Published:Updated:

முடக்கப்படும் போர்க்குரல்கள்... அடுத்த குறி ரகுராம் ராஜன்?

ரகுராம் ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
ரகுராம் ராஜன்

இந்தியாவின் நிதிநிலை, தொடர்ந்து சரிவைச் சந்தித்துவருகிறது. இது புதிதல்ல! சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, இந்திய அரசின் கையிருப்பில் இருந்த தங்கம் வெளிநாடுகளில் அடகுவைக்கப்பட்டது.

முடக்கப்படும் போர்க்குரல்கள்... அடுத்த குறி ரகுராம் ராஜன்?

இந்தியாவின் நிதிநிலை, தொடர்ந்து சரிவைச் சந்தித்துவருகிறது. இது புதிதல்ல! சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, இந்திய அரசின் கையிருப்பில் இருந்த தங்கம் வெளிநாடுகளில் அடகுவைக்கப்பட்டது.

Published:Updated:
ரகுராம் ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
ரகுராம் ராஜன்

மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்திலும் இந்தியாவின் நிதிநிலை ஆட்டம் கண்டது. அப்போதெல்லாம் உடனடியாக சரிவை சரிசெய்ய முயற்சி எடுக்கப்பட்டதாகவும், தற்போது அதுமாதிரியான ஆக்கபூர்வமான முயற்சிகளை மத்திய அரசு எடுக்கவில்லை என்றும் குரல்கள் கேட்கின்றன. இந்தக் குரல்களில் முக்கியமானது, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுடையது.

மத்திய அரசையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அவர் வெளுத்துவாங்குவது, பா.ஜ.க தலைமைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி யுள்ளது.

நிர்மலா சீதாராமன் பொங்கியெழுந்து, ‘‘இந்தியப் பொருளாதாரத்தின் இந்த நிலைக்கு, முந்தைய காங்கிரஸ் அரசும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர்களாக இருந்தவர்களும்தான் காரணம். காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக மன்மோகன் சிங்கும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜனும் இருந்தபோது கொடுக்கப்பட்ட கடன்கள்தான் பொதுத்துறை வங்கிகளின் மோசமான நிலைக்குக் காரணம்’’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

முடக்கப்படும் போர்க்குரல்கள்...  அடுத்த குறி ரகுராம் ராஜன்?

‘`ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, 2011-2012ம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன்தொகை 9,190 கோடி ரூபாயாக இருந்தது. 2013-2014 காலகட்டத்தில் 2.16 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. அதன் பிறகே அதாவது 2014 மே மாதத்தில்தான் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது’’ என்று சொல்லியிருக்கும் நிர்மலா சீதாராமன், ‘‘ரகுராம் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் வருத்தப்படுவார்’’ என்றும் எச்சரிக்கை மணியும் அடித்திருக்கிறார்.

அக்டோபர் 9-ம் தேதி, அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பேசிய ரகுராம் ராஜன், ‘‘பொருளாதாரத்தில் மோடி அரசு சிறப்பாகச் செயல்படவில்லை. நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை அடைவதில் மோடி அரசுக்குத் தெளிவான பார்வை இல்லை. இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல், மாநில அரசுகளின்மீது அதிகாரம் செலுத்தும்விதத்தில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் மத்தியில் குவிக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியப் பொருளாதாரம் ஜூன் 2019 வரையிலான முதலாவது காலாண்டில் ஐந்து சதவிகித வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இது மிகக்குறைவு. 2019-2020 முழு ஆண்டுக்கு 6.1 சதவிகிதம் மட்டுமே பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று ரிசர்வ் வங்கியால் கூறப்பட்டு வருகிறது. தற்போது வளர்ச்சி என்பது அனைத்து துறைகளிலும் தரைதட்டியுள்ளது. நிதிப் பற்றாக்குறை வேகமெடுத்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக, பல சிறுதொழில்கள் மூடப்பட்டுள்ளன. பணப்புழக்கம் தடைப்பட்டுள்ளது. 2017 ஜூலையில் கொண்டுவந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி), இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பை ஒடித்துவிட்டது. இந்த இரு நடவடிக்கைகளும் எந்தவித யோசனையும் இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவு’’ என்று பி.ஜே.பி அரசைப் பிரித்து மேய்ந்திருந்தார்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

வங்கிகள் இணைப்பை மிகக்கடுமையாக விமர்சித்ததுடன், தேர்தலுக்காக வெங்காய ஏற்றுமதியைத் தடைசெய்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ரகுராம் ராஜனின் கருத்துகள் மத்திய அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதால், `அவரின் வாயை அடக்க வேண்டும்’ என்று மோடியின் பக்தர்கள் சீறிவருகின்றனர். `நாட்டின் பொருளாதார நிலை பற்றி கடுமையான கருத்துகளைப் பேசியும் எழுதியும் வந்த முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை சிறைக்குள் முடக்கியதுபோல, ரகுராம் ராஜனையும் முடக்க வேண்டும்’ என, பி.ஜே.பி வட்டாரத்தில் கோரிக்கைகள் எழத் தொடங்கியுள்ளன.

இதன் அடிப்படையில் ரகுராம் ராஜனுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. ‘அவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தபோது பெருமுதலாளிகளுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் பணம் தரப்பட்டுள்ளது. போலி பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கும் அப்போது நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்துக்கும் தொடர்பு இருக்கலாம்’ என்ற விதத்தில் ஆளும் தரப்பு தோண்டித்துருவுகிறது.

‘வங்கிகளிலிருந்து பெருநிறுவனங்களுக்கு எப்படி பணம் வாரிக் கொடுக்கப்பட்டது, யாருடைய பரிந்துரையின்பேரில் இது நடைபெற்றது போன்ற விவரங்களைப் பெற்று ரகுராம் ராஜனை வளைக்க வேண்டும்’ என பி.ஜே.பி தலைவர்கள், பேச்சாளர்கள் குரல்கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அதேசமயம், ‘சரிந்துவரும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தாமல் விமர்சகர்கள்மீது நடவடிக்கை எடுக்கப் பாய்வது சரியில்லை’ என்ற எதிர்க்குரலும் கட்சிக்குள்ளேயே எழுந்திருக்கிறது.

இனிவரும் நாள்களில் நிலவும் பொருளாதார வளர்ச்சி மற்றும் விமர்சனங்களில் அடிப்படையில் எதுவும் நடக்கலாம். ஒருவேளை பொருளாதார நிலை இன்னும் மோசமாகும் பட்சத்தில் ரகுராம் ராஜன் போன்றோர் இன்னும் கடுமையாக தங்கள் கருத்துகளை முன்வைக்கவே வாய்ப்புகள் அதிகம். அதுவரையிலும் அவர்களை பா.ஜ.க அரசு விட்டுவைக்குமா என்பது கேள்விக்குறியே!

- மாயா