Published:Updated:

``அந்த 100 பேருக்கு நன்றி... அந்த 20 பேருக்கு தேங்க்ஸ்!’’ - பா.ஜ.க-வில் இணைந்த ராதாரவி

அ.தி.மு.க-விலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்துள்ள ராதாரவி, `இந்த முடிவுக்காக பலர் என்னை வாழ்த்துவார்கள்; சிலர் திட்டவும் செய்வார்கள்' என்று கூறியுள்ளார்.

ராதாரவி
ராதாரவி

தமிழக அரசியலில், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பேசுபவர்களில் முக்கியமானவர் நடிகர் ராதாரவி. இன்று காலை சென்னை வந்த பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

ராதாரவி
ராதாரவி

கட்சி விட்டு கட்சி தாவுவது அரசியலுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் ஒரே வருடத்துக்குள்ளாகவே தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க என அடுத்தடுத்து 3 கட்சிகளுக்கு நடிகர் ராதாரவி தாவியிருப்பது அரசியல் வட்டாரத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்கள் மத்தியிலும் பலத்த விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

2019-ம் ஆண்டு மார்ச் மாதம் தி.மு.க-வில் அங்கம் வகித்துவந்த நடிகர் ராதாரவி, `கொலையுதிர் காலம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, தி.மு.க-விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டார். ஆனாலும் அசராதவர், ``நீங்கள் என்ன என்னை தற்காலிகமாக நீக்குவது.... நானே விலகிக்கொள்கிறேன் என்று கட்சியிலேயே சொல்லிவிட்டேன். ஆனாலும் எனக்கு சின்னதொரு வருத்தம் இருக்கிறது. நீக்குவதற்கு முன் என்னிடமும் ஒரு வார்த்தையை கட்சி கேட்டிருக்கலாம்...'' என்று அதிரடியும் ஆதங்கமுமாகப் பேட்டியளித்தார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

பின்னர் சில மாத இடைவெளியில் எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்த ராதாரவி, ஜூன் மாதத்தில், திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தவர், அவருக்குப் பூங்கொத்து கொடுத்து அ.தி.மு.க-வில் இணைந்துகொண்டார். கூடவே, ``தி.மு.க-வில் இரட்டைத் தலைமை இருப்பதால், அங்கு என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டேன்'' என்று கட்சியில் இணைந்ததற்கு புது விளக்கம் கொடுத்தார். ஆனால், அ.தி.மு.க-வில்தான் அதிகாரபூர்வமாக ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் என இரட்டைத் தலைமைகள் இருக்கின்றன என்பதை அப்போது மறந்துவிட்டார் ராதாரவி.

சொந்தமாக தனித்தீவு... `தனிநாடு' ப்ளான்... மத்திய அரசை அதிரவைத்த நித்தி!

இப்படி அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டாலும் பெரியளவில் கட்சி வேலைகளில் ஈடுபடாமல், அமைதி காத்து வந்தார். இடைப்பட்ட இந்த சில மாதங்களில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தனவோ... திடீரென இன்று காலை பா.ஜ.க செயல்தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு சால்வை போர்த்தி, பா.ஜ.க-வில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளார் ராதாரவி.

ராதாரவி, எடப்பாடி பழனிசாமி
ராதாரவி, எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசியலில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க என மியூசிக்கல் சேர் பாணி அரசியல் நடத்திவரும் நடிகர் ராதாரவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, `திடீரென நீங்கள் பா.ஜ.க-வில் இணையவேண்டிய அவசியம் என்ன...' என்ற கேள்வியை முன்வைத்தோம்....

``திடீர் முடிவெல்லாம் கிடையாது. ரொம்ப நாள்களாகவே சொல்லிக்கொண்டுதானே இருக்கிறேன். `நீங்கள் பா.ஜ.க-வில் சேரப்போகிறீர்களாமே... என்ன காரணம்' என்றெல்லாம் நிறையபேர் ஏற்கெனவே என்னிடம் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனாலும் `நான் ஏன் பா.ஜ.க-வில் இணைந்தேன்' என்பதற்கான காரணங்களை நான் சொல்லவில்லை.

ராதாரவி
ராதாரவி

ஏனெனில், நான் சுயம்புவாக வந்தவன். அதனால் வேறு யாரையும் கேட்டு நான் முடிவுகளை எடுப்பதில்லை. எனக்கு நானே உணர்ந்துதான் இப்படியொரு முடிவை எடுத்துள்ளேன். எனது இந்த முடிவுதான் இறுதியானது. இந்த முடிவுக்காக என்னை 100 பேர் வாழ்த்துவார்கள் என்றால், எப்படியும் ஒரு 20 பேர் திட்டவும் செய்வார்கள்.

பா.ஜ.க குறித்து எனக்கிருந்த சில சந்தேகங்களை எல்லாம், பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டு விளக்கம் பெற்ற பிறகே பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறேன். எல்லா விஷயங்களையும் பற்றி இப்போதே என்னால் சொல்லமுடியாது. ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். வந்ததும் பேசுகிறேன்...'' என்றார் ராதாரவி!