Published:Updated:

புதிய தலைமைச் செயலாளர், உளவுத்துறை ஐ.ஜி, சென்னை போலீஸ் கமிஷனர் யார் யார்?

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

கொரோனா தடுப்புப் பணிகள் ஒருபுறமிருக்க, கோட்டையில் நடைபெறப் போகும் பணியிட மாறுதல்கள், அதிகாரிகள் மட்டத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமைச்செயலாளர் க.சண்முகம் அடுத்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அதேபோல, உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி இம்மாதத்துடன் ஓய்வுபெறுகிறார். சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக இருக்கும் ஏ.கே.விஸ்வநாதன் மூன்றாண்டுகள் பணி நிறைவு செய்துள்ளார். அவரிடத்திற்கு ஆள்தேடும் பணி தொடங்கியுள்ளது. ஆக, மூன்று முக்கியப் பதவிகள் அடுத்தடுத்து காலியாக உள்ளன. இவற்றை யார் பிடிப்பது என்பதில் உயரதிகாரிகளிடையே பெரிய சதுரங்க வேட்டையே நடைபெறுகிறது. விவரமறிய கோட்டையை வட்டமடித்தோம்.

தலைமைச் செயலாளர் சண்முகம்
தலைமைச் செயலாளர் சண்முகம்

தமிழகத்தின் நிதிச்சூழல் தடுமாற்றத்துடன் இருப்பதால், வரும் ஜூன் 7-ம் தேதியுடன் ஓய்வுபெறும் தலைமைச்செயலாளர் சண்முகத்திற்கு ஓராண்டு பணிநீட்டிப்பு வழங்கி, உடன் வைத்துக் கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். ஆனால், இதற்கு சண்முகம் ஒத்துக்கொள்ளவில்லை என்கிறார்கள். இதற்கு மேலும் இப்பொறுப்பில் இருந்தால், அரசின் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு தான் பொறுப்பாக நேரிடும் என சண்முகம் எண்ணுகிறாராம். சமீபத்தில், தி.மு.க-வுடன் அவர் எதிர்கொண்ட உரசல்களும் அவரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன. `என்னை விட்டுவிடுங்கள், வேறு யாரையாவது தலைமைச்செயலாளராக நியமித்துக்கொள்ளுங்கள்’ என முதல்வரிடமே சண்முகம் நேரடியாகக் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால், 1984 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான மீனாட்சி ராஜகோபாலின் பெயர்தான் முதலில் வரும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் பயிற்சிப் பிரிவு கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணிபுரிகிறார். அவரை தலைமைச் செயலாளராக அமர்த்த ஒரு பா.ஜ.க லாபி டெல்லி வரை காய் நகர்த்துகிறது. தமிழகத்தில் கவர்னர் ஆட்சி கொண்டுவர நேரிட்டால், மீனாட்சி ராஜகோபால் தான் நமக்கு சரியான ஆள் என டெல்லியில் தூபம் போடுகின்றனர். ஆனால், மீனாட்சி ராஜகோபால் கோட்டைக்குள் காலடி எடுத்துவைத்தால், தங்கள் ஆட்டம் முடிந்துவிடுமென சில சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் குழு அமைத்து முட்டுக் கட்டை போடுவதால், அம்முயற்சி இதுவரை பலனளிக்கவில்லை.

மீனாட்சி ராஜகோபால், ராஜீவ் ரஞ்சன்
மீனாட்சி ராஜகோபால், ராஜீவ் ரஞ்சன்

ரவுல்கும்லியன் புஹ்ரில், ராஜீவ் ரஞ்சன், சந்திரமெளலி மூவரும் மத்திய அரசுப் பணியில் உள்ளனர். இவர்களில் ரவுல்கும்லியன், சந்திரமெளலி இருவரும் இன்னும் மூன்று மாதங்களில் அடுத்தடுத்து ஓய்வுபெறவுள்ளனர். மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறையின் செயலாளராக இருக்கும் ராஜீவ் ரஞ்சனுக்கு செப்டம்பர் 2021 வரை பணிக்காலம் உள்ளது. சில மத்திய அமைச்சர்கள் மூலமாக தலைமைச்செயலாளர் பதவிக்கு அவரும் முயற்சிக்கிறார். ஆனால், ஏற்கெனவே நிரஞ்சன் மார்டிக்குப் பிறகு உள்துறை செயலாளர் பொறுப்பை அவருக்கு ஒதுக்க அ.தி.மு.க அரசு விரும்பாததால், இம்முறை தலைமைச் செயலாளர் வாய்ப்பும் கிடைப்பது கடினம் என்கிறது கோட்டை வட்டாரம்.

சீனியாரிட்டிபடி அடுத்த இடத்தில் இருக்கும் தமிழக நில சீர்த்திருத்தத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜக்மோகன் சிங் ராஜூவுக்கு இன்னும் மூன்றாண்டுகள் பணிக்காலம் இருக்கிறது. இருந்தாலும், அவர்மீது மத்திய அரசில் சில புகார்கள் நிலுவையில் இருப்பதால், தலைமைச் செயலாளராகும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான். இவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் 1986 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ஹன்ஸ் ராஜ் வர்மாவுக்குதான் `ஜாக்பாட்’ யோகம் காத்திருக்கிறது.

