Published:Updated:

“ராதாபுரம் நிலை நமக்கும் வந்தால்..?” - திகிலூட்டும் தேர்தல் முடிவுகள்

ராதாபுரம் தொகுதிக்கு மறுவாக்கு எண்ணிக்கை என்கிற உயர் நீதிமன்ற அறிவிப்பு, இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி. இந்திய நாடே இன்று உற்றுப்பார்க்கும் தொகுதியாக மாறியிருக்கிறது. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, அ.தி.மு.க ஆட்சி மீண்டும் தொடர்வது உறுதியானது. ஆனால், ராதாபுரம் தொகுதியின் முடிவுகள் மட்டும் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி இருந்துகொண்டே இருந்தது.

ராதாபுரம் வாக்கு  எண்ணிக்கை
ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை

இறுதியாக, 'அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி' என்ற அறிவிப்பை வெளியிட்டார், தேர்தல் அலுவலர். அன்றைய தேர்தல் முடிவுகளில் மிகக்குறைந்த வாக்குகளில் வெற்றிபெற்ற உறுப்பினர் என்ற பெருமையோடு சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தார், இன்பதுரை. அதேநேரம் தனது வெற்றியைத் திட்டமிட்டுப் பறிக்கவே தபால் ஓட்டுகளில் 262 ஓட்டுகளைச் செல்லாத ஓட்டுகளாக்க அறிவித்துள்ளது என்று நீதிமன்றத்தின் படியேறினார், அப்பாவு. இந்த வழக்கில்தான் மறு எண்ணிக்கை என்ற பரபரப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்தியாவில் எத்தனையோ தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல வழக்குகளுக்குப் பல ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பும் வந்துள்ளன. ஆனால், ராதாபுரம் தொகுதி விவகாரத்தில்தான் உறுப்பினர் பதவியில் இருந்த காலத்திலே மறுவாக்கு எண்ணிக்கை இந்தியாவில் முதல்முறையாக நடந்துள்ளது. அப்பாவு தரப்பில் குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது, தபால் ஓட்டுகளில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கையெழுத்திட்ட வாக்குகளைச் செல்லாத வாக்கு என்று கணக்கில் எடுத்துக்கொண்டதே. அதனால் பதிவாகிய 1,508 தபால் வாக்குகளும் நீதிமன்றப் பதிவாளர் முன்பு எண்ணப்பட்டது. இந்த எண்ணிக்கை முடியும் நேரத்தில், உச்ச நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கையை வெளியிட, 23-ம் தேதி வரை தடை என்று உத்தரவிட்டதால் எண்ணிக்கையின் முடிவு அறிவிக்கப்படவில்லை. அதற்குப் பிறகு, 19, 20, 21 ஆகிய சுற்றுக்களின் வாக்குகளும் எண்ணப்பட்டன. ராதாபுரம் தேர்தல் வழக்கு 2016-ம் ஆண்டு தோல்வியைத் தழுவிய அ.தி.மு.க மற்றும் தி.மு.க உறுப்பினர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 14 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள், நமக்கும் இப்படி ஒரு வாய்ப்பு அமைந்திருக்காதா என்று பெருமூச்சுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்பதுரை
இன்பதுரை

காரணம் இதுதான். 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட திருமாவளவன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முருகுமாறனிடம் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார். செய்யூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆர்.டி அரசு வெற்றிபெற்றது வெறும் 304 ஓட்டு வித்தியாசத்தில்தான். அதேபோல், ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க வேட்பாளர் சுந்தர்ராஜிடம் 493 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றிவேல் வெற்றிபெற்றது, 519 வாக்குகள் வித்தியாசத்தில் தான். திருப்போரூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கோதண்டபாணி வெற்றிபெற்றது 950 வாக்குகளினால். இப்போது, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர், கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் வெற்றிபெற்றது 441ஓட்டுகள் வித்தியாசத்தில்தான். இவர்கள் எல்லாம் ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியவர்கள். இவர்களைத் தவிர தற்போது அமைச்சராக இருக்கும் பாண்டியராஜன், தி.மு.க உறுப்பினர் ரகுபதி, திருநெல்வேலி லெட்சுமணன் உள்ளிட்டவர்களும் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளவர்கள். தமிழக சட்டமன்றத்தில் தற்போது உறுப்பினர்களாக இருப்பவர்களில் 14 பேர், இரண்டாயிரம் வாக்குகளுக்குள்ளே அவர்களது பதவி தப்பியுள்ளது.

அப்பாவு
அப்பாவு

ராதாபுரம் தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை என்கிற உயர் நீதிமன்ற அறிவிப்பு, இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அப்பாவு போன்று தோல்வியடைந்த உறுப்பினர்கள் 'நீதிமன்றத்தில் தொடர் சட்டப் போராட்டத்தை நாமும் நடத்தியிருக்காலமே' என்று இப்போது புலம்புகிறார்களாம். தி.மு.க சட்டத்துறை இணைச்செயலாளர் கண்ணதாசன், “தேர்தல் வழக்குகளில் நீதிமன்றம் உடனடியாக விசாரணை நடத்தியிருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை விசயத்தில் இனி கவனமாக இருக்க வேண்டும். இப்போது மூன்று ஆண்டுகள் கழித்து மறுவாக்கு எண்ணிக்கை என்று உத்தரவிட்டுள்ளது. இதில் தி.மு.க வெற்றிபெற்றால், இதற்கு தீர்வாக என்ன செய்ய முடியும்? 2016-ம் ஆண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மோடி வாழ்த்து சொல்லியிருக்காவிட்டால், இந்த நிலையே வந்திருக்காது” என்கிறார். ஆனால், “இன்பதுரைக்கு எதிராக இந்த முடிவுகள் வராது. காரணம், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கைக்கே அது பங்கமாகிவிடும். எனவே, இன்பதுரையின் பதவிக்கு இப்போது ஆபத்து வராது” என்கிறார்கள் அ.தி.மு.க தரப்பினர்.