Published:Updated:

`சுஜித் உடலைக் காட்டாதது ஏன்?' - கும்பகோணம் தீ விபத்தைச் சுட்டிக்காட்டிய ராதாகிருஷ்ணன்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் உடல், அரசு கொடுத்த வழிகாட்டுதல்களின்படியே மீட்கப்பட்டது என வருவாய்த்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுஜித் - ராதாகிருஷ்ணன்
சுஜித் - ராதாகிருஷ்ணன்

திருச்சி, மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் தன்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித், நான்கு நாள் தொடர் மீட்புப் போராட்டம் தோல்வியடைந்ததால் நேற்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டான். அவனது இறப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த கேள்விகளுக்குத் தமிழக வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

சுஜித்
சுஜித்

சென்னை எழிலகத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி விளக்கமளித்தார். அப்போது அவரிடம் சுஜித் மீட்புப் பணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``சுஜித் மீட்புப் பணிகளில் நாங்கள் மிகத் தெளிவாக இருந்தோம். அவனது மீட்புப் பணி இப்படி நடந்திருக்கலாம் எனப் பல்வேறு தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.

ஆழ்துளை மீட்பு இயந்திரங்கள் தோல்வி கண்டது ஏன்... சுஜித்தின் நிலை யாருக்கும் வராமல் தடுப்பது எப்படி?

சுஜித்தை மீட்கும் பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர், மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், போலீஸார், தன்னார்வலர்கள், வருவாய் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் என 600 பேர் இணைந்து செயல்பட்டோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாகச் சிறுவன் இறந்துவிட்டான். இறந்தவர்களை எப்படி மீட்க வேண்டும் என்று ஒரு வழிகாட்டுதல் உள்ளது. அதைப் பின்பற்றியே சுஜித்தின் உடலை நாங்கள் வெளியில் எடுத்தோம்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

அதேபோன்று அழுகிய உடலை எப்படி பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும், அதற்கான நடைமுறைகள், கைரேகைகள் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மருத்துவர்கள் மேற்கொண்டனர். களத்திலிருந்த அனைவரும் எப்படியாவது சுஜித்தைப் பத்திரமாக மீட்க வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் போராடினோம். சுஜித் இறப்பு உங்களை விடக் களத்திலிருந்து நேரில் பார்த்த எங்களுக்கு அதிக வேதனையாக இருந்தது.

``என் மகனே கடைசியாக இருக்கட்டும்!’’ - கலங்கும் சுஜித் வில்சனின் தாய் கலாமேரி

ஆனால், சுஜித் மீட்புப் பணியில் அங்கிருந்த களப்பணியாளர்கள் இவ்வளவு கடுமையாக உழைத்தும் விமர்சிக்கப்படுகிறார்கள். கும்பகோணம் தீவிபத்தின் போதும், இறந்த குழந்தைகளை மீட்கும் பணிகளில் நான் இருந்தேன். அப்போது குழந்தைகளின் சடலங்களை வெளிப்படையாகக் காட்டியதற்காக கடும் விமர்சனங்களைச் சந்தித்திருந்தோம். அதன் பிறகுதான், இறந்தவர்களின் உடலை மீட்கும் வழிமுறையை மத்திய அரசு உருவாக்கியது. சுஜித் விஷயத்திலும் அந்த வழிகாட்டுதலையே நாங்கள் பின்பற்றினோம்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

மீட்புப் பணிகள் நடந்த ஒவ்வொரு நொடியும் சுஜித்தின் பெற்றோர் எங்களுடன் இருந்தனர். மீட்புப் பணி குறித்த அனைத்து விவரங்களையும் அவர்களுக்குத் தெரிவித்துக்கொண்டே இருந்தோம். சுஜித்தை மீட்க இந்திய அளவில் உள்ள அனைத்து உயர்தர இயந்திரங்களையும் நாங்கள் பயன்படுத்தினோம். புவியியல் வல்லுநர்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டனர்.

`சுஜித்தின் சடலத்தை மீட்டது எப்படி?' - கலங்கும் புதுக்கோட்டை தீயணைப்பு அலுவலர் செழியன்

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எங்களால் ரன்னிங் கமென்டரி கூறிக்கொண்டிருக்க முடியாது. இதனால்தான் வதந்திகள் பரவி வருகின்றன. மனிதர்களால் முடிந்த அனைத்து முயற்சிகளும் சுஜித் மீட்புப் பணிகளில் முன்னெடுக்கப்பட்டது. அந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு 11 கோடி ரூபாய் செலவானதாகப் பரவி வரும் தகவல்களும் பொய்யானவை. மீட்புப் பணிகளுக்கு ஆகும் செலவுகளை அரசு எப்போதும் பெரிதாக எடுத்துக்கொள்ளாது.

மீட்பு நடவடிக்கைகளுக்கு 11 கோடி ரூபாய் செலவானதாகப் பரவி வரும் தகவல்களும் பொய்யானவை. மீட்புப் பணிகளுக்கு ஆகும் செலவுகளை அரசு எப்போதும் பெரிதாக எடுத்துக்கொள்ளாது.
வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

இதுபோன்ற பொய்யான பல தகவல்கள் வாட்ஸ்அப்பில் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வேண்டும். மக்கள் அதிகாரபூர்வமாக வெளியாகும் தகவல்களை மட்டுமே நம்பவேண்டும். தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூட வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே கோரிக்கை. மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்” என்றார் உறுதியான குரலில்.