ஹன்ஸ் ராஜ் வர்மா
ஹன்ஸ் ராஜ் வர்மா

கொங்குமண்டல அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணிபுரிகிறார். மே 2024 வரையில் இவருக்கு பணிக்காலம் உண்டென்பதால், ஹன்ஸ் ராஜ் வர்மாவை தலைமைச் செயலாளராக அமர்த்தினால் பலவகைகளில் தங்களுக்கு உதவியாக இருக்கும் என அ.தி.மு.க தலைவர்கள் எண்ணுகிறார்களாம்.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர் ஓடேம் தாய், `டிபிட்கோ’ தலைவராக உள்ள கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. இவர்களைத் தவிர, பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படும் டி.வி.சோமநாதன் பெயரும் பட்டியலில் அடிபடுகிறது. ஆனால், ஹன்ஸ் ராஜ் வர்மாவின் பெயரே பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

சத்தியமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி
சத்தியமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி

உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி இம்மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். இவரும் தனக்கு பணிநீட்டிப்பு வேண்டாமென முதல்வரிடம் கேட்டுக்கொண்டாராம். புதிய உளவுத்துறை ஐ.ஜி -யாக, சென்னை மத்திய குற்றப்பிரிவின் இணை ஆணையராக இருக்கும் ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குள்ளாக, சத்தியமூர்த்தி டீமில் இருந்த இரண்டு டிஎஸ்பி-கள் வெவ்வேறு துறைக்கு மாறுதல் வாங்கிச் சென்றுவிட்டது உளவுத்துறைக்குள் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது.

சென்னைப் பெருநகர காவல்துறையின் ஆணையராக இருக்கும் ஏ.கே.விஸ்வநாதன் இப்பொறுப்பில் மூன்றாண்டுகள் பணி நிறைவு செய்துள்ளார். புதிய ஆணையரைத் தேடும் பணி தற்போது தொடங்கியுள்ளது. ஏ.கே.விஸ்வநாதன் சர்ச்சையில் சிக்காத ஆள் என்பதால், ``சென்னை காவல்துறை மாதிரி, அப்படியே உளவுத்துறையையும் கவனிச்சுக்கோங்க” என இவரை உளவுத்துறை ஏடிஜிபி-யாக நியமிக்க முதல்வர் பேசினாராம். ஆனால், தனக்கு சில மாதங்கள் விடுமுறை மட்டும் அளிக்குமாறு ஏ.கே.விஸ்வநாதன் கடிதம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காலியாகவுள்ள சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையர் பணியிடத்திற்கு இரண்டு பேர் கடுமையாக முட்டிமோதுகின்றனர்.

ஜெயந்த் முரளி, சந்தீப் ராய் ரத்தோர்
ஜெயந்த் முரளி, சந்தீப் ராய் ரத்தோர்

ஒருவர், 1991 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி. அத்திவரதர் வைபவம், உள்ளாட்சித் தேர்தல் என பல நிகழ்ச்சிகளை சச்சரவுகள் இல்லாமல் கையாண்டதால் முதல்வரின் `குட்புக்’கில் இடம்பிடித்துள்ளார். இரண்டாமவர், 1992 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, திஹார் சிறைச்சாலையின் கமாண்டன்ட் எனப் பல பொறுப்புகளை வகித்தவர். இவர்கள் இருவருக்கும் இடையேதான் கடும்போட்டி நிலவுகிறது. இதில், ஜெயந்த் முரளியின் கை தற்போது ஓங்கியுள்ளது.

இவர்களைத் தவிர, தமிழக காவல்துறை நிர்வாகப் பிரிவின் ஏடிஜிபி-யாக இருக்கும் கந்தசாமியும், சென்னைப் பெருநகர காவல் ஆணையர் பொறுப்புக்கு முயற்சிக்கிறாராம். ``இந்த லிஸ்ட்டிலேயே இல்லாத சர்ப்ரைஸ் நபர் ஒருவர் சென்னை கமிஷனர் பொறுப்புக்கு வரலாம்” என்கிறது கோட்டை வட்டாரம்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

இதற்கிடையே இன்னொரு தகவலும் காக்கிகள் வட்டத்தில் உலா வருகிறது. ``உளவுத்துறை ஏடிஜிபி பொறுப்பை ஏ.கே.விஸ்வநாதன் மறுத்துவிட்டால், எனக்குத் தாருங்கள். 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வை ஜெயிக்கவைப்பது என் பணி” என தன் பெயரிலேயே சவுகார்பேட்டை ஏரியாவை ஒளித்துவைத்திருக்கும் சர்ச்சை அதிகாரி சல்யூட் வைத்தாராம். ``இதே டயலாக்கதானே 2011 தேர்தலப்போ எதிர்தரப்புகிட்டயும் சொன்னீங்க. அவங்க ரிசல்ட்டு கவுந்துடுச்சுல. நீங்க கிளம்புங்க சாமி” எனக் கும்பிடாத குறையாக ஆட்சித் தலைமை அனுப்பிவிட்டதாம். சொல்லிச் சிரிக்கிறது டிஜிபி அலுவலகம்.

பதவியைப் பிடிக்க அதிகாரிகளிடையே ஆடுபுலி ஆட்டம் தொடங்கிவிட்டது. அடுத்த மாதம், எந்தக் காய் கட்டத்தை அடைந்தது... எந்தக் காய் வெட்டப்பட்டது என்பது தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு