Published:Updated:

தி.மு.க குறித்த செய்தியை வெளியிட்ட பாகிஸ்தான் அரசு ஊடகம்! தொடரும் சர்ச்சைகள்

விஷ்ணுராஜ் சௌ

மத்திய அரசுக்கு எதிராக, வரும் 22-ம் தேதி (நாளை) டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தை அறிவித்துள்ளது, தி.மு.க.

Arivalayam
Arivalayam ( Vikatan )

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிவந்த 370 மற்றும் 35ஏ ஆகிய இரண்டு சட்டப்பிரிவுகள், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீக்கப்பட்டது.

Stalin
Stalin
Vikatan

அதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்துவருகின்றன.

இது ஒருபுறமிருக்க, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ததற்கு எதிராகவும், காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்கக்கோரியும், மத்திய அரசுக்கு எதிராக, வரும் 22-ம் தேதி (நாளை) டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தை அறிவித்துள்ளது, தி.மு.க.

Stalin
Stalin

இதுதொடர்பாக தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில், " 'அமைதி திரும்புகிறது' என்ற பெயரில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளின்மூலம் செய்தி பரப்பிக்கொண்டே, கடந்த 05.08.2019 முதல் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைதுசெய்து தொலைத் தொடர்புகளைத் துண்டித்து, காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையைச் செயல்படுத்திக்கொண்டிருப்பதற்கு தி.மு.க கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஒரு தனிப்பட்ட கட்சியின் கொள்கையை கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்றத் துடித்து, இப்போது காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்கிவிட்டது பி.ஜே.பி. மேலும், கைதுசெய்யப்பட்ட அனைத்து தலைவர்களையும் விடுதலை செய்யக்கோரி, வருகிற 22.08.2019 அன்று காலை 11 மணியளவில், ஜந்தர் மந்தரில் ஜனநாயகத்தின் நம்பிக்கைகொண்ட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என அதில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசு வானொலி நிலையம், "காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, 2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவின் அடிப்படையில், மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க போராட்டத்தை அறிவித்துள்ளது” எனத் தன் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதுகுறித்து பி.ஜே.பி-யின் தேசிய செயற்குழுச் செயலாளரான ஆசீர்வாதம் ஆச்சாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தான் அரசு ஊடகம், தி.மு.க-வின் செய்திகளை எவ்வாறு வெளியிட்டுவருகிறது? தி.மு.க அல்லது ஸ்டாலின், தங்களின் ஊடகங்களுக்கான செய்தி வெளியீட்டை பாகிஸ்தான் ஊடகங்களுக்கும் அனுப்பிவருகின்றனவா என்பதை ஆராய வேண்டும்.

ஒருவேளை, அவை உண்மை எனும் பட்சத்தில், ஸ்டாலின்மீது உபா (UAPA) சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, உடனடியாக என்.ஐ.ஏ-வால் கைதுசெய்யப்பட வேண்டும். அதேபோல், இந்தியத் தேர்தல் ஆணையமும் தி.மு.க-வை தடை செய்ய வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "ஆச்சாரியின் இந்தக் கருத்துக்கு அடிப்படை அறிவுகூட இல்லை என்பதுதான் அர்த்தம். பாகிஸ்தானுக்கு நாங்கள் அனுப்பித்தான் செய்திகள் அங்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இவர்களேகூட இந்தச் செய்தியை அங்கு அனுப்பியிருக்கலாம்.

R.S.Bharathy
R.S.Bharathy

நாங்கள் எதையும் தெளிவாகச் செய்யக்கூடியவர்கள். எந்தப் போராட்டமாக இருந்தாலும் சரி, ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தாலும் சரி, அனைத்தையும் வெளிப்படையாக ஊடகங்களிடம் அறிவித்துதான் நடத்துவோம். அடிப்படை அரசியலே தெரியாதவர்தான் இதுமாதிரியான கருத்துகளைத் தெரிவிப்பார்கள்“ என்றார்.

பி.ஜே.பி-யைச் சார்ந்த நாராயணன் திருப்பதி, “தி.மு.க-வைப் பொறுத்தவரை, சமீபத்தில்கூட அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், 'காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்ததில்லை' எனக் கூறியுள்ளார். இதுகுறித்து பலமுறை நான் உட்பட, பி.ஜே.பி-யினர் பலர் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்தும், அவர் இதுவரை தி.மு.க-வின் நிலைப்பாட்டைச் சொல்லவில்லை. காஷ்மீர் விவகாரத்தில், தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை தி.மு.க எடுத்திருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. பாகிஸ்தான் வானொலியைப் பொறுத்தவரை, எப்படி செய்தியை வெளியிட்டார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Narayanan Tirupathi
Narayanan Tirupathi

நமது உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவது தவறு. அதேவேளை, பாகிஸ்தான் வானொலி வெளியிட்டதை தி.மு.க-வினர் பெருமையாகப் பேசிக்கொள்வதைப் பார்த்தால், இவர்களே இந்தச் செய்தியை அனுப்பியிருப்பார்களோ என்றுகூட சந்தேகம் எழுகிறது. ஆனாலும், அப்படி இருக்கக் கூடாது என நாம் எண்ணுகிறோம். அதேவேளை, தேசவிரோதச் செயல்களில் தி.மு.க ஈடுபடுமானால், அதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. ஒரு தெளிவான நிலைப்பாட்டை ஸ்டாலின் எடுக்க வேண்டும்" என்றார்.