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... அவரது விருப்பத்துக்கெல்லாம் எங்களால் நடக்க முடியாது. குறிப்பாக, அப்படி ஒரு பதவியே இல்லை என்று கூறிவிட்டு, ஓ.பி.எஸ்-ஸை, துணைத் தலைவர் என்று பேச அழைக்கிறார் சபாநாயகர். அதன் உள்நோக்கம் என்ன... இதே பதவியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக துரைமுருகன் இருந்திருக்கிறாரே... உங்களுக்கு ஒரு நீதி... எங்களுக்கு ஒரு நீதியா?"

"தேவர் ஜயந்திக்கான தங்கக் கவசத்தைக் கொடுக்கும் உரிமையை உங்களால் பெற முடியவில்லையே... இது ஓ.பி.எஸ்-ஸுக்கு வெற்றிதானே?"

"தங்கக் கவசத்தைத் தேவருக்கு சாத்தவிடாமல் தடைசெய்து, பழியை எங்கள்மீது சுமத்த ஓ.பி.எஸ் சூழ்ச்சி செய்கிறார் என்று எங்களுக்குத் தகவல் வந்தது. அதன்படிதான், நீதிமன்றத்தை நாடினோம். ஆனால், வங்கியிலிருந்து கவசத்தை வருவாய்த்துறை பெற உத்தரவிட்டது நீதிமன்றம். அப்படித் தடையில்லாமல் தங்கக் கவசம் சாத்தப்படவேண்டும் என்று மேல்முறையீடு செய்யவில்லை. இதில் எடப்பாடியின் மதிநுட்பமும் இருக்கிறது. இதுவரை கவசத்தை எடுத்துக்கொடுத்த ஓ.பி.எஸ்-ஸுக்கு இந்த முறை தேவரின் அருள் இல்லை."

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

"தேவரின் அருள் இல்லாததால்தான் எடப்பாடியால் பசும்பொன்னுக்கு வர முடியவில்லையோ?"

"அப்படியெல்லாம் இல்லை. எடப்பாடி முதல்வராக இருந்துபோது தொடர்ந்து ஜயந்தி விழாவில் பங்கேற்றிருக்கிறாரே... தேவரின் ஆசி இருப்பதால்தான் இது நடந்தது. ஆனால், தற்போது எங்களுக்கும், ஓ.பி.எஸ்., சசிகலா என மூவருக்கும் அடுத்தடுத்து நேரம் ஒதுக்கியிருக்கிறது தி.மு.க அரசு. நாங்கள் எப்போதும் பலவீனமாக இருக்க வேண்டுமென்றே தி.மு.க நினைக்கிறது. அதை எடப்பாடியார் முறியடிப்பார்."

"பசும்பொன்னில் 'எடப்பாடி வாழ்க' என்ற கோஷத்தால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறதே?"

"ஒரு பிரச்னையும் இல்லை. சிலர் செயற்கையாகத் திட்டமிட்டு அது போன்ற ஒரு ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். மறுநாள்கூட நான் அங்கு சென்றபோது எந்தச் சலசலப்பும் இல்லையே."  

"தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இருப்பது அண்ணன், தம்பி போட்டி என்று கே.என்.நேரு கூறுயிருக்கிறாரே?"

"திராவிடர் கழகத்திலிருந்து அரசியல் கட்சியாக பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க உருவானது. அதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எம்.ஜி.ஆர் தலைமையில் அ.தி.மு.க உருவானது. இது திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சிதான். ஜமீன்களும், மிட்டா மிராசுகளும், அதிபர்களும்தான் தேசியக் கட்சிகளின் அரசியலில் ஈடுபட முடிந்தது. தலைவர், தொண்டன் என்ற நிலையை அண்ணா மாற்றி, தலைவர் அண்ணனாகவும், தொண்டர்களை தம்பிகளாகவும் கருதினார். அதனால்தான் தற்போதுவரை தேசியக் கட்சிகளுக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுக்கவில்லை. திராவிட இயக்கங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதன்படி, திராவிட இயக்கத்தில் இருக்கும் எல்லாரும் அண்ணன் தம்பிகள்தான். அதேநேரத்தில் தமிழக மக்களுக்கான சமூகநீதியை அ.தி.மு.க-தான் அதிகமாக மீட்டெடுத்திருக்கிறது."

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

"தயவுசெய்து ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்போல இருக்காதீர்கள் என்று திருமணவிழா ஒன்றில் உதயநிதி பேசிருக்கிறாரே?"

"உதயநிதிக்கு அரசியல் அறிவு வளர வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. கருத்து வேறுபாட்டால்தானே தி.மு.க-விலிருந்து எம்.ஜி,ஆர்., வைகோ உள்ளிட்டவர்கள் வெளியே சென்றார்கள்... பொதுவுடமைக் கட்சியிலேயே இரு பிரிவுகளாக இருக்கிறார்களே... கட்சிக்குள் கருத்து மோதல் ஏற்பட்டு, அதில் எதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்தான் கட்சியை வழிநடத்த முடியும். அவ்வளவு ஏன், தற்போது தி.மு.க அமைச்சரவையில் இருக்கும் பாதிப் பேர் அ.தி.மு.க-காரர்கள்தானே!"